\
TORCH
TORCH ANI

கர்ப்ப காலத்தில் ஏற்படும் தொற்றுகள்.. குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்குமா? ஆய்வு சொல்வது என்ன?

பிறவியிலேயே ஏற்படும் தொற்றுகள், குழந்தைகளின் எதிர்கால நரம்பியல் மற்றும் அறிவுசார் வளர்ச்சியுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று புதிய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
Published on: 
Summary

கர்ப்ப காலத்தில் தாயிடம் இருந்து கருவுக்குப் பரவக்கூடிய TORCH எனப்படும் அரிய தொற்றுகள் குறித்து ஸ்வீடனில் 36 லட்சம் குழந்தைகள் மீது ஆய்வு செய்யப்பட்டது. பிறவியிலேயே இந்தத் தொற்றுகள் இருந்த 975 குழந்தைகளில், பின்னர் Autism மற்றும் அறிவுசார் குறைபாடு கண்டறியப்படும் அபாயம் அதிகம் என தெரியவந்தது.

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

கர்ப்ப காலத்தில் ஏற்படும் சில அரிய தொற்றுகள், சில சந்தர்ப்பங்களில் தாயிடம் இருந்து கருவுக்கும் பரவக்கூடும். இத்தகைய பிறவியிலேயே ஏற்படும் தொற்றுகள், குழந்தைகளின் எதிர்கால நரம்பியல் மற்றும் அறிவுசார் வளர்ச்சியுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று புதிய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக, TORCH எனப்படும் சில congenital infections ஏற்பட்ட குழந்தைகளுக்கு, பின்னர் Autism மற்றும் அறிவுசார் குறைபாடு கண்டறியப்படும் வாய்ப்பு அதிகமாக இருந்ததாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. ஆனால், இந்தத் தொற்றுகளே நேரடியாக Autism அல்லது அறிவுசார் குறைபாட்டை ஏற்படுத்துகின்றன என்பதை இந்த ஆய்வு நிரூபிக்கவில்லை. அப்படி இந்த ஆய்வு என்ன சொல்கிறது என்பதைப் பார்க்கலாம்...

PREGNENCY
PREGNENCYREUTERS

TORCH என்பது, கர்ப்ப காலத்தில் தாயிடம் இருந்து கருவுக்குப் பரவக்கூடிய சில தொற்றுகளைக் குறிக்கும் ஒரு தொகுப்புப் பெயர். இதில் Toxoplasmosis, Syphilis, Rubella, Cytomegalovirus (CMV) மற்றும் Herpes Simplex Virus (HSV) உள்ளிட்ட தொற்றுகள் அடங்கும். இவற்றில் சில தொற்றுகள் நஞ்சுக்கொடியைக் கடந்து கருவைப் பாதிக்கக்கூடும்.

இந்நிலையில், ஸ்வீடனில் உள்ள Karolinska Institutet-ஐச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், பிறவியிலேயே TORCH தொற்று இருப்பதாகப் பதிவு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு, பின்னர் Autism, அறிவுசார் குறைபாடு உள்ளிட்ட நரம்பியல் வளர்ச்சி தொடர்பான பாதிப்புகள் ஏற்படுவதற்கும் அந்தத் தொற்றுகளுக்கும் இடையே தொடர்பு உள்ளதா என்பதை ஆய்வு செய்துள்ளனர்.

இதற்காக, 1987 முதல் 2021-ம் ஆண்டு வரை ஸ்வீடனில் பிறந்த 36 லட்சத்து 66 ஆயிரத்து 2 பேரின் மருத்துவம், பிறப்பு, கல்வி உள்ளிட்ட தேசியப் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. இவர்களில் 975 பேருக்கு பிறவியிலேயே TORCH தொற்று இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆய்வில் பங்கேற்றவர்கள் இறப்பு, வெளிநாடு குடிபெயர்வு அல்லது 2023-ம் ஆண்டு டிசம்பர் 31 வரை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர்.

இதில், TORCH தொற்று இருந்தவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையே சில முக்கியமான வேறுபாடுகள் காணப்பட்டன. TORCH தொற்று இருந்தவர்களுக்கு, தொற்று இல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது, பின்னர் Autism கண்டறியப்பட்டதற்கான hazard ratio சுமார் 3.1 ஆக இருந்தது. அதேபோல், அறிவுசார் குறைபாட்டுக்கான hazard ratio சுமார் 7.2 ஆக இருந்தது.

மேலும், Autism உடன் அறிவுசார் குறைபாடும் இருந்தவர்களிடம் இந்தத் தொடர்பு அதிகமாக இருந்தது. Autism மற்றும் அறிவுசார் குறைபாடு இரண்டும் இருந்தவர்களுக்கு hazard ratio சுமார் 6.2 ஆகவும், அறிவுசார் குறைபாடு இல்லாத Autism-க்கு சுமார் 2.0 ஆகவும் இருந்தது.

CHILD AFFECTED
CHILD AFFECTEDREUTERS

அதேநேரத்தில், இந்த TORCH தொற்றுகள் மிகவும் அரிதானவை என்பதும் முக்கியமானது. ஆய்வு செய்யப்பட்ட 36 லட்சத்து 66 ஆயிரத்து 2 பேரில் 975 பேருக்கு மட்டுமே பிறவியிலேயே TORCH தொற்று இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

அப்படியானால், TORCH தொற்றுகள்தான் Autism அல்லது அறிவுசார் குறைபாட்டை நேரடியாக ஏற்படுத்துகின்றன என்று கூறலாமா? அப்படி உறுதியாகக் கூற முடியாது.

இந்த ஆய்வு கூறுவது என்னவென்றால், பிறவியிலேயே ஏற்பட்ட TORCH தொற்றுகளுக்கு பின்னர் Autism மற்றும் அறிவுசார் குறைபாடு போன்ற சில neurodevelopmental outcomes-களுக்கும் இடையே குறிப்பிடத்தக்க தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், இதை “TORCH infection இருந்தால் குழந்தைக்கு Autism ஏற்படும்” என்ற நேரடி முடிவாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

அதேநேரத்தில், இந்தத் தொற்றுகள் அரிதானவை என்பதால், ஆய்வில் அதிகமான hazard ratios காணப்பட்டாலும், ஒட்டுமொத்த மக்கள் தொகையில் Autism அல்லது அறிவுசார் குறைபாடு ஏற்படுவதில் இந்தத் தொற்றுகளின் பங்கு குறைவாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com