குறைவான சத்தம்.. கரகரப்பான குரல்.. நோய்களுக்கான அறிகுறிகள்!
நமது குரலின் தரம், பேசும் விதம் போன்றவை உடலில் மறைந்திருக்கும் பல்வேறு நோய்களை முன்கூட்டியே காட்டும் கருவிகளாகச் செயல்படுகின்றன என்று கூறும் கட்டுரை ஒன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளியாகியிருக்கிறது. இதுகுறித்துப் பார்க்கலாம்.
குரலில் ஏற்படும் மிகச் சிறிய மாற்றங்களைக் கொண்டு பார்க்கின்சன் (Parkinson) நோய், நீரிழிவு, மனச்சோர்வு, புற்றுநோய் போன்றவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரை கூறுகிறது. ரத்தப் பரிசோதனையைவிடக் குறைந்த செலவில், குரல் மாதிரிகளை ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஆய்வு செய்து டிமென்ஷியா என்ற மூப்பு மறதி நோய் போன்ற பாதிப்புகளை மருத்துவர்கள் இப்போது கண்டறிகின்றனர்.
குரல் சொல்லும் அறிகுறிகள் பல என்கிறது ஆய்வு. குறைவான சத்தம் பார்க்கின்சன் நோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். கரகரப்பான குரல் அமிலத் தன்மை அல்லது குரல்வளைப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். தடுமாற்றமான பேச்சு நரம்பு மண்டல பாதிப்புகளைக் குறிக்கலாம். மனச்சோர்வு உள்ளவர்களின் குரல் உணர்ச்சியற்றதாக இருக்கும் என்கிறது ஆய்வு. பெண்களின் மாதவிடாய் சுழற்சி மற்றும் ஹார்மோன் மாற்றங்கள்கூட குரலின் தன்மையை மாற்றும் வல்லமை கொண்டவை என்கிறது ஆய்வு. உங்கள் குரலில் திடீர் மாற்றமோ அல்லது நீண்ட காலக் கரகரப்போ இருந்தால், அதை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகுவது அவசியம் என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கட்டுரை.

