யானைகளை ஏன் பாதுகாக்க வேண்டும்? யானைகள் அழிந்தால் என்னவாகும்? - விரிவான பார்வை

யானைகளை ஏன் பாதுகாக்க வேண்டும்? யானைகள் அழிந்தால் என்னவாகும்? - விரிவான பார்வை
யானைகளை ஏன் பாதுகாக்க வேண்டும்? யானைகள் அழிந்தால் என்னவாகும்? - விரிவான பார்வை

யானைகளின் வழித்தடம் விளைநிலங்களாகவும், மக்கள் வாழும் பகுதிகளாகவும், ஆக்கிரமிப்புகளாகவும், தொழிற்சாலைகளாகவும், சாலைகளாகவும், பிற கட்டடங்களாகவும் மாறிவிட்டன.

ஆண்டு தோறும் ஆகஸ்ட் 12 -ம் தேதி உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. யானைகளை பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் அமைப்பில் யானைகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் யானைகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலகில் வாழ்ந்த 24 வகை யானைகளில், 22 வகை இனங்கள் அழிந்து தற்போது உலகில் ஆப்பிரிக்க, ஆசிய வகை யானைகள் மட்டுமே உள்ளன. உலகிலேயே அதிக யானைகள் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. ஆசிய யானைகளில் 60% இந்தியாவில் உள்ளது. யானைகளை ஏன் பாதுகாக்க வேண்டும்? யானைகள் அழிந்தால் என்னவாகும்? என்பது குறித்து விவரிக்கிறார் வனஉயிர் ஆர்வலர் சேக் உசேன்.

''ஆப்பிரிக்கா யானைகளுடன் ஒப்பிடுகையில் ஆசிய யானைகள் உருவத்தில் சிறியவை. யானைகள் சராசரியாக 60 வயது வரை வாழும் உயிரினமாகும். பாலூட்டும் இனங்களில் யானை இனம்தான் அதிக கர்ப்பக் காலம் உடையது. 22 மாதங்கள் குட்டியை கருவில் சுமக்கின்றன. யானைகள் எப்போதாவது அரிதாக இரண்டு குட்டிகளை ஈனுகின்றன.  பொதுவாக பெண் யானைகள்  50 வயது வரை கர்ப்பம் தரித்து குட்டியை ஈனுகின்றன. பாலூட்டி இனங்களில் யானைகள் தான் உருவத்தில் பெரியதாகும். யானைகள் அதிக வாசனை நுகரும் திறன் கொண்டது. காற்றில் வரும் வாசனை வைத்து சுற்றுப்புறத்தை  அலசுகின்றன. வேட்டை விலங்குகள் அல்லது வேறு எதாவது ஆபத்தானவை அருகில் இருந்தாலோ பாதுகாப்பு இல்லையென்றால் உடனடியாக கூட்டமாக அந்தபகுதியை விட்டு வெளியேறி பாதுகாப்பான மற்ற பகுதிக்குச்  சென்றுவிடுகின்றன.

யானைகள் தனித்து வாழும் விலங்கல்ல. கூட்டமாக கூடி வாழும் பெரிய விலங்கு. வயதான பெண் யானையின் தலைமையில் கூட்டமாக வாழந்து வருகின்றன. மனிதர்களைப் போலவே யானைகளும் உணர்ச்சிகளை வெளிக்காட்டும் இயல்புடையவை. சந்தோஷமாக இருக்கும் சமயத்திலும் சோகமாக இருக்கும் சமயத்திலும் பிளிறலை வெளிப்படுத்தும். தமது கூட்டத்தைச் சேர்ந்த ஏதாவது ஒரு யானை இறந்து விட்டால் கவலை தோய்ந்த முகத்துடன் கண்ணீர் சிந்தும். ஒரு பெண் யானைக்கு குட்டி பிறந்து விட்டால் அதை அந்தக் கூட்டத்தில் இருக்கும் அத்தனை யானைகளும் பாதுகாக்கும். யானைகள் அபாரமாக நீந்தும் தன்மை கொண்டவை. எத்தனை ஆழமான நீர் பரப்பிலும் தமது தும்பிக்கையை நீருக்கு மேலே நீட்டிக் கொண்டு நீந்தி சென்று விடும்.

