’குழந்தை சோர்ந்து இருந்தால்’.. டெங்கு காய்ச்சலில் இருந்து தற்காப்பது எப்படி?-மருத்துவரின் அறிவுரை

டெங்கு காய்ச்சலில் பலவகை உள்ளது; காய்ச்சல் வந்த குழந்தை சோர்வாக இருந்தால் அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் - மருத்துவர் சபரிநாத் ரவிச்சந்தர் புதிய தலைமுறைக்கு பேட்டி.
டெங்கு காய்ச்சல்
டெங்கு காய்ச்சல் புதிய தலைமுறை

சென்னை அருகே மதுரவாயிலில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நான்கு வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் டெங்கு காய்ச்சல் எப்படி பரவுகிறது? அதனுடைய அறிகுறிகள் என்னென்ன தடுப்பு வழிமுறைகள் குறித்து மருத்துவர் சபரிநாத் ரவிச்சந்தர் புதிய தலைமுறைக்கு இன்று சிறப்பு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், "தற்போது மழைக்காலம் தொடங்கி இருக்கிறது. இந்த காலத்தில் கொசு பரவல் அதிகமாக இருக்கும். ஏ.டி.எஸ். கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. குறிப்பாக காலை நேரங்களில் கடிக்கும் கொசுக்களால் தான் இந்த காய்ச்சல் வேகமாக பரவுகிறது.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நான்கு வயது சிறுவன்
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நான்கு வயது சிறுவன்முகநூல்

டெங்கு என்பது வைரஸ். டெங்கு வைரசில் 1, டெங்கு வைரஸ்-2, டெங்கு வைரஸ்-3 என பல வகை இருக்கிறது. டெங்கு வைரஸ் 2-ஆல் தான் இறப்பு ஏற்படுகிறது.

டெங்கு எப்படி பரவுகிறது?

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவரை கடித்த கொசு மற்றொருவரை கடிப்பதன் மூலமாகவும் இந்த காய்ச்சல் வேகமாக பரவுகிறது. குறிப்பாக 3-5 நாட்களுக்குள் இந்த காய்ச்சல் வருகிறது. கொசு கடித்த ஐந்து நாட்களுக்குப் பிறகுதான் காய்ச்சல் வருகிறது.

டெங்கு காய்ச்சலுக்கான முதல் அறிகுறி காய்ச்சல் தான் இந்த காய்ச்சல் அதிக வெப்பத்துடன் இருக்கும். மிக முக்கியமாக உடல் அசதி அதிகமாக இருக்கும். சில குழந்தைகளுக்கு உருட்டு கட்டையால் அடித்த போல் வலி ஏற்படும். கண்களுக்கு பின்பு வலி இருக்கும். காய்ச்சல், தலைவலி, கண்வலி ஆகியவை அறிகுறிகளாக இருக்கிறது. காய்ச்சல் ஆரம்பத்தில் எந்தவித பிரச்னையும் இருக்காது.

எப்படி பரவுகிறது:
எப்படி பரவுகிறது:முகநூல்

காய்ச்சலுக்கு பிறகு என்ன ஏற்படும்?

இரண்டு நாட்களுக்குப் பிறகு, காய்ச்சல் குறைந்த பிறகு தான் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆனால், அதுதான்‌ மிகவும் முக்கியமான நேரம். இந்த நேரத்தில் பிபி கம்மியாக மாறும்.‌ நுரையீரல், வயிற்றை‌ சுற்றி தண்ணீர் தேங்கி இருக்கும். வயிற்று‌வலி அதிகமாக இருக்கும்.

என்ன செய்ய வேண்டும்?

காய்ச்சல் வந்தவுடன் உடனடியாக மருத்துவமனையை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும். மருத்துவமனை செல்லாமல் சிகிச்சை பெறுவது தவறு. உங்களது ஏரியாவில் ஏற்கனவே டெங்கு காய்ச்சல் பரவல் உள்ளதா என்பதை கண்காணித்து உங்களுக்கு காய்ச்சல் வந்ததை உணர்ந்து கொள்ளலாம். மழைக்காலத்தில் காய்ச்சல் வந்தால் அது டெங்கு காய்ச்சலாக தான் இருக்கும். கண்ணுக்கு பின்னால் உள்ள வலி, சொறி, தலைவலி, வாந்தி-மயக்கம் ஆகியவை முக்கியம்.

குழந்தைகளை பொறுத்தமட்டில் அவர்களால் தங்களது அறிகுறிகளை முழுமையாக வெளியே சொல்ல முடியாது. பெற்றோர்கள் குழந்தைகளை முழுமையாக கண்காணிக்க வேண்டும். நல்ல தண்ணீர் மூலம் இந்த கொசு உற்பத்தியாவதால் வீட்டில் இருக்கும் அனைத்து பாத்திரங்களையும் மூடி வைக்க வேண்டும். காய்ச்சல் வந்த குழந்தை சோர்வாக இருந்தால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

அரசின் வழிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com