ஆயிரம்தான் இருந்தாலும்... ஆண்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். ஏன்? #InternationalMensDay

ஆயிரம்தான் இருந்தாலும்... ஆண்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். ஏன்? #InternationalMensDay
ஆயிரம்தான் இருந்தாலும்... ஆண்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். ஏன்? #InternationalMensDay

ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 19 உலகெங்கிலும் உள்ள ஆண்களுக்கு ஒரு சிறப்பு முக்கியத்துவத்தை அளிக்கிறது. ஏனெனில், இந்த நாள் 'சர்வதேச ஆண்கள் தினம்' ஆக கொண்டாடப்படுகிறது. இது ஆண்களின் உடல்நலம், உறவுகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் சிறப்புக் கவனம் செலுத்தவேண்டிய ஒரு தருணமாகக் கருதப்படுகிறது. முதலில், 'நவம்பர் 19 சர்வதேச ஆண்கள் தினம்' என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? 

"மார்ச் 8 - சர்வதேச மகளிர் தினம் மட்டும் பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளை கொண்டாடும் உலகளாவிய தினமாக இருக்கும்போது, சர்வதேச ஆண்கள் தினத்துக்கு மட்டும் என்ன குறைச்சல்?" என்று ஆண்கள் கேட்பதில் நியாயம் இருக்கிறதா? ஆண்களும் பெண்களும் உலக மக்கள்தொகையை கிட்டத்தட்ட சமமாக உள்ளடக்கியிருப்பதைக் கருத்தில்கொண்டு, ஆண்கள் தினமும் சம ஆர்வத்துடன் கொண்டாடப்பட வேண்டும் என்று வரிந்துகட்டி கொண்டு வருகிறார்கள் ஆண்கள். மகளிர் தின கொண்டாட்டத்தைச் சுற்றியுள்ள அனைத்தும் பெண்ணதிகாரம், தன்னம்பிக்கையை மீண்டும் வலியுறுத்துவதாகவே தெரிகிறது.

"ஆண்கள்தான் ஆரம்பத்தில் இருந்தே எங்களை அடக்கி வச்சிருக்கிங்களே... இதுல கூடவா போட்டி?!" என்று கேட்கிறது பெண்கள் கூட்டம். இது உண்மையா?
இந்த சமுதாயம் பெண்களுக்கு வைத்திருக்கும் சில நிர்பந்தங்களைப் போல் ஆண்களுக்கும் வைத்திருக்கிறது. பெண்களைப் போல ஆண்கள் சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளை (அல்லது மற்றவர்கள், அவர்கள் மேல் திணித்த எதிர்பார்ப்புகளை) பூர்த்திசெய்ய படும் பாட்டை நினைத்து நாம் குறைந்தபட்சமாவது அனுதாபப்பட வேண்டும்.  'சிக்ஸ் பேக்ஸ் வைத்திருக்க வேண்டும்', 'நிறைய சம்பாதிக்க வேண்டும்', 'ஸ்மார்ட்டாக இருக்க வேண்டும்', 'கம்பீரமாக இருக்க வேண்டும்', 'தைரியமாக இருக்க வேண்டும்', 'ரொமான்டிக்காக இருக்க வேண்டும்', 'ரசனையுடன் இருக்க வேண்டும்', 'பாதுகாவலனாக இருக்க வேண்டும்', 'சொல்வதைச் செய்யவேண்டும்', 'சொல்லாததையும் செய்யவேண்டும்'...

அடேங்கப்பா எவளோ பெரிய லிஸ்ட். இது எல்லாத்தையும்விட முக்கியம், 'ஆண் என்றால் அழக் கூடாது'. எவ்ளோ நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது?
தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆண்கள் வெளியே காட்டிக்கொள்வது மிகவும் கடினம். ஏனென்றால், அது அவர்களின் பரிந்துரைக்கப்பட்ட பாலின பாத்திரத்திற்கு பொருந்தாது. அதை, இந்தப் பொதுச் சமுதாயம் ஏற்காது. அதனால்தான் 50 வயதிற்குட்பட்ட ஆண்களின் மரணத்திற்கு மிகவும் பொதுவான காரணம்... தற்கொலை. இது புள்ளிவிவர ஆய்வுகள் கூறும் தகவல்.



'ஓர் ஆணாக நீங்கள் வலுவாக இருக்கவேண்டும், எந்த பலவீனத்தையும் காட்டக்கூடாது' என்ற ஒரே மாதிரியான கருத்துடன் சிறுவயது முதல் வளர்க்கப்படுகிறார்கள். இது முற்றிலும் தவறு. ஆண்களும் மனிதர்கள்தான். தனிப்பட்ட, தொழில்முறை முன்னணியில் பிரச்னைகளை அவர்களும் எதிர்கொள்ள நேரிடும். இதை நாம் புரிந்துகொண்டே ஆகவேண்டும். ஆண்களின் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் ஒரு நாள் இருப்பது சிறந்ததே. கட்டுப்பாடுகளை மீறி வெளியே வரத் தொடங்கியுள்ள பெண்களைப்போல் ஆண்களும் தங்களின் உணர்வுகளுக்கு செவிசாய்க்க இது ஒரு நினைவூட்டலாக இருக்கும்.

