”நவீன மருத்துவ வளர்ச்சிக்கு வித்திட்டதே மயக்கவியல் துறைதான்”- 175வது உலக மயக்கவியல் தினம்

”நவீன மருத்துவ வளர்ச்சிக்கு வித்திட்டதே மயக்கவியல் துறைதான்”- 175வது உலக மயக்கவியல் தினம்
”நவீன மருத்துவ வளர்ச்சிக்கு வித்திட்டதே மயக்கவியல் துறைதான்”- 175வது உலக மயக்கவியல் தினம்

இன்றைய தினம் (அக்.16), உலக மயக்கவியல் தினமாக ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது. மயக்கவியல் என்பது, மருத்துவத்துறையில் இன்றியமையாத ஒன்றாகும். காரணம் இத்துறை மட்டும் இல்லாமல் போயிருந்தால், அறுவை சிகிச்சையென்பது வலி நிறைந்த ஒன்றாகவே இன்றளவும் இருந்திருக்கும்.

ஏனெனில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை, அதாவது மயக்கவியல் மருந்துகள் கண்டுபிடிக்கும் முன்புவரை அறுவை சிகிச்சை செய்யும்போதேவும் எவ்வித மயக்க மருந்தும் நோயாளிக்கு அளிக்கப்படாது. மாறாக நோயாளியை அவர் மயக்கமடையும் வரை தாக்கி, அவர் அம்மயக்கத்திலிருந்து தெளிவதற்குள் அறுவை சிகிச்சைகளை செய்வர். சில நேரங்களில் நோயாளிக்கு மதுபோன்ற ஏதேனுமொரு சுயநினைவை இழக்கும் உணவுப்பொருளை கொடுத்து, அவரை நினைவிழக்க செய்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். இதனால்தான் இன்று செய்யப்படும் இதய அறுவை சிகிச்சைகள், சிசேரியன் வகை சிகிச்சைகள், மூளை நரம்பியல் சார்ந்த அறுவை சிகிச்சை போன்ற எந்தவொரு நுண்ணிய சிகிச்சைகள் எதுவும் அன்று செய்யப்படவில்லை.

இன்று செய்யப்படும் இந்த வலியில்லா அறுவை சிகிச்சைக்கு முதன்முதலில் வித்திட்டவர் மார்ட்டின் என்ற மருத்துவர். இவர், அமெரிக்க பல் மருத்துவர். 1846ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதியன்று, மாஸாசேட் ஜெனரல் மருத்துவமனையில் எட்வர்ட் கில்பர்ட் என்ற நோயாளியின் கழுத்தில் இருந்த ரத்தக்கட்டியை அகற்ற, ‘ஈதர்’ என்ற மயக்க மருந்தை முதன்முதலில் இவர் பயன்படுத்தினார். இதன்மூலம் நோயாளியை மயக்க நிலைக்கு உட்படுத்தி, அறுவை சிகிச்சையை வலி இல்லாமல் செய்து காட்டினார். இந்த அக்டோபர் 16ஆம் தேதிதான், உலக மயக்கவியல் தினமாக இன்றுவரை நாம் கடைப்பிடித்து வருகிறோம். இந்த வருடம், 175-வது உலக மயக்கவியல் தினமாகும்.

நவீன மருத்துவத்தில் மயக்கவியல் துறையின் பங்களிப்பு குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் ஓய்வுபெற்ற டீனும், சவிதா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளருமான மயக்கவியல் துறை பேராசிரியர் மற்றும் மருத்துவர் பொன்னம்பல நம்ச்சிவாயம் நம்மிடையே சில தகவல்களை பகிர்ந்துக்கொண்டார்.

