”1 ரூபாய் மருத்துவம் டூ 108 ஆம்புலன்ஸ்சேவை”ஆந்திராவின் நிஜ பாகுபலி ஒய்.எஸ்.ஆர் நினைவுதினம்

”1 ரூபாய் மருத்துவம் டூ 108 ஆம்புலன்ஸ்சேவை”ஆந்திராவின் நிஜ பாகுபலி ஒய்.எஸ்.ஆர் நினைவுதினம்
”1 ரூபாய் மருத்துவம் டூ 108 ஆம்புலன்ஸ்சேவை”ஆந்திராவின் நிஜ பாகுபலி ஒய்.எஸ்.ஆர் நினைவுதினம்

இந்தியாவிலேயே முதன்முறையாக 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியவரும், ஆந்திர மாநிலத்தின் தற்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தையுமான  ஒ.எஸ் ராஜசேகர ரெட்டியின் நினைவுதினம் இன்று. 

ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியில் முதல்வராக 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்தவர்: போட்டியிட்ட தேர்தல்கள் அனைத்திலும் வெற்றி பெற்ற அரசியல்வாதிகளில் ஒருவர் போன்ற பல்வேறு பெருமைகளைக் கொண்ட ராஜசேகர ரெட்டியின் 11 ஆம் ஆண்டு நினைவுதினம், அவரது தொண்டர்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இவரது நினைவு தினத்தை ஆந்திர மக்கள் மட்டுமல்ல. இந்தியாவே நினைவில் வைத்திருக்கிறது. காரணம், நாட்டையே  உலுக்கிய இறப்புகளில் ராஜசேகர ரெட்டியின் இறப்பும்  ஒன்று. மாநில முதல்வராக இருக்கும்போது விமான விபத்தில் பலியான முதல் முதல்வர் இவர்தான்.  இவருக்கு அடுத்ததாக, 2011 ஆம் ஆண்டு அருணாச்சல பிரதேச மாநில முதல்வர் டோர்ஜி காண்டுவும் விமான விபத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர்தான்.

என்.டி ராமாராவில் தொடங்கி சிரஞ்சீவிக்கள் என  நடிகர்களின் முகங்கள் ஈர்த்துக் கொண்டிருந்த ஆந்திர அரசியலில் உண்மையான மக்கள் சேவைகளாலேயே  மக்களை கவர்ந்திருக்க முடியும் என்று நிரூபித்த ஒரு முகமென்றால், அது ஒ.எஸ் ராஜசேகர ரெட்டியின் முகம்தான்.  விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டம், இரண்டு ரூபாய்க்கு 1 கிலோ அரிசித் திட்டம், ஏழைகளுக்கு சுகாதாரக் காப்பிட்டு திட்டம், 50 க்கும் மேற்பட்ட நீர்பாசன திட்டம், போன்றவற்றை கொண்டுவந்ததால்தான், அந்த முகமும் பெயரும் ஆந்திர அரசியலில் ஆழமாக பதிந்துள்ளது. இவை எல்லாவாற்றையும்விட, நெல் கொள்முதல் விலையை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து தற்கொலை செய்யும் முடிவுகளிலிருந்து விவசாயிகளின் உயிர்களை காத்த முகம் அது. அதனால்தான், 60 ஆண்டுகளுக்கும் மேலான ஆந்திர அரசியலில் விவசாயிகள் மத்தியில் புகழ் பெற்ற முகமாக… முக்கியத் தலைவராக உயர்ந்து நிற்கிறார் ராஜசேகர ரெட்டி. அவர் இறந்தபோது 100 க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டார்கள். அதில், விவசாயிகளும் அடங்குவர்.

