‘சாலை விபத்தில் தலைக்காயம் ஏற்பட்டவர்களுக்கு இதையெல்லாம் செய்யவே கூடாது!’ #HealthAlert

‘சாலை விபத்தில் தலைக்காயம் ஏற்பட்டவர்களுக்கு இதையெல்லாம் செய்யவே கூடாது!’ #HealthAlert
‘சாலை விபத்தில் தலைக்காயம் ஏற்பட்டவர்களுக்கு இதையெல்லாம் செய்யவே கூடாது!’ #HealthAlert

இன்று ‘உலக தலைக்காயம் விழிப்புணர்வு தினம்’ கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தில், என்ன மாதிரியான தலைக்காயங்களையெல்லாம் உதாசீனப்படுத்தவேகூடாது, சாலை விபத்துகளில் தலைக்காயம் ஏற்பட்டோருக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பது பற்றி நம்மிடையே விவரிக்கிறார் மூளை மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஹரீஷ்சந்திரா நம்மிடையே பேசினார்.

இந்த தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?

தலைக் காயங்கள் குறித்து அறியும்முன் முதலில், இந்த தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் என்ன, இந்த ஆண்டு இத்தினத்துக்கான மையக்கரு என்ன என்பது பற்றி அறிவோம். பொதுவாக தலையின் எந்த இடத்தில் அடிபட்டாலும் மூளை, மண்டை ஓடு தொடங்கி எங்குவேண்டுமானாலும் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் தலையில் காயம் ஏற்பட்டால் மிக மிக கவனமாக இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். பெரும்பாலான தலைக்காயங்கள் சாலை விபத்துகளாலேயே ஏற்படுகிறது என்பது புள்ளிவிவரங்கள் நமக்கு சொல்லும் தகவல். அப்படியான சாலைவிபத்துகளை தவிர்ப்பது, விபத்து ஏற்பட்டால் தலைக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என அறிவுறுத்துவது, தலைக்காயங்களை ஏன் உதாசீனப்படுத்தக்கூடாது என கூறுவது போன்றவையே இந்நாளின் நோக்கங்கள்.

பெரிய விபத்துகளில் மட்டுமின்றி, பல சமயங்களில் ஏதேனும் சிறு விளையாட்டின் போதோ, குதிக்கும் போதோகூட தலையில் சிறு காயம் ஏற்பட்டு, பின் அது பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுத்துவிடுகிறது. இதையொட்டியே ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20-ம் தேதி "உலக தலை காய விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது, இது தலைக்காயங்களை எப்படி தவிர்ப்பது, தவிர்க்காவிட்டால் ஏற்படும் பிரச்னைகளை குறிப்பிட்டு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஊக்குவிக்கிறது. இந்த ஆண்டு உலக தலை காயம் விழிப்புணர்வு தினம் 2023-ன் மையக்கரு: ‘Safer You and Safer Nation, Your Wellbeing on the Road' என்பதாகும்.

தவிர்க்கக்கூடாத தலை காய அறிகுறிகள்:

ரத்த இழப்பு அதிகம் இருக்கிறது, காதுக்கு பின்னே கருப்பாக ரத்தக்கட்டு போல இருப்பது, கண்களுக்கு கீழே மாற்றங்கள் தெரிவது, தொடர்ந்து வாந்தி வந்துகொண்டே இருப்பது, அடிபட்டு சில மணி நேரத்தில் எப்படி அடிப்பட்டது – என்ன ஆனது என்றே தெரியாமல் இருப்பது போன்றவை உதாசீனப்படுத்தக்கூடாத அறிகுறிகளாகும். இவர்கள் எந்தவித சுய சிகிச்சையும் எடுக்காமல், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.

குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிக மிக கவனமாக..

இந்த அறிகுறிகள் வயதுக்கேற்ப மாறுபடும் என்றபோதிலும், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிக மிக கவனமாக இருக்கவேண்டும். அதிலும் குழந்தைகள் விஷயத்தில் பெற்றோர் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். ஏனெனில், குழந்தைகளுக்கு பேசத்தெரியாது, தங்கள் உணர்வுகளை சொல்லத்தெரியாது என்பதால் பெற்றோர்தான் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். எந்தவொரு மாறுதலையும் உதாசீனப்படுத்தாமல், மருத்துவ ஆலோசனையை பெற்றோர் கட்டாயம் பெறவேண்டும். இதேபோல வயதானவர்கள் விஷயத்திலும் நாம் கவனமாக இருக்கவேண்டும். அதிலும் இதய நோய்களுக்காக மருந்து மாத்திரை உட்கொள்பவர்கள், மிக மிக கவனமாக இருக்கவேண்டும். ஏனெனில் இதய நோய் இருப்பவர்களுக்கு, ரத்தம் மெலிதாக மாத்திரை கொடுக்கப்படும். அப்படியானவர்களுக்கு தலையில் அடிபடும்போது, சிக்கல் அதிகம். ஆகவே அவர்களும் கவனமாக இருக்கவும்” என்றார்.

தலையை அசைக்கக் கூடாது!

அதிக தலைகாயம், சாலைவிபத்தால்தான் ஏற்படுகிறது. ஆகவே சாலைவிபத்து ஏற்பட்டோருக்கு, அதிலும் தலைக்காயம் ஏற்பட்டோருக்கு என்ன முதலுதவிக்கு செய்ய வேண்டும் என்று மருத்துவர் கூறினார். அதன்படி, “சாலைவிபத்தில் தலைக்காயம் ஏற்பட்டால், அவர்களுடைய தலையை பொதுமக்கள் அசைக்கவோ திருப்பவோ முயலக்கூடாது. குறிப்பாக ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டவர்கள் விஷயத்தில் கவனம் தேவை. அவர்களின் ஹெல்மெட்டைகூட மக்கள் கழற்ற முற்படவேண்டாம். ஆம்புலன்ஸ் சேவை வந்தபிறகு அதை பாதுகாப்பான முறையில் அவர்கள் அகற்றுவர். இன்னொரு விஷயம், தலையில் அடிபட்டவர்களை நேராக அமரவைக்ககூடாது. படுக்கவைக்கத்தான் வேண்டும். அப்போதுதான் ரத்த ஓட்டம் சீராகும்.  

இதை குறிப்பிட்டு சொல்ல காரணம், தலையில் அடிபட்டவர்களை அங்கிருப்பவர்கள் முதலுதவி என்ற பெயரில் கூடுதல் சிக்கல்களுக்கு உள்ளாக்கிவிடுவதை காண முடிகிறது. முடிந்தவரை விபத்துக்குள்ளானவர்களை விரைந்து மருத்துவமனையில் சேர்க்கவும், அல்லது ஆம்புலன்ஸ் வரவைக்கவும். மயக்கமின்றி விழித்திருப்பவர்களுக்கு சிபிஆர் போன்றவை வேண்டாம். அதேபோல அவர்களை படுக்கவைக்க வேண்டும், அமரவைக்க வேண்டாம்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com