மாதவிடாய் சுழற்சியில் இந்த மாற்றங்களா?! உடனே மருத்துவரை பாருங்க! #WorldMenopauseDay

மாதவிடாய் சுழற்சியில் இந்த மாற்றங்களா?! உடனே மருத்துவரை பாருங்க! #WorldMenopauseDay
மாதவிடாய் சுழற்சியில் இந்த மாற்றங்களா?! உடனே மருத்துவரை பாருங்க! #WorldMenopauseDay

பதின்ம வயதில் பருவமடைந்த நாளிலிருந்து பெண்களுக்கு மாதந்தோறும் மாதவிடாய் சுழற்சி இருக்கும். இந்த சுழற்சி 40 - 50 வயதில் நின்றுவிடும். அதாவது தொடர்ந்து 12 மாதவிடாய் சுழற்சி நிகழாமல் போகும்போது ஒரு பெண் மெனோபாஸ் நிலையை அடைந்துவிட்டார் என்று அர்த்தம். இருப்பினும் வயது, இனம், மரபியல் மற்றும் மருத்துவ நிலைமைகளை பொருத்து ஒவ்வொருவருக்கும் மெனோபாஸ் நிலையை அடைவது என்பது மாறுபடும். கருப்பையானது கருமுட்டை உற்பத்தியை நிறுத்தி, பெண்களின் பாலியல் ஹார்மோன்களின் சுரப்பு குறையும் நிலையைத்தான் மெனோபாஸ் நிலை என்கின்றனர்.

உடல் மற்றும் மனரீதியான பல்வேறு மாற்றங்களுடன் மெனோபாஸ் தொடர்புடையது. குறிப்பாக ஒரு பெண்ணின் உடல், சமூக மற்றும் உணர்வுகள் நலனுடன் தொடர்புடையது. ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் சுழற்சி முற்றிலுமாக நின்று மெனோபாஸ் நிலையை அடைவதற்கு சில வருடங்களுக்கு முன்பே அவர்களிடம் சில அறிகுறிகள் தெரியும். இந்த அறிகுறிகள் மெனோபாஸ் நிலையை எட்டும்வரையிலோ அல்லது சிலருக்கு வாழ்நாள் முழுதும்கூட இருக்கலாம்.

மெனோபாஸ் அறிகுறிகள்

மெனோபாஸ் அறிகுறிகள் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி குறைப்பு மற்றும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்களைக் குறிக்கிறது. மாதவிடாய் வெளிப்படாமை, நாட்கள் தள்ளிப்போதல் அல்லது முன்கூட்டியே வெளிப்படுதல் போன்று சுழற்சியில் மாற்றம், ரத்தப் போக்கு வெளிப்படுதலின் அளவு குறைதல் அல்லது அதிகரித்தல் போன்ற பொதுவான அறிகுறிகள் தென்படலாம்.