ஆந்திர மாநிலம் புலிவெந்துலாவில் 1949 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி பிறந்தார் ஒய்.எஸ் ராஜசேகர ரெட்டி. இவரது தந்தை 1958 ஆம் ஆண்டு முதல் ஒப்பந்த தொழில் செய்ய கர்நாடக மாநிலத்திற்கு செல்லவே, அங்கேயே பள்ளிக்கல்வியையும் மருத்துவக் கல்வியையும் முடித்தார். பின்பு ஆந்திராவுக்கு வந்து பயிற்சி மருத்துவராக பணியைத் துவக்கியவர் பயிற்சி மருத்துவர்கள் சங்கத் தலைவராகவும் உயர்ந்தார். அப்போதே, தனது மருத்துவமனையில் ஒரு ரூபாய்க்கு மருத்துவம் கொடுத்து மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றார். அந்த செல்வாக்கே, அரசியலில் சேர்ந்து மக்கள் சேவையை செய்ய உந்துதல் கொடுத்தது.

1978 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் 29 வயதில் இணைந்தார். கட்சியில் சேர்ந்த உடனேயே இவருக்கு புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததோடு மாநில நல்வாழ்வு மற்றும் கல்வி அமைச்சர் பதவிகளைக் கொடுத்தது காங்கிரஸ் கட்சி. அதற்கடுத்தடுத்து, ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக இரண்டு முறையும், காங்கிரஸ் முதல்வராக இரண்டு முறையும் இருந்துள்ளார் ராஜசேகர ரெட்டி. மேலும், மக்களவை உறுப்பினராக 4 முறையும், சட்டமன்ற உறுப்பினராக 5 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். போட்டியிட்ட தேர்தல்களில் ஒருமுறைகூட தோல்வியடையாததே இவர் மீதான மக்களின் அன்பை புரிந்துகொள்ளலாம்.

‘காங்கிரஸ் முதல்வர்களில் முழுமையாக 5 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்’ என்ற பெருமையும் ராஜசேகர ரெட்டிக்கு உண்டு. அதற்கு, இவரின் கடும் உழைப்புதான், காரணமாக சொல்லப்படுகிறது. 1999 முதல் 2004 ஆம் ஆண்டுவரை எதிர்கட்சியாக செயல்பட்டபோது ஆந்திர மாநிலம் முழுவதும் அவர் சென்ற பாத யாத்திரைதான், 5 ஆண்டுகள் காங்கிரஸ் முதல்வர்கள் முழுமையாக ஆந்திராவில் ஆட்சி செய்ய முடியாத அவல நிலையை மாற்றி அமைத்தது. ஐந்து ஆண்டுகள் முழுமையாக மட்டுமல்ல. அடுத்த நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் ஆட்சியை காங்கிரஸின் ராஜசேகர ரெட்டிக்கே கொடுத்தார்கள் ஆந்திர மக்கள்.

மேலும், இந்தியாவில் முதன் முறையாக 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டு வந்தவர் என்ற பெருமையை இவரையேச் சாரும். 2005 ஆம் ஆண்டு இச்சேவையை ஆந்திராவில் கொண்டு வந்தார். அதற்குப் பிறகுதான், தமிழகத்தில் 2008 ஆம் ஆண்டு 108 ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்பட்டது.

       இவ்வளவு சிறப்புகளுக்கும் உரிய ராஜசேகர ரெட்டி கடந்த 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம்தேதி சித்தூரில் மக்கள் குறைகேட்புக்காக தனி ஹெலிகாப்டரில் பயணம் செய்தார். அப்போது, எதிர்பாராத விதமாக காலநிலை மாற்றத்தால் அவர் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானது.  ஒருநாள் கழித்துதான் செப்டம்பர் 3 ஆம் தேதி கர்நூல் மாவட்ட நல்லமலா காட்டின் ருத்ரகொண்டா குன்றின் மீது விமானம் கண்டுபிடிக்கப்பட்டது. செப்டம்பர் 4 ஆம் தேதி அவர் பிறந்த கடப்பா மாவட்டம் புலிவெந்துலாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

- வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com