தமிழக காவல்துறைக்குள் என்னதான் நடக்கிறது.? அலசும் ரைட்டர்...! - திரைவிமர்சனம்

தமிழக காவல்துறைக்குள் என்னதான் நடக்கிறது.? அலசும் ரைட்டர்...! - திரைவிமர்சனம்

தமிழக காவல்துறைக்குள் என்னதான் நடக்கிறது.? அலசும் ரைட்டர்...! - திரைவிமர்சனம்
Published on

இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள சினிமா ரைட்டர். காவல்துறையில் மண்டிக்கிடக்கும் அதிகாரப் போக்கு மற்றும் சாதிய பாகுபாடுகள் குறித்த விரிவான விசாரணையை மேற்கொண்டுள்ளது இந்த சினிமா.

சமுத்திரக்கனி, ஹரி, இனியா, மகேஸ்வரி, கவிதா பாரதி, போஸ் வெங்கட், ஜி.எம்.சுந்தர் உள்ளிடோர் நடித்திருக்கும் இந்த சினிமாவை இயக்கியிருக்கிறார் பிரான்க்லின் ஜேக்கப். திருச்சி காவல்நிலையமொன்றில் ரைட்டராக பணி செய்யும் சமுத்திரக்கனி காவலர்களுக்கு சங்கம் அமைக்க தொடர்ந்து முயற்சி செய்கிறார். அதனாலேயே அவர் மேலதிகாரிகளின் தாக்குதலுக்கும் அடக்குமுறைகளுக்கும் ஆளாகிறார். காவலர்களுக்கான சங்கம் அமைக்க தீவிரமாக செயல்படும் சமுத்திரக்கனி சென்னைக்கு தூக்கி அடிக்கப்படுகிறார்.

அங்கு போலி வழக்கில் கைது செய்யப்படும் ஹரியும், சமுத்திரக்கனியும் ஒருபுள்ளியில் சந்திக்க வேக மெடுக்கும் திரைக்கதையே ரைட்டர். தேவகுமாராக வரும் ஹரி பி.எச்.டி படிக்கும் மாணவர். தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் அவர் திரட்டும் தகவல்கள் காவல்துறை உயரதிகாரிகளுக்கு நெருக்கடியினைத் தருகிறது. அதன் காரணமாக அப்பாவி இளைஞன் தேவகுமார் கார்னர் செய்யப்பட்டு அவரது வாழ்க்கை வேட்டையாடப்படுகிறது. அவரது கதாபாத்திர வடிவமைப்பும் அவர் தங்கியிருப்பதாக காட்டப்படும் மேன்சன் உள்ளிட்டவற்றின் நிலஅமைப்பும் ஸ்வாதி கொலை வழக்கில் சிக்கி இறந்துபோன ராம்குமாரை நினைவுபடுத்துகிறது. அதனாலேயோ என்னவோ இக்கதாபாத்திரத்திற்கு தேவகுமார் என பெயர் வைத்திருக்கிறார்கள்.

கடைநிலை காவலர்கள் தனது மேலதிகாரிகளின் அதிகார தடித்தனத்தால் தற்கொலை செய்து கொள்வது குறித்தும் இந்த சினிமா வேறொரு கிளையில் நின்று பேசுகிறது. காவல்துறைக்கு இருக்கும் கட்டற்ற அதிகாரம், கடைநிலை காவலர்கள் மீது மேலதிகாரிகள் செலுத்தும் அடக்குமுறை, காவல்துறை பதியும் போலியான வழக்குகள், காவல்துறைக்குள் இருக்கும் சாதிய பாகுபாடு அனைத்திலும் முக்கியமாக காவலர்களுக்கு சங்கம் அமைக்க வேண்டும் என்பது குறித்த இயக்குநர் தரப்பு வாதம் என பல கிளைகளில் இந்தக் கதை மிக அழுத்தமான விவாதத்தை முன்னெடுக்கிறது.

பணி ஓய்வு பெறும் வயதில் இருக்கும் சமுத்திரக்கனியின் நடிப்பு மிக அருமை, அந்த வயதுக்கான உடல்மொழி, முகபாவனைகள் என சமுத்திரக்கனி ஒரு நடிகராக அசத்தியிருக்கிறார். சிறந்த நடிகருக்கான விருது பெற அனைத்து தகுதிகளும் தனக்கு உண்டு என ரைட்டர் தங்கராஜாக அவர் நிரூபித்திருக்கிறார். ஜி.எம்.சுந்தர் சார்பட்டா பரம்பரையில் ஸ்கோர் செய்ததைப் போலவே இந்த சினிமாவிலும் மிக நேர்த்தியாக தனது பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். அவரது நடிப்பும் சிறப்பு.

பாதிக்கப்படும் இளைஞனின் ஊர் குறித்த ப்ளாஸ் பேக் காட்சிகளை கொஞ்சம் ட்ரிம் செய்திருக்கலாம். ப்ளாஸ் பேக் காட்சிகளைப் பொறுத்தவரை அதன் நீளம் ரொம்பவே அவசியம். காரணம் மூல காட்சியிலிருந்து ஆடியன்ஸ் மொத்தமாக ப்ளாஸ்பேக் காட்சிகளுக்குள் பயணித்துவிட்டால் மீண்டும் அவர்களை மூல காட்சிகளின் கோர்வைக்குள் கொண்டுவந்து அமரவைப்பது கொஞ்சம் கடினம். அந்த விலகலை ரைட்டரில் உணர முடிகிறது.

காவல்துறையில் பணிபுரியும் இனியா குதிரை ஏற்றத்தில் ஆர்வமுடன் இருக்கிறார். ஹார்ஸ் ரைடராக அவர் விண்ணப்பிக்கிறார். அது வடமாநில மேலதிகாரியால் நிராகரிக்கப்படுகிறது. அதற்கான காரணம் சாதியாக இருப்பதே அவலம். அதனினும் மேலாக ஒன்றை கவனிக்கலாம் மேலதிகாரி இனியாவை அடிக்கும்போது “உன் சாதியில ஆம்பளயவே குதிரை மேல ஏற உடமாட்டேன், நீ ஒரு பொம்பள...” என்கிறார். அதாவது சாதி ஒரு அடுக்கு அடக்குமுறை என்றால் அதற்கு மேல் ஆணாதிக்கம் என்பது அடுத்த நிலை அடக்குமுறையாக இருக்கிறது. இப்படியாக படம் முழுக்க பல்வேறு தரப்பின் நியாயங்களை நியாயமான நிலையில் நின்று விவாதிக்கிறார் இயக்குநர்.

பொதுசமூகத்திற்கு சற்றும் அறிமுகமில்லாத அதிகார வர்க்கம் குறித்த கருப்பு பக்கத்தை நமக்கு அறிமுகம் செய்து புதிய விவாதத்தை உருவாக்கியதில் ரைட்டர் வெல்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com