திண்டுக்கல்: கருப்பு பூஞ்சை நோயுடன் போராடி மீண்ட 80 வயது மூதாட்டி

திண்டுக்கல்: கருப்பு பூஞ்சை நோயுடன் போராடி மீண்ட 80 வயது மூதாட்டி
திண்டுக்கல்: கருப்பு பூஞ்சை நோயுடன் போராடி மீண்ட 80 வயது மூதாட்டி

கருப்பு பூஞ்சை நோயிலிருந்து மீண்டிருக்கும் திண்டுக்கல்லை சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவர், தன் உயிரை காப்பாற்றிய மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை மருத்துவர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் சூசைப்பட்டியை சேர்ந்த 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி, சாந்தாயி. இவர் தனது மருமகள் லீலாவுடன் வசித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் கொரானா இரண்டாம் அலை தீவிரமாக பரவியபோது, இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. பாதிப்பு உறுதியானவுடன், திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஆறு நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார் அவர். அடுத்த 4 நாட்களில் சிகிச்சை நிறைவடைந்து நலமுடன் வீடு திரும்பியிருக்கிறார், மூதாட்டி சாந்தா. ஆனால் வீடு திரும்பிய அவருக்கு, அதன்பின்னர் கண் பார்வை மங்கத்தொடங்கியதோடு, கண் வலி மற்றும் கண் பகுதியில் தீடீரென வீக்கம் போன்றவை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மீண்டும் அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில், மூதாட்டி சாந்தாயிக்கு கருப்பு பூஞ்சை உறுதிசெய்யப்பட்டிருந்திருக்கிறது.

அதனைத்தொடர்ந்து மூதாட்டியை மதுரையிலுள்ள அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற செல்லுமாறு, தனியார் மருத்துவமனையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கிடையில் தீவிர கருப்பு பூஞ்சை மற்றும் கண் அழுத்தம், கண் வீக்கம் உள்ளிட்டவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட மூதாட்டி சாந்தாயிக்கு கண்ணில் இருந்து தொடர் திரவம் வழிந்து இன்னல் ஏற்படத்தொடங்கியுள்ளது. இதனால் மிக தீவிர பாதிப்புடன் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு தீவிர பிரிவில் சேர்ந்துள்ளார் மூதாட்டி. அங்கு அம்மருத்துவமனையை சேர்ந்த காது - மூக்கு - தொண்டை பிரிவு மருத்துவர்கள், சர்க்கரை, நரம்பியல்துறை, கண் சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தீவிர சிகிச்சை அளித்துள்ளனர்.

சிகிச்சையின் ஒருபகுதியாக, மூதாட்டியின் வலது கண்ணை முழுமையாக ஆக்கிரமித்த கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்த ஆம்போ டெரிசின் ஊசிகள் 6 முறை செலுத்தப்பட்டதாக, அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவக்குழுவினர் குறிப்பிடுகின்றனர். இதுபோன்ற தொடர் சிகிச்சையின் பலனாக, 80 வயது மூதாட்டி சாந்தாயியை அரசு இராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் தற்போது கருப்பு புஞ்சை பாதிப்பிலிருந்து மீட்டுள்ளனர். தன்னை காப்பாற்றிய அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு மூதாட்டி சாந்தாயி மற்றும் அவரது மருமகள் லீலா, இன்று நெகிழ்ச்சி பொங்க நன்றி தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ரத்னவேல் செய்தியாளர்களை சந்தித்தபோது, “மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான நோயாளிகள் கொரோனா மற்றும் கரும்பூஞ்சை நோய் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு, உடனுக்குடன் சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் வீடு திரும்பினர். குறிப்பாக கொரோனா 2ஆம் அலையின் போது கருப்பு பூஞ்சை போன்று மஞ்சள், வெள்ளை பூஞ்சை நோய்களும் கண்டறியப்பட்டு அது உறுதிசெய்யப்பட்ட பலர் சிகிச்சைக்காக எங்களிடம் வந்தனர். சிகிச்சைக்கு வந்தவர்களில் இதுவரை கரும்பூஞ்சை நோயால் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை. அந்தளவுக்கு துரிதமாகவும் வேகமாகவும் சிகிச்சையளித்து வருகிறோம்.

கடந்த மாத (ஜூலை) இறுதி நிலவரப்படி, மதுரை அரசு மருத்துவமனையில் 365 பேர் கரும்பூஞ்சை, வெள்ளை - மஞ்சள் நிற பூஞ்சை போன்ற பல்வேறு பூஞ்சை பாதிப்புகளும் பரிசோதனையில் கண்டறியப்பட்டது. நோய் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 331 பேர் தற்போது குணமடைந்துள்ளனர். இதில் 112 நோயாளிகளுக்கு கண் மூலமாக ஆம்போடெரிசின் மருந்து செலுத்தப்பட்டு குணமடைந்துள்ளனர். இந்த 365 பேரில், 36பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருந்தது. மற்ற நோயாளிகளுக்கு கொரோனா அறிகுறி மட்டுமே கண்டறியப்பட்டது.

கொரோனா இரண்டாம் அலையின் போது கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சை அளிப்பது என்பது சவாலாக இருந்தது. பெரும்பாலும் சர்க்கரை நோய் உள்ளவர்களே கருப்பு பூஞ்சை நோயால் எளிதில் பாதிக்கப்பட்டனர் என்பதால், அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகப்படுத்தினோம். தற்போதைய நிலவரப்படி மதுரை அரசு மருத்துவமனையில் போதுமான ஆம்போடெரிசின் மருந்துகள் இருப்பு உள்ளது என்பதால் சிகிச்சையில் எந்த பின்னடைவும் இல்லை.

கருப்பு பூஞ்சை பாதிக்கப்பட்ட சர்க்கரை நோயாளிக்கு ஒரு கண்ணில் பாதிப்பு குணமடைந்தாலும், அவர்கள் அடுத்தடுத்த நாட்களில் முறையாக உடல் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டால், அதே நோயாளிக்கு மறு கண்ணில் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. ஆகவே இங்கிருந்து சிகிச்சை முடிந்து வெளியேறும் அனைவருக்கும் இதுதொடர்பான அறிவுரையை வழங்கி வருகிறோம். 30வயது முதல் 80வயதினர் வரை கரும்பூஞ்சை பாதிப்பு ஏற்படுகிறது என்பதால், சிகிச்சைக்கு வரும் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். கொரோனா கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்த உதவிய மருத்துவகுழுவினருக்கு என் நன்றி” என தெரிவித்தார்

இச்சந்திப்பின் போது மருத்துவமனையின் அனைத்து துறை தலைவர்கள் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.

- செய்தியாளர்: மணிகண்டபிரபு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com