காந்தி முதல் கலாம் வரை: இந்தியாவின் முக்கிய ஆளுமைகளின் சுயசரிதை புத்தகங்கள்! #worldbookday

உலக புத்தக தினமான இன்று அதிகம் பேசுபொருளான, அதிகம் விற்கப்பட்ட மற்றும் அதிகம் கவனம் ஈர்த்த இந்தியாவின் முக்கிய ஆளுமைகளின் சுயசரிதைகள் சிலவற்றை இங்கே காணலாம்!
books
booksfile image

புத்தகம் எப்போதும் ஓர் ஆச்சர்யம்தான்… அதிலும் கதைசொல்லி புத்தகங்கள், நம்மையும் அதனுடன் அழைத்துச்செல்லும் அற்புத திறன் கொண்டவை. அந்தவகையில், இந்தியாவில் கற்பனைக் கதைகளை மட்டுமன்றி, நிஜவாழ்வையும் பேசிய புத்தகங்கள் பல உள்ளன. உலக புத்தக தினமான இன்று அதிகம் பேசுபொருளான, அதிகம் விற்கப்பட்ட மற்றும் அதிகம் கவனம் ஈர்த்த இந்தியாவின் முக்கிய ஆளுமைகளின் சுயசரிதைகள் சிலவற்றை இங்கே காணலாம்!

சத்திய சோதனை (The Story of my Experiments with Truth)

’இந்தியாவின் தேசப்பிதா’ என்றழைக்கப்படும் மகாத்மா காந்தி, தன் குழந்தைப்பருவ நிகழ்வுகள் தொடங்கிய 1921 வரையான வாழ்வு குறித்து குஜராத்திய மொழியில் எழுதியதுதான் இப்புத்தகம். இந்நூல் ’நவஜீவன் வாரப்’ என்ற பத்திரிகையில் 1925 முதல் 1929 வரை குஜராத்தி மொழியில் காந்தி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும். காந்தியின் உதவியாளராக இருந்த மகாதேவ் தேசாய், இதை 1940-ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். பின், இந்தியாவின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

ஜவஹர்லால் நேரு – ஒரு சுயசரிதை

1936-ல், ஜவஹர்லால் நேரு தனது சுயசரிதையை ‘ஒரு சுயசரிதை’ (An Autobiography) என்ற தலைப்பில் எழுதினார். இதை ‘விடுதலையை நோக்கி’ (Toward Freedom) என்றும் குறிபிடுவர். 1934 – 35 ஆண்டுகளில் நேரு சிறையிலிருந்தபோது இப்புத்தகத்தை எழுதியிருந்தார். இதற்குப் பின்னரே சுதந்திரம் கிடைத்த நிலையில், நாட்டில் முதல் பிரதமரானார் நேரு. இதற்கிடைய சுதந்திர காற்றை சுவாசிக்காமல்போன தன் மனைவி கமலா நேருவுக்கு, தன் சுயசரிதையை அர்ப்பணம் செய்திருந்தார்.

Waiting for Visa – அம்பேத்கர்

1935 – 36-ம் ஆண்டுகளில் இந்திய சட்ட நிபுணர், பொருளாதார நிபுணர், அரசியல்வாதி மற்றும் சமூகச் சீர்திருத்தவாதியான சட்ட மேதை பி.ஆர்.அம்பேத்கர் 20 பக்கங்களே கொண்ட தீண்டாமையினால் தனக்கு நேர்ந்த கொடுமைகளைத் தன் கைகளால் எழுதினார். இந்த நூல் தற்போது கொலம்பியா பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகப் பதவியேற்றவர் பாபாசாகேப் அம்பேத்கர்.

என் சரித்திரம் – உ.வே.சாமிநாத ஐயர்

தமிழ் இலக்கியவாதியும் ஆய்வாளருமான உ.வே.சாமிநாத ஐயர், தன் சுயசரிதையான ’என் சரித்திரம்’ என்ற நூலை, 1950-ல் இயற்றியிருக்கிறார். அதில் 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தஞ்சை மாவட்டத்திலும் கிராமங்களிலும் தனக்கு நடந்தவற்றை அதிகம் குறிப்பிட்டிருக்கிறார்.

Jakhan Choto Chilam - சத்யஜித் ரே

1982-ல் பிரபல திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரே, தனது சுயசரிதையை Jakhan Choto Chilam என்ற பெயரில் இயற்றினார். இதற்கு, ‘என் குழந்தைப் பருவம்’ என்று பொருள். இந்நூலில் அவர், தற்போதைய கொல்கத்தாவில் தன் குழந்தைப் பருவம் எப்படி அமைந்தது என்பது குறித்து பேசியிருக்கிறார்.

எண்டே கதா – கமலா சுராயா

இந்தியாவை சேர்ந்த ஆங்கில கவிஞர் கமலா சுராயா, 1973-ம் ஆண்டு தன் சுயசரிதை நூலை வெளியிட்டார். இந்நூலை எழுதுகையில் உடல்நலக்குறைவால் அவர் படுக்கையில் இருந்ததாகவும், தான் பிழைக்கமாட்டோமென அவர் நினைத்ததாகவும் கூறப்படுகிறது. இருந்தபோதிலும் போராடி மீண்டு வந்து நூலை வெளியிட்டார்.

பாபர் நாமா – பாபர்

16-ம் நூற்றாண்டில் முகல் சாம்ராஜ்ஜியத்தை நிறுவியவரும், இந்திய துணை கண்டத்தின் முதல் முகலாயப் பேரரசருமான முகமது பாபர், ’பாபர்னாமா’ என்ற தன் சுயசரிதையை இயற்றியிருக்கிறார். இதை தன் தாய்மொழியான துருக்கியில் அவர் எழுதியிருக்கிறார். ஆனால், அவர் அந்த நூலை முழுமையாக முடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நூலை பாபரின் மூத்த சகோதரி கன்சாதா பேகம் (c.1478–1545) எழுதி முடித்ததாக சொல்லப்படுகிறது.

பாபர் நாமா என்றால், "பாபரின் புத்தகம்" அல்லது "பாபரின் கடிதங்கள்" என்று பொருள் . பாபரின் வாழ்க்கை வரலாறு என்பதை தாண்டி சமூகம், அரசியல், பொருளாதாரம், வரலாறு, புவியியல் மற்றும் அவரோடு தொடர்புடையவர்கள் ஆகியவற்றைப் பற்றிய பாபரின் நினைவுகள் இப்புத்தகத்தில் அடங்கியுள்ளன.

இஸ்லாமிய இலக்கியத்தின் முதன் சுயசரிதை நூலாக இது பார்க்கப்படுகிறது.

அக்னிச் சிறகுகள் - அப்துல் கலாம்

முன்னாள் இந்தியக் குடியரசுத்தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் சுயசரிதைப் புத்தகம் இது. இப்புத்தகத்தை அப்துல் கலாம் மற்றும் அவர் நண்பர் அருண் திவாரி ஆகியோர் எழுதினர். இப்புத்தகம் ஆங்கிலத்தில் Wings of Fire என்று எழுதப்பட்டது. பின் தமிழில், ’அக்னிச் சிறகுகள்’ என்று வெளியானது. இந்நூலில் அப்துல் கலாம் தன்னுடைய இளமைக் காலம், உயர் படிப்பு, விஞ்ஞானி பணி மற்றும் அதன் கிடைத்த அனுபவங்கள் அனைத்தையும் கூறியிருப்பார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com