கொரோனா கால மாணவர் நலன் 5: கூடிய மாணவர் சேர்க்கை... தக்கவைத்துக் கொள்ளுமா அரசுப் பள்ளிகள்?

கொரோனா கால மாணவர் நலன் 5: கூடிய மாணவர் சேர்க்கை... தக்கவைத்துக் கொள்ளுமா அரசுப் பள்ளிகள்?
கொரோனா கால மாணவர் நலன் 5: கூடிய மாணவர் சேர்க்கை... தக்கவைத்துக் கொள்ளுமா அரசுப் பள்ளிகள்?

தமிழகத்தில் கொரோனா காலத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் தனியார் பள்ளிகளிலிருந்து விலகி, அரசுப் பள்ளிகளில் சேர்ந்ததை நாம் அனைவருமே கண்கூடாக பார்த்துவந்தோம். துல்லியமாக சொல்லவேண்டுமெனில், தமிழகத்தில் 2020 - 21 கல்வியாண்டில், செப்டம்பர் மாதம் வரையில் மட்டும் 1, 6, 9, 11-ம் வகுப்புகளில் மட்டும் 15 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளிலிருந்து விலகி அரசு பள்ளிகளில் சேர்ந்திருக்கின்றனர். இந்த எண்ணிக்கை பின் வந்த நாள்களில் இன்னும்கூட அதிகரித்தது.

அதேபோல 2021 - 22 கல்வியாண்டு தொடர்பாக, தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 லட்சம் மாணவர்களும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் சேர்ந்திருப்பதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்தது. இப்படியாக மொத்தம் தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 6 லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த இரு வருடங்களில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை அதிகரித்ததன் பின்னணியில், 'குடும்பங்களில் ஏற்பட்ட கொரோனா கால பொருளாதார வீழ்ச்சியே முதன்மைக் காரணமாக இருந்தது. அப்படி பார்க்கும்போது, கொரோனா காலத்துக்கு பிறகு, பொருளாதாரம் கொஞ்சம் மீண்டு மேம்பட்ட பிறகு மீண்டும் மாணவர்கள் தனியார் பள்ளிகளை நோக்கி செல்வார்களே என்ற கேள்வி எழுகிறது.

எனில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தக்கவைத்துக்கொள்ள அரசு தரப்பில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்தோம். அதில், நமக்கு எழுந்த முதன்மையான கேள்வி, 'இத்தனை வருடம் ஏன் பெருவாரியான பெற்றோரின் தேர்வாக அரசுப் பள்ளிகள் இல்லை? தனியார் பள்ளிகளில் அப்படி என்ன வசதிகள் இருந்தன?' என்பது.

தனியார் பள்ளியில் தன் குழந்தையை சேர்க்கும் பெற்றோர் ஒருவர் நம்மிடம் தெரிவிக்கையில், 'தனியார் பள்ளியென்றால், அங்கு மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் வசதிகள் இருக்கும். உரிய பாதுகாப்பு வசதி குழந்தைகளுக்கு கிடைக்கும். ஃபேன், லைட் போன்ற மின் வசதிகளும் எல்லா வகுப்பறைக்கும் கிடைக்கும். உட்காரும் பலகையும் தரமானதாக இருக்கும். கட்டடங்களும் பாதுகாப்பானதாக இருக்கும். முக்கியமாக கழிவறை வசதி சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கும்' என்றார். இதைத்தொடர்ந்து இந்த வசதிகள் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஏன் கிடைப்பதில்லை என்ற கேள்வி நமக்கு எழுந்தது. அரசுப் பள்ளி ஆசிரியர் மணிமாறனிடம் இதுபற்றி கேட்டோம்.

"அரசுப் பள்ளியில் இந்த வசதிகள் கிடைப்பதில்லை என்பதை ஏற்க முடியாது. அரசுப் பள்ளி என்பது வெறும் பள்ளி வளாகம் மட்டும் கிடையாது. அங்குதான் அப்பகுதியின் கிராம சபை கூட்டம் நடக்கும்; தேர்தல் நேரத்தில் வாக்குப்பதிவுகள் நடக்கும்; ஊர்க்கூட்டங்கள், பொதுநிகழ்ச்சிகள், கொடியேற்றம் என எல்லாமே அங்குதான் நடக்கும். அதனாலேயே அரசுப் பள்ளிகள்யாவும் விசாலமானதாகவும் விரிவானதாகவும் கட்டப்பட்டிருக்கும். அந்த வகையில் தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் பெரிதானதாக இருக்குமென்பதால் அங்கு போதிய இடமும், பெஞ்ச் வசதியும், மின் வசதியும், கழிவறை வசதியும் இருக்கும். மட்டுமன்றி, அரசுப் பள்ளிகள் அனைத்திலும் இப்போது டிஜிட்டல் வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஆகவே அவைபற்றிய பயங்களும் வேண்டாம்.

