இந்திய அணியில் வரிசை கட்டும் இளம் வீரர்கள்... நிரந்தர இடம் யார், யாருக்கு? - விரிவான அலசல்
சர்வதேச கிரிக்கெட் களத்தில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்று இந்தியா. சச்சின் டெண்டுல்கரை பார்த்து கிரிக்கெட் விளையாட்டில் சாதிக்க வேண்டுமென்ற கனவுடன் வளர்ந்த பிள்ளைகள், பின்னாளில் அவருடன் இணைந்து களமாடிய கதைகளும் இந்திய கிரிக்கெட் அணியில் நடைபெற்றுள்ளது. சச்சினை போலவே தோனி, யுவராஜ் என பல ஜாம்பவான்கள் விதைத்து சென்ற விதை இன்று விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. அண்மைய நாட்களாக இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் பெரும்பாலான போட்டிகளில் ஆடும் லெவனை மாற்றுவதை ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளதை பார்க்க முடிகிறது. அதுதான் அதற்கு சான்று.
எங்கிருந்து தொடங்கியது இது?
இந்திய அணியின் 2021 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை இதற்கு சிறந்ததொரு உதாரணமாக சொல்லலாம். அதுவும் அந்த தொடரின் காபா டெஸ்ட் போட்டியில் சர்வதேச கிரிக்கெட் களத்தில் அதிகம் விளையாடிய பெரிய அனுபவமில்லாத இந்திய பவுலிங் யூனிட் ஆஸ்திரேலியாவை இரண்டு இன்னிங்ஸிலும் ஆல்-அவுட் செய்திருந்தது. அதுதான் இளம் இந்திய கிரிக்கெட் வீரர்களின் திறன். மாற்றத்தின் தொடக்கப்புள்ளி என்றும் அதை சொல்லலாம். அதன்பிறகு அதுமாதிரியான மேஜிக்கை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்திய அணியின் இளம் வீரர்கள் சர்வதேச களத்தில் நிரூபித்துக் கொண்டே வருகின்றனர்.
இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட், பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல், குர்ணல் பாண்ட்யா, ராகுல் சாஹர், நித்திஷ் ராணா, தீபக் ஹூடா, வெங்கடேஷ் ஐயர், வருண் சக்கரவர்த்தி, தேவ்தத் படிக்கல் என இத்தனை இளம் வீரர்கள் 2021 மற்றும் 2022 (இதுவரை) அறிமுகாகியுள்ளனர். இவர்களை தவிர திறமை வாய்ந்த இளம் வீரர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டுள்ளனர்.
“ஒருபோதும் இந்தியர்களை குறைத்து மதிப்பிடவே மாட்டோம். மொத்தமாக 1.5 பில்லியன் இந்தியர்களில் முதல் 11 பேரிடம் விளையாடுவது கடினம்தான்” என காபா டெஸ்ட் போட்டியில் தோல்விக்கு பிறகு சொல்லியிருந்தார் முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர். அது தான் இப்போது இந்திய அணிக்கு ஹெர்கூலியன் (கடினமான) டாஸ்க்காக அமைந்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக வழக்கமாக விளையாடும் பிரதான ஆடும் லெவன் வீரர்களில் சிலருக்கு காயம், ஓய்வு என பல்வேறு காரணங்களுக்காக ஒரு போட்டியோ அல்லது ஒரு தொடரோ விளையாடாத பட்சத்தில் அவர்களுக்கு மாற்றாக அணியில் இடம் பிடிக்கும் வீரர் அற்புதமாக விளையாடி அசத்தி விடுகிறார். இருந்தும் பிரதான வீரர் அணிக்கு திரும்பியதும் அந்த வீரரை பெஞ்சில் உட்கார செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
தொடக்க வீரர்களின் கூட்டணி, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்கள் என ஒருவர் மாற்றி ஒருவராக அணியின் ஆடும் லெவனில் மாற்றம் நடந்து கொண்டே இருக்கிறது. இப்போதைக்கு இந்திய அணியில் நிலையாக உள்ள ஒரே இடம் என்றால் அது ஆல்-ரவுண்டருக்கான இடம் மட்டுமே. ஆனால் அது கூட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் பார்மெட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். அந்த இடம் இப்போதைக்கு வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் வசமுள்ளது. அசத்தல் ஃபீல்டரான ஜடேஜா மற்றொரு பிரதான ஆல்-ரவுண்டராக அணியில் உள்ளார்.
ரோகித் என்ன சொல்கிறார்?
“ஆடும் லெவனை தெரிவு செய்வது என்பது சவாலான காரியமாக உள்ளது. அதுவும் டி20 கிரிக்கெட்டில் சொல்லவே வேண்டாம். அந்த சவால் மேலும் கூடி விடுகிறது. திறமையான வீரர்களை அணியில் கொண்டிருப்பதை பலமாக கருதுகிறேன். உலகக் கோப்பை என்ற இலக்கை நோக்கி அணியை முன் நகர்த்தி செல்கிறோம். இளம் வீரர்கள் தொய்வில்லாமல் தங்கள் கவனத்தை தொடர்ந்து செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அதை செய்தால் அணிக்காக விளையாட அவர்களுக்கான காலமும், நேரமும் கைகூடி வரும்” என சொல்லி இருந்தார் இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா.
