பாம்புகள் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் ? இன்று உலக பாம்புகள் தினம்

பாம்புகள் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் ? இன்று உலக பாம்புகள் தினம்

பாம்புகள் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் ? இன்று உலக பாம்புகள் தினம்
Published on

பாம்புகளை பாதுகாக்க வேண்டி சர்வதேச அளவில் ஜூலை 16 ஆம் தேதி உலக பாம்புகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. 
எப்படி பாம்புகளை பாதுகாப்பது ? அதுவும் பாம்புகளை பார்த்தவுடனேயே அடித்துக் கொல்லும் இந்தியாவில். பாம்புகள் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் என பார்ப்போம். உயிர்ச் சமநிலையை பேணுவதில் பாம்புகள் மிக முக்கியமானவை. குறிப்பாக நம்மைப் போன்ற விவசாய நாட்டில் எலிகளை கட்டுப்படுத்துவது என்பது, மிகச் சவாலான ஒரு செயல். ஒரு மனிதன் உண்ணும் உணவை ஆறு எலிகள் சேர்ந்து உண்டு அழிப்பதுடன் 20 மடங்கு உணவை வீணடிக்கவும் செய்கின்றன. அதிலும், உணவுதானிய சேமிப்புக் கிடங்குகளில் எலிகளால் வீணாகும் தானியங்களின் அளவு கணக்கற்றது. 

இந்த எலிகளை கட்டுப்படுத்துவதில் மிக மிக முக்கியமான பங்கு பாம்புகளுடையது. பாம்பு என்கிற உருவத்தை பார்த்தவுடன் பயமும் அவற்றை கொல்வதற்கான முயற்சிகளுமே உடனே நடக்கிறது. அத்தனை பாம்புகளும் ஆபத்தான விசமுடையவையா என்றால் அதுவும் இல்லை. உலகளவில் சுமார் 3,500 வகை பாம்புகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இதில் வெறும் 600 வகை பாம்புகளே நஞ்சுள்ளவை. அவற்றிலும் 200 வகையான பாம்புகள் மட்டுமே மனிதர்களை கொல்லும் அளவுக்கு விஷமுள்ளவை. அதுவும் நமது இந்தியாவை பொறுத்தவரை, மனிதர்கள் வாழும் பகுதியை சார்ந்து வாழ்கிற பாம்புகளில், நான்கு வகை பாம்புகளுக்கு மட்டுமே மனிதனைக் கொல்லுமளவு விஷம் உடையவை.

எப்படிப் பாதுகாப்பது ? மனிதர்களிடம் இதுபற்றிய விழிப்புணர்வை உண்டாக்குவதைத் தவிர வேறு வழியே இல்லை. முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். எந்தப் பாம்பும் மனிதர்கள் வரட்டும் கடிக்கலாம் எனக் காத்திருப்பதில்லை. அதன் விஷம் அவற்றிற்கு மிக மிக அவசியமானது மதிப்புள்ளது. விஷத்தினை பயன்படுத்திதான், விஷமுடைய பாம்புகள் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய முடியும். கொஞ்சம் கவனமாக இருந்தாலே பாம்புகளிடமிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். மனிதர்களிடமிருந்து விலகியிருக்கவே பாம்புகள் முயற்சி செய்யும். எனக்குண்டான அனுபவத்தை முதலில் பார்ப்போம், "பாம்பென்றால் படையும் நடுங்கும்" எம்மோடு இருக்கும் நண்பருக்கு "பாம்பென்றால் தொடைநடுங்கும்". இப்படி ஒரு பதிவை கடந்த வருடம் செய்திருந்தேன். அவர் எமது நெருங்கிய குடும்ப நண்பர். அதுவும் அவர் சிறந்த வனவியல் புகைப்படதாரர் (Wildlife photographer). 

அப்போது நமது பாம்புகள் பற்றிய ஒரு பதிவை படித்துவிட்டு, எனக்கு போன் செய்து, "அண்ணா உங்கள் பதிவை முழுவதும் படிக்கமுடியவில்லை" பாதி படிக்கும்போதே ஒரு மாதிரி பயமாகிவிட்டது. எனக்கு பாம்பென்றால் ரொம்ப ரொம்ப பயம் என்றவர், ஆகட்டும்  போகலாம் ராஜநாகங்கள் என்கிற கருநாகங்களை பார்த்துவரலாம் என்றபோது வரவே முடியாது என மறுத்தவர். இன்றைக்கு இந்த ஒரு வருடத்தில் பயம் நீங்கி பாம்புகளை மிக விரும்பி புகைப்படம் எடுப்பதோடு, பாம்புகளைப் பற்றி நிறைய அறிந்துக்கொண்டு, பாம்புகள் பற்றி மற்றவர்களிடமும் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இப்போது எப்போ போகலாம் என நச்சரித்து வருகிறார். 

இன்றைக்கு "இதற்கெல்லாம் காரணம் நீங்கதான் அண்ணா" என மாற்றம் குறித்து அவர் வாயால் கேட்கும்போது, இந்த ஒரு நபரிடமாவது மாற்றத்தைக் கொண்டுவந்து விட்ட மகிழ்வும் நிறைவும் எனக்குள் உண்டாகிறது. அவரது படங்களை மட்டுமே இந்தப் பதிவில் பயன்படுத்தியிருக்கிறேன். மாற்றத்தை தமக்குள் ஏற்படுத்தி மற்றவர்களையும் மாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கும் நண்பர் சுந்தர ராமனுக்கு நன்றி!. எனவே பாம்புகள் பற்றி நிறையத் தெரிந்து கொள்ளுங்கள். மற்றவர்களிடம் பேசுங்கள். மாற்றத்தினை கொண்டுவந்து பல்லுயிர்ச் சூழலிற்கு நம்மாலும் பங்காற்றிட முடியும். அடுத்த தலைமுறைக்கு பழுதற்ற பூமியை கொடுப்போம்.

கட்டுரை - ராமமூர்த்தி ராம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com