சத்துணவில் முட்டை.. குழந்தைகளுக்கு முட்டை ஏன் அவசியம்? நிபுணர்கள் கூறுவது என்ன?
அண்மையில், சில மாநிலங்களில் பள்ளி மதிய உணவில் இருந்து முட்டை நீக்கப்பட்டு, வெங்காயம், பூண்டு இல்லாத முழு சைவ உணவு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, பள்ளியில் வழங்கப்படும் இந்த முட்டைதான், வாரத்தின் ஒரே புரதச்சத்து ஆதாரமாக விளங்கி வருகிறது. ஆனால், முட்டைக்கு மாற்றாக சோயா, பன்னீர் அல்லது ராஜ்மாவை வழங்கலாமே என்று சிலர் கருத்துத் தெரிவித்து வரும் சூழலில், ஊட்டச்சத்து நிபுணர்கள் அதை மறுக்கின்றனர்.
ஒரு முட்டையில் கிடைக்கும் அதே தரமான புரதம், வைட்டமின் A, D, B12, கோலின் போன்ற மூளை வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்களை, அதே விலையிலோ அல்லது அதே அளவிலோ சைவ உணவுகள் மூலம் தருவது கடினம் எனக் கூறுகின்றனர். உதாரணமாக, ஒரு முட்டையின் சத்தைப் பெற, 40 கிராம் பன்னீர் தேவைப்படும், இது பொருளாதார ரீதியாகவும் சாத்தியமற்றது என்கின்றனர். இந்தியா மட்டுமின்றி ஜப்பான், பின்லாந்து, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற உலக நாடுகளும் தங்களின் பள்ளி உணவுத் திட்டத்தில் முட்டையை முக்கிய அங்கமாக வைத்துள்ளன.
ஏனெனில், முட்டையை எளிதில் சமைக்க முடியும், கலப்படம் செய்ய முடியாது, எல்லாவற்றிற்கும் மேலாக இது மலிவான விலையில் கிடைக்கும் உயர்தர புரதச்சத்து என்பதால், வளரும் குழந்தைகளின் தசை, மூளை வளர்ச்சிக்கு முட்டை அத்தியாவசிய உணவு என்பதை நிபுணர்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