இருந்தாலும் இந்திய அணியில் திறன் படைத்த இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தும் அதனை பயன்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறும் வீரர்களை அணி நிர்வாகம் உடனடியாக டிராப் செய்து விடுவதாக சொல்லப்படுகிறது. அது தொடர்பான விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.
சச்சினுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு!
‘மாஸ்டர் பிளாஸ்டர்’ என கிரிக்கெட் உலகில் போற்றப்படும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் தனது முதல் சதத்தை டெஸ்ட் கிரிக்கெட்டில் பதிவு செய்ய 15 இன்னிங்ஸ் எடுத்துக் கொண்டார். ஒருநாள் போட்டியில் சதம் பதிவு செய்ய 76 இன்னிங்ஸ் எடுத்துக் கொண்டார். அதன்பிறகு அவர் சர்வதேச அணி பவுலர்களின் பந்துவீச்சை விரட்டி விரட்டி பவுண்டரிகளாக வெளுத்து வாங்கியது உலகறிந்த செய்தி. ஆனால் இன்றைய மாடர்ன் டே கிரிக்கெட்டில் இளம் வீரர்களுக்கு அது மாதிரியான வாய்ப்புகள் கொடுப்பதில்லை என்றே சொல்லப்படுகிறது.
இளம் வீரர்கள் ஒரு போட்டியிலோ அல்லது ஒரு தொடரிலோ சரியாக விளையாடவில்லை என்றால் டிராப் செய்யப்படுகிறார்கள். அதற்கு காரணம் டி20 கிரிக்கெட் என்றும் சொல்லி வருகின்றனர். இந்திய அணியின் பேட்ஸ்மேன் ஷ்ரேயஸ் ஐயர், “டி20 கிரிக்கெட்டில் டாட் பால் ஆடுவது ஒரு குற்றம்” என சொல்லியிருந்தார்.
“விளையாட்டில் எல்லா போட்டியிலும் ஒரு வீரனால் முத்திரை பதிக்க முடியாது. அதனால் அணி நிர்வாகம் மற்றும் கேப்டன் மாதிரியானவர்கள் இளம் வீரர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். சிராஜுக்கு கோலி நம்பிக்கை கொடுத்ததை போல இளம் வீரர்களுக்கும் இப்போதைய கேப்டன் நம்பிக்கை கொடுக்க வேண்டும். அதில் ஆவேஷ் கானும் ஒருவர்” என சொல்லியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் பதான்.
ஆடும் லெவனில் இடம் பிடிக்க நிலவும் ஆரோக்கியமான போட்டி!
ரோகித் ஷர்மா, தவான், கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், இஷான் கிஷன், பிருத்வி ஷா, ருதுராஜ் கெய்க்வாட், படிக்கல் என சுமார் 9 வீரர்கள் இந்தியாவுக்காக தொடக்க வீரர்களாக விளையாட உள்ளனர். இதில் இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இடம் பிடித்து வருகின்றனர். இருந்தாலும் இவர்கள் ஆடும் லெவனில் இடம் பிடிப்பது சவாலானதாக உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் கில், தொடக்க வீரராக மட்டுமல்லாது அடுத்தடுத்த பேட்டிங் பொசிஷனில் விளையாட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
விக்கெட் கீப்பரை பொறுத்தவரையில் ரிஷப் பண்ட் ஃபர்ஸ்ட் சாய்ஸ் விக்கெட் கீப்பராக அணியில் உள்ளார். இவர் மூன்று பார்மெட்டுகளிலும் விளையாடி வருகிறார். இஷான் மாற்றம் ராகுலும் சமயங்களில் விக்கெட் கீப்பர் பணியை கவனிக்கின்றனர். வேகப்பந்து வீச்சில் பும்ரா போக மீதமுள்ள வீரர்கள் சுழற்சி முறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.
சுழற்பந்து வீச்சு பிரிவில் சாஹல், ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், வருண் ஆகியோர் மத்தியில் கடுமையான போட்டி உள்ளது. அதே போல மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் ஃபர்ஸ்ட் சாய்ஸாகவும், டெஸ்டில் இனி ஷ்ரேயஸ் விளையாடுவார் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. இருந்தும் ராகுல் பின்வரிசை வீரராக களம் கண்டால் இவர்கள் ஆடும் லெவனில் இடம் பிடிப்பதில் சிக்கல் எழலாம்.
இந்த நிலையில் தான் இந்திய அணி நிர்வாகம் ஒவ்வொரு போட்டியிலும் ஆடும் லெவனை தேர்வு செய்து வருகிறது. வரும் அக்டோபர் - நவம்பர் மாத வாக்கில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கு தரமான அணியை தேர்வு செய்யவே இந்தியா இந்த போக்கை கையாண்டு வருகிறது என நம்புவோம்.

