டீனேஜ் பருவத்தில் ஏன் இவ்வளவு மன அழுத்தம்?.. ஆசிரியர்கள் இதையெல்லாம் நிச்சயம் செய்யணும்!

டீனேஜ் பருவத்தில் ஏன் இவ்வளவு மன அழுத்தம்?.. ஆசிரியர்கள் இதையெல்லாம் நிச்சயம் செய்யணும்!

டீனேஜ் பருவத்தில் ஏன் இவ்வளவு மன அழுத்தம்?.. ஆசிரியர்கள் இதையெல்லாம் நிச்சயம் செய்யணும்!

உலகளவில் பலகோடி மக்கள் மனநல பிரச்னைகள் மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு, வேலை, குடும்ப பிரச்னைகள், தோல்விகள், உடலநல பிரச்னைகள் போன்ற பலவும் காரணமாகக் கூறப்பட்டாலும், அனைவருக்கும் முறையான வழிகாட்டுதல் மற்றும் சிகிச்சைமுறைகள் கிடைக்கிறதா என்றால் உலகளவில் இல்லை என்றே பதில் வருகிறது. மனநல பிரச்னைகளால் தற்கொலைகளும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது.

ஒட்டுமொத்த உலக நாடுகளிலுள்ள மக்களின் மனநலனை கருத்தில்கொண்டு உலக சுகாதார நிறுவனமும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மனநல பிரச்னையால் தற்கொலைகளை தடுக்க தனியார் மனநல மேம்பாட்டு நிறுவனங்களும், ஒவ்வொரு நாடும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மனநல மேம்பாடு மற்றும் பிரச்னைகளை கையாள்வது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஆண்டுதோறும் அக்டோபர் 10ஆம் தேதி உலக மனநல தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக கடந்த சில வருடங்களாக இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக உலகளவில் பதிவாகும் தற்கொலைகளில் மன அழுத்தம் மற்றும் மனநல பிரச்னைகள் நான்காவது இடத்திலுள்ளது. அதிலும் குறிப்பாக 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களே அதில் அதிகம். இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. கொரோனா பொதுமுடக்கத்துக்கு பிறகு மனநல பிரச்னைகளும் அதனால் இறப்புகளும் அதிகரித்துள்ளன. வீட்டிற்குள்ளேயே இருத்தல், ஒரே இடத்தில் வேலை செய்தல், பொதுவெளியில் தொடர்பில்லாதிருத்தல் போன்றவை பலரின் மன அழுத்தத்திற்கு காரணமாக உள்ளன. இதனால் தங்கள் பணியாளர்களின் மனநலத்தில் பல்வேறு நிறுவனங்கள் அக்கறை காட்டி வருகின்றன.

மனநலம் குறித்த பாடங்களை பள்ளிகளிலேயே கற்றுக்கொடுக்க வேண்டும் என பல்வேறு மாநில மற்றும் நாடுகளின் அரசுகளும் முயற்சிகளை எடுத்துவருகின்றன. குறிப்பாக டீனேஜ் பருவத்தில் ஏற்படும் மன அழுத்தத்தை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரியாமல் பலரும் தவறான முடிவுகளை எடுத்துவிடுகின்றனர்.

டீனேஜ் பருவத்தில் மன அழுத்தம் ஏற்படுவது ஏன்?

டீனேஜ் பிள்ளைகள் சமூகம் தன்னை என்னவாக பார்க்கும் என்ற எண்ணத்தை அதிகமாக தங்களுக்குள் திணித்துக்கொள்வதால் தனக்கு என்ன பிரச்னை என்றே சொல்லாமல் விட்டுவிடுகின்றனர். மாணவர்கள் சமூகத்தைப் பற்றி கவலைப்படாமல் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் தனது பிரச்னைகளை மனம்விட்டு பேசலாம்; பகிர்ந்துகொள்ளலாம். பொதுமுடக்கத்திற்கு பிறகு மனநல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சில மாணவர்கள் தங்கள் பிரச்னைகள் குறித்து தனது ஆசிரியர்களிடம் பகிர்ந்துகொள்வதை சௌகர்யமாக எண்ணுகின்றனர்.

ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும்:

தனது வகுப்பிலுள்ள மாணவர்களை தொடர்ந்து கண்காணிக்கும் ஆசிரியர்களுக்கு தங்கள் மாணவர்களின் நடவடிக்கைகளில் உள்ள மாற்றங்களை புரிந்துகொள்ள முடியும். எனவே ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மனநலத்தை மேம்படுத்துவது, பிரச்னைகளை கையாள்வது போன்றவற்றை குறித்து கற்பிப்பது அவசியம்.

1. வகுப்பறை சௌகர்யம்: வகுப்பறை என்பது மாணவர்கள் வந்து, அமர்ந்து, பாடம் கற்கும் இடமாக மட்டுமே இருக்கக்கூடாது. வகுப்பறையில் ஒருவருடன் ஒருவர் மனம்விட்டு பேசவேண்டும். அதிலும் குறிப்பாக பாடங்கள் பற்றி மட்டுமே பேசவேண்டிய அவசியம் இல்லை என்பதை ஆசிரியர்களும், மாணவர்களும் புரிந்துகொள்ள வேண்டும். மாணவர்கள் தங்கள் உணர்வுகளை ஆசிரியர்களிடம் பகிர்ந்துகொள்ளும்போது பாதுகாப்பாக உணரவேண்டும். மாணவர்கள் மனம்விட்டு பேசும்போது ஆசிரியர்களின் அவர்களின் மனநிலை மற்றும் சூழ்நிலையை புரிந்துகொண்டு பண்பாகவும், பொறுமையுடனும் பதிலளிக்கவேண்டும்.

2. நடத்தையில் மாற்றம் தெரிந்தால் கவனிக்கவேண்டும்: ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் நடத்தைகளை கவனிப்பது அவசியம். அவர்கள் நடத்தையில் ஏதேனும் மாற்றம் தெரிந்தால் உடனடியாக அந்த மாணவனை தனியாக அழைத்து பேசி அவர் பிரச்னையை புரிந்துகொண்டு முறையாக வழிநடத்துவதும் ஆசிரியரின் கடமை.

3. ஆசிரியர்களுக்கு மன நலம் குறித்த வகுப்பு: ஒரு பள்ளியில் ஒரே ஒரு ஆசிரியருக்கு மட்டும் மனநலம் குறித்த கல்வி கற்பிக்கப்படுவது போதாது. அனைத்து ஆசிரியர்களும் மனநலம் குறித்த போதிய விழிப்புணர்வுடனும், கற்பிக்கும் திறனும், மாணவர்களை கையாளும் திறனுடனும் இருப்பது அவசியம்.

4. விழிப்புணர்வை பகிர்தல்: மாணவர்களின் மனநல பிரச்னை மிகவும் மோசமானதாக இருப்பதாக ஆசிரியர் உணர்ந்தால் அடுத்து யாரை அணுகுவது என்பது குறித்து மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். மாணவர்களுக்கு சரியென்றால் பெற்றோரின் துணையை ஆசிரியர்கள் நாடலாம்.

பள்ளியில் ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை எப்போதும் கவனிப்பது அவசியம். அவர்களுடைய பேச்சு மற்றும் செயல்பாடுகளில் மாற்றங்கள் தெரியும்போது அவர்களை பயமுறுத்தவோ, திட்டவோ செய்யாமல் தன்மையாக அவர்களிடம் பேசி பிரச்னைகளை புரிந்துகொண்டு அதனை சரிசெய்ய உதவுவது பதின்பருவ பிள்ளைகளை சரியான வழியில் நடத்த உதவும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com