யுத்தத்திற்கு நடுவே செலன்ஸ்கி அதிரடி மூவ் - ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராகுமா உக்ரைன்?

யுத்தத்திற்கு நடுவே செலன்ஸ்கி அதிரடி மூவ் - ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராகுமா உக்ரைன்?
யுத்தத்திற்கு நடுவே செலன்ஸ்கி அதிரடி மூவ் - ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராகுமா உக்ரைன்?

ஐரோப்பிய ஒன்றியம் கூட்டமைப்பில் சேருவதற்கான உக்ரைனின் விண்ணப்பத்தை மதிப்பீடு செய்யத் தொடங்குவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் சிறப்பு நடைமுறையாக உடனடியாக உறுப்பினராக சேர்த்துக்கொள்ளவேண்டும் என்ற உக்ரைனின் விண்ணப்பத்தில் அந்த நாட்டின் அதிபர் ஜெலென்ஸ்கி கையெழுத்திட்டார். இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள வோலோடிமிர் செலன்ஸ்கி, "எங்கள் இலக்கு அனைத்து ஐரோப்பியர்களுடனும் ஒன்றாக இருக்க வேண்டும், மிக முக்கியமாக, சமமான நிலையில் இருக்க வேண்டும். இது நியாயமானது என்று நான் நம்புகிறேன். அது சாத்தியம் என்றும் நான் நம்புகிறேன்" என்று கூறினார்.

அதே சமயம் சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் நேற்று நடந்த உக்ரைன்-ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தைகளின் முதல் சுற்றில் உடனடியாக உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. இந்த சூழலில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துவரும் நிலையில், உக்ரைனின் இந்த நகர்வு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு நாடு இணைவது அவ்வளவு எளிதானது இல்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதில் உள்ள நடைமுறைகள் என்ன?

ஐரோப்பிய ஒன்றியத்தில் தற்போது 27 உறுப்பு நாடுகள் உள்ளன. இந்த ஒன்றியத்தில் உறுப்பினர் தகுதியை அடைவதற்கான தரநிலைகளை எட்டுவதற்கு பல வருடங்கள் ஆகும், உடனடியாக புதிய உறுப்பினர்களை ஏற்றுக்கொள்வதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்க்கப்படும் எந்தவொரு நாடும் அனைத்து உறுப்பு நாடுகளாலும் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட வேண்டும், இதில் சில உறுப்பு நாடுகள் சிக்கலான ஒப்புதல் நடைமுறைகளைக் கொண்டுள்ளன.

இந்த சூழலில் சிறப்பு நடைமுறை மூலமாக உக்ரைனின் விண்ணப்பத்தை மதிப்பீடு செய்வதாக ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய கமிஷன் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன், "அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இதற்கான எதிர்வினை எப்படி இருக்கும் என இனிவரும் நாட்களில் தெரியும்.

உறுப்பினராக ஏற்கனவே விண்ணப்பித்துள்ள நாடுகள்?

ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக ஏற்கனவே விண்ணப்பித்த மசிடோனியக் குடியரசு மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளும் நியமன தகுதி பெற்றுள்ளன. மேலும் அல்பேனியா, பொசுனியா எர்செகோவினா, மொண்டெனேகுரா, செர்பியா ஆகிய நாடுகள் இந்த அமைப்பில் சேரும் தகுதி உள்ள நாடுகளாக ஏற்கப்பட்டுள்ளன.ஆனால், இந்த நாடுகள் இதுவரை ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை.

இந்த சூழலில் உக்ரைனை சிறப்பு நியமனம் மூலமாக உறுப்பினருக்கும் திட்டத்திற்கு அனைத்து நாடுகளும் ஒப்புதல் வழங்குமா என்பது சந்தேகமே. மேலும் ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகள் தங்கள் எரிபொருள் தேவைக்கு ரஷ்யாவை சார்ந்துள்ளன, எனவே அவர்கள் இதனை ஏற்பார்களா என்பதும் சந்தேகமே.

ஆனால், பல்கேரியா,செக் குடியரசு, எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா, போலந்து, ஸ்லோவாக்கியா மற்றும் ஸ்லோவேனியா ஆகிய ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் உக்ரைனை உறுப்பு நாடாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என தங்களின் கூட்டறிக்கையில் வலியுறுத்தியுள்ளன.

உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதால் என்ன பயன்?

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தங்கள் நாடுகளுக்குள் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் மக்கள், பொருள்கள், சேவைகள், முதலீடு போன்றவற்றை அனுமதிக்கிறது. மேலும் இந்த நாடுகளுக்குள் பொதுவான வணிகம், வேளாண்மை, மீன்பிடி, வளர்ச்சி கொள்கைகள் கடைபிடிக்கப்படுகிறது.

மேலும் இந்த நாடுகள் நேட்டோவில் உறுப்பினாராக உள்ளதால் பாதுகாப்பு விவகாரங்களில் அனைத்து நாடுகளின் உதவியை பெறலாம். ஆகவே, தற்போதைய சூழலில் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாக அறிவிக்கப்பட்டால் ரஷ்யாவை வலுவாக எதிர்கொள்ளலாம் என்று உக்ரைன் நம்புகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com