கோலி, தோனியை மட்டும் நம்பி நாங்க இல்ல ! கொக்கரிக்கும் இளம் இந்திய அணி
இந்தியா, இலங்கை, வங்கதேசம் மோதிய முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வங்கதேசதை வென்று கோப்பையை கையில் ஏந்தியுள்ளது இளம் இந்திய அணி.
இந்தியாவின் கோலி, தென் ஆப்ரிக்கா டிவில்வியர்ஸ், ஆஸ்திரேலியா ஸ்மித், இங்கிலாந்து ரூட், நியூசிலாந்து வில்லியம்சன் இவர்கள்தான் இன்றைய காலக்கட்டத்தில் கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார்கள். நாடுகள் கடந்தும் இவர்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இவர்களுடைய அணி விளையாடினாலும் கூட அவர்கள் ரசிக்கும் பெயர்கள் இல்லை என்றால் அந்த நாட்டு ரசிகர்களிடமே கூட ஆதரவு என்பது சற்று குறைவாக தான் இருக்கும். ஏன் நம்ப ஊரில் கூட சச்சின் ஆட்டமிழந்து விட்டால் டிவியை ‘ஆஃப்’ செய்துவிட்டு ‘போங்கடா யாரு ஜெய்ச்சா என்ன’ என்று போனவர்களை நாமே கண் கூடாக பார்த்தது உண்டு. கிரிக்கெட் என்பது 11 பேரை உள்ளடக்கியது தான் என்றாலும் மக்களின் மனங்களை சிலர் மட்டும் கொள்ளை அடித்து வைத்து இருப்பார்கள். அதற்கு அவர்களின் ட்விட்டர் கணக்குகளே பெரும் உதாரணம்.
இந்தியாவை பொறுத்தவரை கவாஸ்கர், கபில்தேவ் காலம் தொடங்கி சச்சின், கங்குலி என வந்து இப்போது தோனி, கோலி என வந்து நிற்கிறது. அவர்கள் அரங்கத்தில் நுழையும் போது அரங்கமே அதிரும். மக்களின் மனங்களை கொள்ளை அடிப்பதற்கு அவர்கள் சிறப்பாக விளையாடுவது மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. களத்தில் அவர்கள் செயல்படும் விதம், அவர்களின் குணம் இவற்றையெல்லாம் பார்த்து கூட ரசிகர் ஆனவர்கள் இங்கு பலர் உண்டு. அப்படியான ரசிகர்களை இன்றைய காலக் கட்டத்தில் தன்னுடைய ஆக்ரோஷ்மான விளையாட்டால் தன்வசபடுத்தி வைத்து இருப்பவர் கேப்டன் கோலி. சச்சின் சாதனையை யார் முறியடிக்க போவது என்ற கேள்விக்கு தன்னுடைய பேட்டிங் மூலம் பதிலை சொல்லாமல் சொல்லி வருகிறார் கோலி. கிரிக்கெட் உலகில் ஜாம்பவான்களாக பார்க்கபட்டவர்கள் கூட அரை சதத்தில் இருந்து சதமாக மாற்ற சற்று பதற்றபடுவார்கள் ஆனால் கோலி அதை கனகச்சிதமாக செய்து முடிக்கிறார். அதை அண்மையில் கிரிக்கெட்டின் கடவுளாக பார்க்கபடும் சச்சினே ‘கோலிக்கு அரங்கத்தில் நுழைந்தால் சதம் அடித்துவிட்டு வருவது வாடிக்கையாக போச்சு’ என பாரட்டு பத்திரம் வாசித்து இருந்தார். அந்த அளவுக்கு சில ஆண்டுகளாகவே கோலியின் பேட்டிங் சூப்பரோ சூப்பர்.