“மயக்கவியல் மருந்துகளில் நிறைய வகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கும் ஏற்ப அதை நாங்கள் கொடுப்போம். உதாரணத்துக்கு இதய அறுவை சிகிச்சையென்றால் கார்டியாக் அனெஸ்தெடிக் மருந்துகள், குழந்தைகளுக்கான ஏதேனும் அறுவை சிகிச்சையென்றால் பீடியாட்ரிக் மருந்துகள், நரம்பு சார்ந்த அறுவை சிகிச்சைக்கு நியூரோ மருந்துகள் என்று தருவோம். சிசேரியன் அறுவை சிகிச்சையிலும்கூட இருவேறு வித மயக்க மருந்துகள் தரப்படுவது உண்டு. ஆக எந்த சிகிச்சைக்கு, யாருடைய உடலுக்கு எவ்வளவு மயக்க மருந்துகள் தரப்பட வேண்டுமென்பது, மருத்துவருக்கே தெரியும். ஒருவேளை தவறாக தந்துவிட்டால் நோயாளியின் உடல் சரியாக ஒத்துழைக்காமல் போய் ரத்த அழுத்தம் அதிகரிப்பது, ரத்தப்போக்கு அதிகரிப்பது போன்றவையெல்லாம் நடந்து அறுவை சிகிச்சை ஆபத்தாகிவிடும். இதனாலேயே மயக்கவியல் நிபுணரென்பவர், நவீன மருத்துவத்தின் அனைத்து கட்ட சிகிச்சையிலும் முக்கியத்துவம் வாய்ந்தவராக உள்ளார்.

பொதுவாக ஒரு இதய நிபுணர் என்பவர் அதற்கான அறுவை சிகிச்சையை மட்டும்தான் செய்வார். அதுபோலவே நரம்பு பிரச்னைக்கான மருத்துவர், அதற்கானதை மட்டும்தான் செய்வார். ஆனால் மயக்கவியல் நிபுணர்தான் எல்லா வகையான அறுவை சிகிச்சையிலும் பங்களிப்பார். பொதுநல மருத்துவரும் எல்லாவகை சிகிச்சையிலும் பங்களிப்பார்களே என்று சிலர் நினைக்கலாம். அவர்கள், அறுவை சிகிச்சைகளில் உட்பட மாட்டார்கள். அதேபோலத்தான் அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் (சர்ஜரியன்) பெறாதவர்களும். அந்தவகையில், மயக்கவியல் துறை ஜங்க்‌ஷனல் ஸ்பெஷாலிட்டி (Junctional Speciality) என்று சொல்லலாம். இப்படி இருதரப்பினரையும் இணைக்கும், அனைத்து தரப்பு சிகிச்சையிலும் அவசியப்படும் மருத்துவராக மயக்கவியல் நிபுணர்களே இருப்பர்.

அனைத்து வகை அறுவை சிகிச்சையிலும் இருப்பதால், மயக்கவியல் நிபுணருக்கு கூடுதல் முக்கியத்துவம் இருக்கும். உதாரணத்துக்கு தேவைப்படும் நேரத்தில் ரத்த அழுத்தத்தை சரியாக வைப்பது, நுண் சிகிச்சைகளின்போது செயற்கை சுவாசத்துக்கு உடல் ஒத்துழைக்கும் வகையில் உடலை தயார் செய்வது என மிக கவனமாக செயல்பட வேண்டிய பொறுப்பு மயக்கவியல் நிபுணருக்கு அதிகமிருக்கும்.

அறுவை சிகிச்சையின்போது, பொதுவாக மூன்று முக்கிய விதமாக மயக்க மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

General Anaesthesia: உடல் முழுக்க மயக்கநிலைக்கு உள்ளாக்குவது. மூளை சார்ந்த அறுவை சிகிச்சைகள், இதய சிகிச்சைகள் போன்றவற்றுக்கு இது செய்யப்படும்.

