பார்வையிழப்பை ஏற்படுத்துமா புகையிலை? - ஸ்மோக்கிங்கிற்கு NO சொல்லுங்கள்

பார்வையிழப்பை ஏற்படுத்துமா புகையிலை? - ஸ்மோக்கிங்கிற்கு NO சொல்லுங்கள்
பார்வையிழப்பை ஏற்படுத்துமா புகையிலை? - ஸ்மோக்கிங்கிற்கு NO சொல்லுங்கள்

புகைபிடிப்பதால் புற்றுநோய், இதய பிரச்னைகள், நுரையீரல் பிரச்னைகள் போன்றவை ஏற்படும் என்பது நம் அனைவருக்கும் நன்கு தெரியும். அதுமட்டுமல்லாமல் பார்வையிழப்பை ஏற்படுத்துவதில் புகையிலை முக்கியப்பங்கு வகிக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? புகையிலை பிடிப்பதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மே 31ஆம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட 267 மில்லியன் பேர் புகையிலை பயன்படுத்துபவர்களாக இருக்கின்றனர் என்கிறது Global Adult Tobacco Survey India.

புகைபிடித்தல் கண்ணின் மையப்பார்வையை (macula) கடுமையாக பாதிக்கிறது என்கிறது ஆய்வுகள். புகைப்பிடிப்பவர்களுக்கு வயது தொடர்பான மாகுலர் டிஜெனரேஷன் (AMD) ஏற்படுவதற்கான ஆபத்து புகைப்பிடிக்காதவர்களை விட ஐந்து முதல் ஆறு மடங்கு அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சி கூறுகிறது. AMD என்பது ஒருவரின் மையப்பார்வையை மங்கலாக்கும் ஒரு கண் குறைபாடு. புகைப்பிடித்தல் கண் எரிச்சலை உண்டுபண்ணும். இது அதிகமாகும்போது AMD, கண்புரை மற்றும் கிளௌகோமா போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

மேலும் AMD நோயாளிகள் புகைபிடிப்பதால் விழித்திரையில் ஆக்ஸிஜனேற்ற சேதம் ஏற்படுவதுடன், மாக்குலாவில் (விழித்திரையின் ஒரு பகுதி) lutein குறைவதால், 10 ஆண்டுகளுக்கு முன்பே பார்வை மங்கலடையும்.

இந்தியாவில் ஏற்படும் உயிரிழப்புகளில் புகையிலை மற்றும் அதனால் ஏற்படும் நோய்களின் பங்கு அதிகம் என்கிறது உலக சுகாதார நிறுவனம். கிட்டத்தட்ட 1.35 மில்லியன் மக்கள் இதனால் இந்தியாவில் உயிரிழப்பதாகக் கூறுகிறது. உலகிலேயே புகையிலை நுகர்வோர் மற்றும் தயாரிப்பாளர் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. விதவிதமான புகையிலை பொருட்கள் மிகக்குறைந்த விலையிலேயே இங்கு கிடைக்கின்றன.

இந்தியாவில் புகையற்ற புகையிலை பயன்பாடும் அதிகளவில் இருக்கிறது. அதாவது கைனி, குட்கா, வெற்றிலை பாக்குடன் புகையிலை போன்ற வடிவங்களில் பயன்பாட்டில் இருக்கிறது. அதேசமயம் பீடி, சிகரெட் மற்றும் ஹூக்கா போன்றவை புகையிலையின் புகைபிடிக்கும் வடிவங்கள். இதுபோன்ற புகையிலை பழக்கங்கள் உடலுக்குள் ஏற்படுத்தும் பாதிப்பை போலவே கண்களிலேயும் அதீத பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் டாக்டர். கணேஷ் பிள்ளை.

புகைப்பிடிப்பதால் கண்களை சுற்றியுள்ள திசுக்கள் சிதைந்து, கண்கள் பார்வை குறைபாடு, கண்களின் கீழ்ப்பகுதியில் வீக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். சில சமயங்களில் இந்த பாதிப்புகள் குணப்படுத்த முடியாமலேகூட போகலாம் என்கிறார் டாக்டர். நிதின் பிரபுதேசாய்.

புகைப்பிடித்தல் நீரிழிவு நோய்க்கு வழிவகுப்பதோடு, ஏற்கெனவே நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு நிலைமையை மோசப்படுத்தும். இருப்பினும், புகைபிடிப்பதால் ஏற்படும் விழித்திரை நோய்கள் சரியான நேரத்தில் கண்டறியப்பட்டால், அதனை முடிந்தவரை சரிசெய்ய முடியும் என்கின்றனர் நிபுணர்கள். ஆனால் முதலில் செய்ய வேண்டியது புகைபிடிப்பதை நிறுத்துவதுதான் என்கின்றனர் அவர்கள்.

பார்வையிழப்பை தடுக்க தொடர் கண் பரிசோதனை அவசியம். மேலும் பச்சைக்கீரைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் வைட்டமின் சி, இ, பீட்டா கரோட்டீன் உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com