கோலி இல்லாமல் ஒரு தொடரை முழுமையாக இந்திய அணி அண்மைக் காலங்களில் சந்தித்து இல்லை. சில மாதங்களுக்கு முன் நடந்த தன் திருமணத்திற்காக இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விடுப்பு எடுத்து கொண்டார். ஆனால் அது மூன்று போட்டிக்கு மட்டுமே. இப்போது கோலி ஒரு முழுத் தொடரில் விளையாடாமல் இருந்தும், இந்திய அணி வெற்றி பெற்று அசத்தி இருக்கிறது. கோலி மட்டும் இல்ல நம்ப ‘ தல’ தோனி, பும்ரா, புவனேஸ்குமார், ஹர்திக் பாண்டியா உட்பட முக்கிய வீரர்கள் பெரும்பாலும் யாரும் இல்லை. இலங்கை தொடரில் விளையாடியவர்களில் ரோகித், ரெய்னா, தவான் தவிர பெரிய அனுபவம் பெற்றவர்கள் யாரும் இல்லை. அதுவும் சிலருக்கு இதுதான் முதல் தொடர். அப்படி இருந்தும் முதல் போட்டியை தவிர மற்ற அனைத்து போட்டியிலும் வெற்றிவாகை சூடி உள்ளதைதான் நாம் இங்கு கவனிக்கபட வேண்டி இருக்கிறது.
இந்தத் தொடர் அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களை இனம் கண்டுகொள்ள ஒரு வாய்ப்பாகவும், கிரிக்கெட் என்பது தனி நபர் சார்ந்த விளையாட்டு அல்ல; அது 11 பேருக்குமானதுதான் என்பதை மீண்டும் நிருபிக்கும் வண்ணமும் இருந்தது. சீனியர்கள் இல்லாத இந்தத் தொடரில், தனி நபரை நம்பி மட்டும் இருப்பது என்பது கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல; விளையாட்டுகே அது ஆரோக்கியமானதாக அமையாது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரை பொறுத்தவரை மனீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர் ஆகியோர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாகவே பயன்படுத்திக் கொண்டனர். இன்னும் சொல்லப்போனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு அஷ்வின் இடத்துக்கு இன்னொரு போட்டியாக உருவெடுத்துள்ளார் 17 வயதே ஆன தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர். இந்தத் தொடரின் நாயகனும் இவர்தான். மற்றொரு தமிழக வீரரான விஜய் சங்கர் பொறுத்தவரை அடுத்தடுத்த தொடரில் சிறப்பாக செயல்பட்டால் ஹர்திக் பாண்டியா விளையாடாத போட்டிகளில் களம் காணும் வாய்ப்பை பெறலாம்.
நேற்றைய போட்டியின் வெற்றிக்கு முழுமுதல் காரணம் தமிழகத்தைச் சேர்ந்த ‘தினேஷ் கார்த்திக்’ . தோனி அணிக்கு வருவதற்கு முன்பு இருந்தே அணியில் இருந்தாலும் தனக்கான இடத்தை பெற தொடர்த்து முயற்சித்து வருகிறார். நேற்றைய அவருடைய போட்டியை பார்த்த பிறகு பிசிசிஐயில் இருந்தவர்கள் கூட வருத்தப்பட்டு இருப்பார்கள். இவ்வளவு நாட்கள் இவருக்கு சரியான வாய்ப்பு அளிக்கப்படவில்லையோ என கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஏக்கப்பட்டனர், ஏனென்றால் தினேஷ் கார்த்திக் ஆடியது "ருத்ரதாண்டவம்". விக்கெட் கீப்பரான இவர் தோனி இல்லாத போது சிறந்த மாற்று வீரர் என்பதில் சந்தேகமே இல்லை. டெஸ்ட் போட்டியில் கூட சாஹா-விற்க்கு பதிலாய் முயற்சித்து பார்க்கலாம். எது எப்படியோ இந்தத் தொடரில் இந்திய அணியை பொறுத்தவரை அடுத்த தலைமுறை வீரர்களை இனம் காண வாய்ப்பாக இருந்தது என்றால் மிகையல்ல.
ஆனால், இலங்கை, வங்கதேசம் அணிகள் என்பது இப்போதைக்கு கிரிக்கெட்டில் பெரிய தாக்கத்தை உண்டாக்க கூடிய அணிகளாக இல்லை என்பதை நாம் ஒப்புகொள்ளதான் வேண்டும். அடுத்து வருகிற இங்கிலாந்து, மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் இவர்களின் செயல்பாடுகளை பொறுத்தே அவர்களுக்கான் நிரந்தர இடம் என்பது உறுதியாகும். எது எப்படியாகினும் இளம் வீரர்களோடு மூத்த வீரர்களின் அனுபவமும் சேர்ந்தால்தான் பதற்றமான சூழ்நிலையில் கை கொடுக்கும் என்பதை யாரும் மறுபதற்கு இல்லை ! இதில், தினேஷ் கார்த்திக் அனுபவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.