Major Anaesthesia: உடலின் குறிப்பிட்ட ஒரு பகுதியை மட்டும் மயக்கநிலைக்கு கொண்டுசெல்வது, அதாவது உணர்ச்சிகளற்ற பகுதியாக மாற்றுவது. கை, கால் அறுவை சிகிச்சைகள், இடுப்புக்கு கீழான அறுவை சிகிச்சைகள் தொடங்கி ஏதேனும் குறிப்பிட்ட ஒரு உடல் பாகத்தில் மட்டும் சிகிச்சை தரவேண்டும் என்கிற அறுவை சிகிச்சைகள் வரை இந்த வகையில் செய்யப்படும்.

Local Anaesthesia: உடலின் ஒரே ஒரு இடத்தை மட்டும் மயக்கநிலைக்கு (உணர்ச்சிகளற்ற நிலைக்கு) கொண்டு செல்வது. இது விரலாகவோ பற்களாகவோ கண்களாகவோ அல்லது வேறு ஏதேனும் ஒரே ஒரு இடமாகவோ இருக்கலாம்.

இன்றைய தேதிக்கு மயக்கவியல் துறையில் நிறைய சப் - ஸ்பெஷாலிட்டிகள் (மேலே குறிப்பிட்ட நியூரோ ஸ்பெஷாலிட்டி, பீடியாட்ரிக் ஸ்பெஷாலிட்டி போன்றவை) பொதுவழக்கத்தில் வந்துவிட்டன. இருப்பினும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மயக்கவியல் நுட்பங்கள் இனிதான் வரவேண்டும். அதுசார்ந்த வளர்ச்சி அதிகரிக்கும்போது, இன்னும் பல புதுமைகளையும் நவீனத்துவத்தையும் நம்மால் மருத்துவத்துக்குள் கொண்டு வர முடியும்” என்றார் அவர்.

இதன்மூலம் மயக்கவியல் மருத்துவத்துறையென்பது வலியில்லா சிகிச்சைக்கு நமக்கு உதவும் அடிப்படை மருத்துவத்துறை என்பது நமக்கு தெளிவாகிறது. ஆக, மருத்துவ சிகிச்சைக்கு உட்படுவோருக்கு மயக்கவியல் துறைதான் எல்லாமும். இது இல்லாவிட்டால், அடுத்தடுத்து எதுவுமே முழுமையாக இருந்திருக்காது.

இத்துறையினரின் முறையான கண்காணிப்பு இருக்கும்பட்சத்தில் வலியற்ற வாழ்வை முறையாக மேற்கொள்ள முடியும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த வருட மயக்கவியல் தினத்துக்கான மையக்கருவாக (தீம்), ‘Anaesthesia and having a baby’ என்பது சொல்லப்பட்டுள்ளது. அதாவது ‘மயக்கவியல் மருந்துகளின் உதவியும், குழந்தை பெறுதலும்’. இந்த மையக்கரு கூற வரும் கருத்து, பிரசவத்திற்கு முன் - பின் அல்லது பிரசவத்தின்போது மயக்க மருந்து தேவைப்படும் சூழல் ஏற்படும் நேரத்தில், பிரசவிக்கும் அம்மாக்களையும் அவர்களின் குழந்தைகளையும் எப்படி மயக்க மருந்து நிபுணர்கள் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள் என்பது. இந்தக்கருத்தை சமூகத்தில் இந்த ஆண்டு கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் நிபுணர்கள் செயல்படுவர். இந்த விழிப்புணர்வு அதிகரிக்கும்போது, பிரசவத்தின்போது ஏற்படும் குழந்தைகள் மற்றும் அம்மாக்களின் இறப்பு எண்ணிக்கை நிச்சயம் குறையுமென சொல்லப்படுகிறது.

இப்படி பச்சிளம் குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரின் உயிரையும் காக்கும் மருத்துவத்துறையின் மிகமுக்கியமான வளர்ச்சியான மயக்கவியல்துறையையும் அதன் நிபுணர்களையும் இந்த தினத்தில் மட்டுமன்றி, எல்லா நாளும் நினைவுகூர்ந்து நன்றி மறவாது இருப்போம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com