  • திடீரென உடல்முழுவதும் சூடாக இருப்பதைப் போன்ற உணர்வு, குறிப்பாக முக, கழுத்து, மார்பு பகுதிகளில் சூடாகி வியர்த்தல்
  • இரவு நேரங்களில் திடீரென வியர்த்தல்
  • மெனோபாஸ் நிலையிலுள்ள பெண்களுக்கு அடிக்கடி குளிர்ந்த வியர்வையும் வெளிவரும். அதிலும் சிலருக்கு குறிப்பாக உடல் சூடாகி வியர்த்த மறுகணமே குளிர்ந்த வியர்வை வெளிப்படும்.
  • மெனோபாஸ் நிலையை எட்டும் பெண்களுக்கு பிறப்புறுப்பு வறட்சி ஏற்படும். இதனால் உடலுறவு நேரத்தில் அசௌகர்யத்தை உணர்வர்.
  • மெனோபாஸ் நிலையில் சிறுநீர்ப்பை தனது கட்டுப்பாட்டை இழப்பதால் இருமும்போதோ, தும்மும்போதோ அல்லது சிரிக்கும்போதோ சிறுநீரை அடக்கமுடியாத நிலை இருக்கும்.
  • இன்சோம்னியா என்று சொல்லக்கூடிய தூக்கமின்மை பிரச்னைகளை சந்திப்பர்.
  • ஹார்மோன் மாற்றங்களால் உணர்வுகளில் நிலையற்ற தன்மை ஏற்படுவதால், மெனோபாஸ் பெண்களுக்கு அதனை கட்டுப்படுத்துவதே சவாலானதாக மாறுகிறது. எரிச்சல், பதற்றம் மற்றும் மன அழுத்தம் போன்ற உணர்ச்சிகள் அவ்வப்போது மேலோங்கும்.
  • மெனோபாஸ் நிலையை எட்டும் பெண்களுக்கு முடி வறட்சி மற்றும் மெலிந்துபோதல் போன்ற உடல்ரீதியான மாற்றங்களையும் சந்திக்கநேரிடும். சிலர் எடை அதிகரிப்பு, குறிப்பாக வயிற்றுப்பகுதியில் எடை, சதை குறைந்துபோதல், உடல் வலி மற்றும் மூட்டு பிடிப்பு போன்ற பிரச்னைகளை சந்திப்பர்.
  • மெனோபாஸுக்கு முந்தைய நிலை மற்றும் மெனோபாஸின்போது மார்பு பகுதி வீங்குதல் போன்ற பிரச்னைகளும் ஏற்படும்.
  • மாதவிடாய் முன் நோய்க்குறி(PMS) மோசமடையும்

சிலருக்கு கீழ்க்கண்ட அறிகுறிகளும் தென்படலாம்

  • இதயத்துடிப்பு அதிகரித்தல்
  • தலைவலி
  • மூட்டு மற்றும் தசைகளில் வலி
  • பாலியல் உறவில் மாற்றம்
  • கவனச்சிதறல் மற்றும் ஞாபக மறதி
  • உடல் எடை அதிகரிப்பு
  • முடி உதிர்தல் மற்றும் மெலிதல்

இதயத்துடிப்பும் அதிகரிப்பு, சிறுநீர் பிரச்னைகள் போன்றவை மெனோபாஸ் நிலையால்தான் ஏற்படுகிறதா அல்லது வேறு ஏதேனும் பிரச்னைகளின் அறிகுறிகளா என்பதை பரிசோதித்து அறிந்துகொள்வது நல்லது.

எப்போது மருத்துவ சிகிச்சை தேவைப்படும்?

மெனோபாஸ் நிலை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்நாளிலும் இயற்கையாக நிகழ்வது. அதனை தவிர்க்கமுடியாது. ஆனால் அதன் அறிகுறிகள் மற்றும் நிலைகள் மோசமானதாக இருக்கும்பட்சத்தில் மருத்துவரை அணுகலாம். சில நேரங்களில் அறிகுறிகளின் தீவிரத்தை குறைக்க ரத்த பரிசோதனைகள், பாப் ஸ்மியர், அல்ட்ராசவுண்ட் அல்லது மேமோகிராபி போன்ற பரிசோதனைகளை மேற்கொள்வர். கீழ்க்கண்ட சில ப்ரீ மெனோபாஸ் நிலை அல்லது மெனோபாஸ் நிலைக்கு பிறகு சில அறிகுறிகளுக்கு உடனடியாக மருத்துவ ஆலோசனை தேவை.

  • மெனோபாஸ் நிலைக்கு பிறகு பிறப்புறுப்பில் ரத்தம் வழிதல்
  • அதீத அறிகுறிகள்
  • திடீரென அதீத உடல் எடை அதிகரிப்பு
  • மயக்கம்
  • பதற்றம் அதிகரிப்பு

இதுபோன்ற அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் விடக்கூடாது. உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது சிறந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com