தமிழ்நாட்டை எதிர்கொள்ள 'பாயும்' எடியூரப்பா: மேகதாது பிரச்னையில் மோடியை சந்திப்பதன் பின்னணி

தமிழ்நாட்டை எதிர்கொள்ள 'பாயும்' எடியூரப்பா: மேகதாது பிரச்னையில் மோடியை சந்திப்பதன் பின்னணி
தமிழ்நாட்டை எதிர்கொள்ள 'பாயும்' எடியூரப்பா: மேகதாது பிரச்னையில் மோடியை சந்திப்பதன் பின்னணி

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை வெள்ளிக்கிழமை சந்திக்கிறார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா. அதேவேளையில், அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டின் அனைத்து கட்சி தலைவர்கள் வெள்ளிக்கிழமை மத்திய நீர்வளத்துறை அமைச்சரை டெல்லியில் சந்திப்பது கவனிக்கத்தக்கது.

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற பகுதியில் அணை அமைக்கும் முயற்சியை கர்நாடக அரசு மிகத் தீவிரமாக கையில் எடுத்து வரும் சூழலில், அணையை எக்காரணத்தைக் கொண்டும் கட்ட அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசும் எதிர்வினையாற்றி வருகிறது.

முன்னதாக, டெல்லி சென்றிருந்த தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து அணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதற்கு அடுத்த சில தினங்களிலேயே கர்நாடகா சென்றிருந்த மத்திய நீர்வளத் துறை அமைச்சரை நேரில் சந்தித்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா, அணை அமைக்க அனுமதி வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இதற்கிடையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களின் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்திய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து மூன்று முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்றி இருந்தார்.

இந்தத் தீர்மானங்களை வெள்ளிக்கிழமை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் நேரில் சந்தித்து தமிழ்நாடு நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி தலைவர்கள் வழங்குகின்றனர்.

இந்தச் சந்திப்பு மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படும் வேளையில், திடீர் பயணமாக டெல்லிக்கு விரைகிறார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா. வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 அளவில் கர்நாடகாவில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்லும் அவர் மாலை 6 மணிக்கு மேல் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து மேகதாது அணைக்கு அனுமதி வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறார்.

மேகதாது அணை விவகாரத்தில் இருக்கக்கூடிய சட்டபூர்வமான பிரச்னைகள் மற்றும் தீர்வுகளை விவாதிப்பதற்காக அம்மாநில சட்ட துறை அமைச்சரும் உடன் செல்கிறார். ஏற்கெனவே கர்நாடகாவில் காவிரி தொழில்நுட்ப குழுவின் அத்தனை அதிகாரிகளும் டெல்லியில் முகாமிட்டு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், அணை அமைப்பதற்கான திட்ட வரைவு, அதற்கான செலவு மத்திய அரசிடம் இருந்து கிடைக்கப் பெறவேண்டிய ஒப்புதல்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பிரதமர் நரேந்திர மோடியிடம் சமர்ப்பித்து, உடனடியாக அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்க திட்டமிட்டுள்ளார்.

இப்படி ஒரே நாளில் மேகதாது தொடர்பான கர்நாடக முதல்வரின் பயணம் மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து கட்சித் தலைவர்களின் பயணம் என இந்த இரண்டு பயணங்களும் இந்த விவகாரத்தில் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

மேகதாதுவில் அணை அமைக்கும் விவகாரத்தில் கர்நாடக மற்றும் தமிழ்நாடு இரண்டு மாநிலங்களுக்கும் நீதி கிடைக்கும் வகையில்தான் மத்திய அரசு செயல்படும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கூறியிருந்த நிலையில், மத்திய அரசு என்ன மாதிரியான நிலைப்பாட்டை எடுக்க போகிறது என்பதுதான் தற்போது தொக்கி நிற்க கூடிய கேள்வி.

மேகதாதுவில் அணை அமைக்க ஏற்கெனவே புதுச்சேரி மாநில அரசும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கக் கூடிய நிலையில் கேரளாவும் அதே முடிவைத்தான் எடுக்கப் போவதாக தகவல்கள் வருகிறது. காவிரியில் உரிமையுள்ள மூன்று மாநிலங்களும் கர்நாடகாவிற்கு எதிராக நியாயமான போர்க்கொடியை எழுப்பியுள்ள நிலையில், அதனை சரிகட்ட கர்நாடக அரசு மத்திய அமைச்சரை சந்திப்பது, பிரதமரை சந்திப்பது, சட்ட ஆலோசனைகளில் ஈடுபடுவது என அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, இந்த விவகாரத்தில் அடுத்த சில வாரங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

- நிரஞ்சன் குமார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com