இந்தியாவிலேயே முதன்முறையாக... தமிழ்நாட்டில் அரசு சார்பில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள்!

தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை மற்றும் மதுரையில் செயற்கை கருத்தரிப்பு மருத்துவமனைகள் அமைக்கப்பட இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மா.சுப்ரமணியன், அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை
மா.சுப்ரமணியன், அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறைபுதிய தலைமுறை

சுமார் 20 வருடங்களுக்கு முன்பு பெரு நகரங்களில் மட்டும் இருந்து வந்த செயற்கை கருத்தரிப்பு மையங்கள் தற்போது பரவலாக அனைத்து நகரங்களிலும் வீதிக்கு வீதி காணப்படுகிறது. வேலைப்பளு, சீரற்ற வாழ்க்கை முறை போன்றவற்றில் அதிகம் எடுத்துக்கொள்ளும் துரித உணவுகள், உடல் பருமன், புகைபிடித்தல், குடிப்பழக்கம் மற்றும் போதைப் பழக்கம் ஆகியவற்றால் உலகமெங்கும் இப்பிரச்னை பிரச்னை அதிகரிக்கிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கருவுறாமை என்பது தம்பதிகளை உணர்வு ரீதியாக மட்டும் அல்லாமல் சமூக ரீதியாகவும் எதிர்மறை சூழலுக்குள் தள்ளுவதால் தம்பதிகள் புறச்சூழல்களால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். உலகம் முழுவதும் 60 முதல் 80 மில்லியன் மக்கள் கருவுறாமையால் பாதிக்கப்படுவதாகவும் அதில் இந்தியாவில் 15 முதல் 20 மில்லியன் மக்கள் கருவுறாமையால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக சுகாதார அமைப்பு அறிக்கையின் படி வளரும் நாடுகளில் 4 தம்பதிகளில் ஒருவர் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய காரணங்களால் மக்கள் செயற்கை கருத்தரிப்பு மையங்களை நாடுகின்றனர். அத்தகைய செயற்கை கருத்தரிப்பு மையங்கள் பொருளாதார ரீதியில் வசதி படைத்த மக்கள் மட்டும் செல்லும் வகையில் அதிக அளவு கட்டணங்களுடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு செயற்கை முறை கருத்தரிப்பு என்பது கேள்விக்குறியே.

இதனால் அரசு இத்தகைய மையங்களை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துவந்தது. அதன்பேரில் தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை எழும்பூரிலும் மதுரையிலும் பரிச்சார்த்த ரீதியாக 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு கருத்தரிப்பு மையங்கள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கடந்த ஆண்டுக்கு முன்பான நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. கருத்தரிப்பு மையங்களை தமிழ்நாட்டில் தனியார் அமைப்புகள் ஏராளமாக நடத்தி வருகிறார்கள். அரசின் சார்பிலும் கருத்தரிப்பு மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துக்கொண்டிருந்தார்கள்.

மகப்பேறு, குழந்தைப்பேறு போன்றவை நல்ல விஷயங்கள் தான் என்றாலும், அதற்காக செலவிடப்பட வேண்டிய தொகை என்பது மக்களது சக்தியை தாண்டிய ஒன்றாக உள்ளது. எனவே அரசின் சார்பில் கருத்தரிப்பு மையங்களை தொடங்கலாம் என நிதிநிலை அறிக்கையில் அறிவித்தோம். அந்தவகையில் சென்னை எழும்பூரிலும் மதுரையிலும் பரிச்சார்த்த ரீதியாக 5 கோடி மதிப்பீட்டில் இரண்டு கருத்தரிப்பு மையங்கள் தொடங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அறிவிக்கப்பட்ட இரண்டு மருத்துவ அமைப்புகளுக்கும் கட்டுமானப்பணிகள் முடிவுற்று அதற்கான பரிசோதனை ஆய்வுகள் எல்லாம் முடிவுறும் தருவாயில் உள்ளது. சென்னைக்கான மருத்துவமனையின் அரசாணை வெளியிடப்பட்டுவிட்டது. விரைவில் மதுரைக்கும் அரசாணை வெளியிடப்பட இருக்கிறது.

ஆய்வுப்பணிகள் முடிந்த உடன் சில பரிசோதனைகளை தொடர்ந்து கருத்தரிப்பு மையங்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் முதன்முறையாக கொண்டுவரப்பட இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை கருத்தரிப்பு மையம் என்று முதன்முறையாக எடுக்கப்படுகிற முயற்சி இதுவாகும்.

Ma. Subramanian
Ma. SubramanianFile Photo

ஆகஸ்ட் இறுதியில் பணிகள் நிறைவுற்று செப்டம்பர் முதல் வாரத்தில் சென்னையிலும் இரண்டாவது வாரத்தில் மதுரையிலும் நேரிடையாக சென்று நாங்கள் துவங்கி வைக்க இருக்கிறோம். இது ஏழை எளிய மக்களுக்கும் நடுத்தர குடும்ப பெண்களுக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும். பல லட்சம் செலவளிக்க வேண்டிய நிலை இருக்காது. இரு இடங்களில் திறக்கப்பட்ட மருத்துவமனைகளின் வெற்றியைப் பொறுத்து பல்வேறு இடங்களில் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் முதலமைச்சரின் வழிகாட்டுதல்களுடன் எதிர்காலங்களில் மேற்கொள்ளப்படும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com