இந்தச் சமூகம் எதை பிரதிபலிக்கிறதோ அதையே உள்வாங்கி, அதுதான் உண்மை, அதன்படி நடப்பதுதான் கோட்பாடு என்று சிறுவயது முதல் நாம் நம்புகிறோம். ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறு விதிகள் என்று சொல்லி, வன்முறையை வெளிப்படுத்துவது ஆண்மையாகவும், அதை அமைதியாக எதிர்கொள்வது பெண்மையாகவும் சொல்லி கைகொடுப்பது யார்... இந்த சமூகம் தானே?! காலம் காலமாக பார்த்து வளரும் ஒரு விஷயம் மாறாவிட்டால், அதைப் பிரதிபலிக்கும் பாலினத்தவர் மேல் ஏன் கோபம் வரவேண்டும்? இது, ஆணும் பெண்ணும் சேர்ந்து நிகழ்த்த வேண்டிய மாற்றம். பெண்களைப் போல் ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு. அதை அவர்கள் போக்கில் வெளிப்படுத்த அவர்களுக்கு பெரும்பான்மை சமுதாயம் கற்றுத்தரவில்லை. அப்படி கற்றுத்தரும் நாளாக ஏன் இந்த ஒரு நாள் இருக்கக் கூடாது?

நிச்சயம் ஆண்களைவிட பெண்கள் நம் சமுதாயத்தில் பாலியல் தொல்லைகளுக்கும், வன்முறைகளுக்கும் ஆளாகின்றனர். காலம் காலமாக சொல்லமுடியாத அளவிற்கு இன்னல்களை சந்தித்திருக்கின்றனர். ஆனால், இதை எல்லாம் பார்த்தும், கேள்விப்பட்டும் வளர்ந்த ஆண்கள், அதிலிருந்து வேறுபட்டு நின்றால் அவர்களைப் பாராட்டுவது நியாயம்தானே. இந்த ஒரு நாளில் அந்த நல்ல உள்ளங்களை போற்றுவோம். இவ்வளவு ஸ்டீரியோடைப்பிங் நிகழ்வுகளை பார்த்து வளர்த்தும், இன்னும் பெண்மையைக் கொண்டாடும் ஆண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

'வேணாம் மச்சான் வேணாம்... இந்தப் பொண்ணுங்க காதலு...', 'எவண்டி உன்னைப் பெத்தான், கையில கிடைச்ச செத்தான்...' போன்ற பாடல்களைத் தாண்டி, 'என் ஆறடி உயரத்தை அபகரித்தாய், உன் காலடியில் என்னை பணிய வைத்தாய்', 'ஒரு பொய்யாவது சொல் கண்ணே... உன் காதல் நான்தான் என்று, அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்...' என்று பாடும் ஆண்கள் பலர் உள்ளனர். ஆமாங்க, இங்கே அடிச்சா அங்கே வலிக்கும். என்னதான் ஆணென்ற வெற்றுத் திமிருடனும் கர்வத்துடனும் இருப்பது தான் கெத்து என்று இந்த சமுதாயம் சொல்லிக் கொடுத்தாலும், அதைக் கடந்து, பெண்களை அவர்களுக்குரிய சுயமரியாதையுடன் நடத்தும் ஆண்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். பிள்ளைகளை வளர்ப்பதில் தங்கள் பங்கு எவ்வளவு முக்கியம் என்று புரிந்துகொண்டு ஓர் ஆண்மகன் எப்படி இருக்க வேண்டும் என்று தன்னைப் பார்த்து வளரும் தங்கள் பிள்ளைகளுக்குச் செயலால் புரியவைக்கும் ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அவர்களைக் கொண்டாட ஒருநாள் போதுமா? ஆண்கள் தினம் உண்மையிலேயே கொண்டாடப்பட வேண்டும். பெண்களுக்கு ஆண்கள் ஆதரவை வழங்குவதும், பாலின சார்புகளிலிருந்து விடுபடுவதும் பற்றியதாக அது அமையவேண்டும். இந்த குணங்கள் கொண்டாடப்படும்போது, இது ஆண்களுக்கான அளவீட்டின் அடிப்படையாக மாறுவதை உறுதி செய்யும். ஒவ்வோர் ஆண்டும், பெண்களைக் கொண்டாடுவதற்காக ஒரு நாளை அர்ப்பணிக்கிறோம்; ஆனால், ஆண்கள் நம் சமுதாயத்தில் ஒரு சமமான முக்கியப் பங்கை வகிக்கிறார்கள் என்பதை குறிப்பிடத் தேவையில்லை. சமுதாயத்தில் மட்டும் அல்ல, நம் வீடுகளிலும், இதயங்களிலும் கூட. எனவே, நம் வாழ்வில் உள்ள ஆண்களைப் பாராட்டுவோம். பாலின சமத்துவம் என்பது அனைவருக்குமானதுதானே?!

இந்த நல்ல உள்ளங்களைக் கொண்டாடும் ஒரு நாளாகவும், ஆண்களின் பன்முகத்தன்மையை கொண்டாடும் நாளாகவும், ஆண்களும் பாதிப்புள்ளாக்கப்படலாம் என்று புரிந்துகொள்ளவும், எதிர்காலத்தில் பாலினத்தைப் பற்றி சரியான புரிதல் ஏற்படுவதற்காகவும் ஆண்கள் தினம் மிக மிக அவசியம். இவ்வளவு சொல்லியும், ஆயிரம் காரணங்களை முன்வைத்து, 'ஆண்கள் தினம் எல்லாம் ரொம்ப முக்கியமா?' என்று கேட்டால், சுயமரியாதை தனக்கு எவ்வளவு முக்கியமோ, அந்த அளவு பெண்ணிற்கும் முக்கியம் என்று உணர்ந்து, தனக்கு எந்த விதத்திலும் எந்தப் பாலினத்தவரும் சளைத்தவர் அல்ல என்று புரிந்து, வாழ்க்கையை அழகானதாக்கும் அணைத்து ஜென்டில் மேன்களுக்கும் ஆண்கள் தினம் கொண்டாடுவது நிச்சயம் ரொம்பவே அவசியம்!

ஆண்கள் தின வாழ்த்துகள்... ஜெண்டில்மேன்களே!

கட்டுரையாளர்: முனைவர். தமிழ்செல்வி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com