மிகக் கூர்மையான கண் பார்வை போலவே மிக அதிகமான மோப்ப சக்தியையும் கொண்டவை யானைகள் ஆகும். 5 கிமீ தூரத்தில் தண்ணீர் இருந்தாலும் அதனை வாசனை மூலம் தெரிந்து கொள்ளும் திறன் கொண்டவை.  கண்ணாடியை பார்த்து தன்னை அடையாளம் கண்டுகொள்ளும் 5 வகையான விலங்குகள் உலகில் வாழ்கின்றன. மனிதர்கள், குரங்குகள், மாக்பை என்ற பறவையினம், டால்ஃபின்  மற்றும் யானைகள். கண்ணாடியை பார்த்து தன்னை அடையாளம் கண்டு கொள்ளும் அறிவுள்ள உயிரினங்களில் ஒன்று யானைகள்.

யானைகள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உணவுக்காக செலவிடுகின்றன. சுமார் 130 முதல் 240 கிலோ வரை உணவு உட்கொள்கின்றன. தேவையான உணவு முழுக்க ஒரு இடத்திலேயே கிடைக்காது என்பதனால், உணவைத் தேடி நெடுந்தூரம் நடந்து செல்லும் இயல்புடையது யானை. சராசரியாக 25 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள காட்டை ஒரு நாளைக்குள் நடந்து கடந்து விடும்.

யானைகள் உண்ட பழங்களின் விதைகள் வயிற்றில் தங்கி, சாணம் வழியாக வெளியே வரும் போது அவை அதிக வீரியம் மிக்க விதைகளாக மாறி அதிகளவில் முளைக்கின்றன. இவை குறிப்பிட்ட பகுதியில் உள்ள மரங்கள் பரவலாக வளர காரணமாகிறது. வனங்களுக்கு உரமாகவும்  பூச்சிகள், வண்டுகளுக்கு உணவாகவும் சாணம் மாறி விடுகிறது. இந்த அடிப்படையில் ஒரு யானை தன் வாழ்நாளில் பல்லாயிரக்கணக்கான மரங்களை உருவாக்குகின்றன. இவ்வளவு பரப்பளவு கொண்ட காடுகளை உருவாக்கியதில் இத்தனை நூற்றாண்டுகளில் யானைகளின் பங்கு அளப்பரியது. யானைகள் தனக்கு மட்டுமின்றி மற்ற வன விலங்குகளின் உணவு தேவையையும் பூர்த்தி செய்து, பல்லுயிர் வளத்துக்கு முக்கிய பங்காற்றுகிறது. யானைகள் இருக்கும் வனப்பகுதி வளமாக இருக்கும்.

யானைகளின் வழித்தடம் விளைநிலங்களாகவும், மக்கள் வாழும் பகுதிகளாகவும், ஆக்கிரமிப்புகளாகவும், தொழிற்சாலைகளாகவும், சாலைகளாகவும், பிற கட்டடங்களாகவும் மாறிவிட்டன. யானைகள் தனது வலசைப் பாதையில் வருவதைத்தான் யானைகள் ஊருக்குள் வந்துவிடுகின்றன, விளைநிலங்களில் புகுந்துவிட்டன என்று தற்போது கூறப்படுகிறது. யானைகள் இருந்தால்தான் மனிதர்களுக்கு அத்தியாவசியமான நீரும்,  தூய்மையான காற்றும் தரும் காடுகள் வளம் பெரும்.  நாடு செழிக்க வேண்டும் என்றால் காடுகள் செழிக்க வேண்டும், காடுகள் செழிக்க வேண்டும் என்றால் அதில் யானைகள் வாழ வேண்டும்'' என்கிறார் அவர்.

யானைகள் தினம் எப்படி வந்தது?

முதன்முதலாக 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி யானைகள் தினம்  கொண்டாடப்பட்டது. அதாவது வில்லியம் சாட்னர் என்பவர் தனியார் வளர்க்கும் யானையை காட்டிற்குள் மீண்டும் கொண்டு விடுவது குறித்த கதை அம்சத்தைக் கருவாக வைத்து Return To The Forest (வனத்திற்குள் திரும்பு) என்ற ஆங்கில குறும்படத்தை எடுத்தார். இந்த படம் 2012 ஆகஸ்ட் 12 இல் வெளியானது. அன்றைய தினம் முதல் 'உலக யானைகள் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க: #பேசாதபேச்செல்லாம் - 6: உடலுறவு மனநிம்மதியை தரும் என்கிறார்களே... அது எந்த அளவுக்கு உண்மை?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com