இருப்பினும் அரசுப் பள்ளியில் மேம்படுத்திக்கொள்ள வேண்டிய விஷயங்களில், கட்டடங்களும் பிற வசதிகளும் இருக்கின்றன என்பதை நான் மறுக்கவில்லை. நான் சொல்ல வருவது, அரசுப் பள்ளி என்பது 'வசதிகள் அற்ற' பள்ளிகளில்லை; மாறாக 'கூடுதல் பராமரிப்பு தேவைப்படும் பள்ளிகள்'. அந்த வகையில் தூய்மையான கழிவறை, வண்ணமயமான கட்டடங்கள் உள்ளிட்ட சிலவற்றில் அரசு இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.

அப்படி அரசுப் பள்ளிகளில் என்ன மாதிரியான 'கூடுதல் பராமரிப்புகள்' தேவைப்படுகின்றன என்பது குறித்து எழுத்தாளரும் கல்வியாளருமான ஆயிஷா இரா.நடராசனிடம் பேசினோம்.

"ஐந்து முக்கியமான விஷயங்களை நான் குறிப்பிட விரும்புகிறேன். இவையாவும், அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் நவம்பர் 1-ம் தேதி பள்ளி திறப்புக்கு முன்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய விஷயங்கள். அப்படி செய்தால்தான், நவ.1 பள்ளிக்கு வரும், 1 - 8 வகுப்புக்குட்பட்ட மாணவர்கள், அதிலும் குறிப்பாக தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாற்றம் பெற்று வரும் மாணவர்கள் புத்துணர்வாகவும் நம்பிக்கையாகவும் உணர்வார்கள். அவர்களின் பெற்றோரும், தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தமைக்காக திருப்தி அடைவார்கள்.

அந்த முக்கியமான வசதிகள்:

* அரசுப் பள்ளியிலுள்ள கட்டடங்கள், கழிவறைகள், பெஞ்ச் வசதிகள், வகுப்பின் மேற்கூறைகள், பள்ளி வளாகத்துக்கான வெளிப்புற மதில்கள் ஆகியவற்றுக்கு உடனடி பராமரிப்பு தேவைப்படுகிறது. இந்தப் பராமரிப்பு பணிகளை கண்காணிக்க, முதன்மைக் கல்வி ஆணையம் சார்பில் தனிக்குழு அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட வேண்டும். ஏனெனில் பராமரிப்பு என்பது, ஒரு தொடர் விஷயம் (Its a Process). அதை ஒரு வாரம் செய்துவிட்டு, அடுத்தவாரம் செய்யாமல் விடும் நிலைதான் இன்றைய அரசுப் பள்ளியில் உள்ளது. ஆகவே இதன்மீதான கண்காணிப்புக்கென்று தனிக்குழு அமைக்கப்பட வேண்டும். எந்தெந்தப் பள்ளிகளெல்லாம் மாணவர் சேர்க்கை மிக அதிகமாக பதிவாகியுள்ளதோ, அங்கெல்லாம் கூடுதல் சிரமெடுத்து அரசு இதை செய்ய வேண்டும்.

* அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான அளவு ஆசிரியர்களை அரசு நியமிக்க வேண்டும். சமீபத்தில் யுனெஸ்கோ ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதன்படி தமிழகத்தில் 2,000-த்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில், ஓரிரு ஆசிரியர்தான் இருக்கின்றனர் என்ற தகவல் நமக்கு தெரிகிறது. ஆக, மாணவர்கள் எண்ணிக்கை அளவுக்கு ஏற்ப ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதற்கு முதலில், எங்கெல்லாம் ஆசிரியர் குறைவாக உள்ளனர் - எங்கெல்லாம் தேவைப்படுகின்றனர் என்பதை அரசு அறிந்து, எத்தனை ஆசிரியர் தேவையென்பதை நிர்ணயிக்க வேண்டும். அவையாவும் அடுத்த 15 நாள்களுக்குள் செய்து முடிக்கப்படக்கூடிய அளவு எளிமையான விஷயமில்லை என்றாலும்கூட, இதற்கான பணிகளை விரைந்து தொடங்கவேண்டும்.

* இன்றைய தேதிக்கு, கல்வி கற்பிக்கும் முறை முற்றிலும் மாறிவிட்டது. அந்தவகையில் டிஜிட்டல் தளங்கள், டிஜிட்டல் கருவிகள் உபயோகம் முன்பைவிட மிகவும் அதிகரித்துள்ளது. ஆகவே அனைத்து அரசுப் பள்ளியிலும் ஆன்லைன் டிஜிட்டல் வசதிகள் அமைக்கப்பட வேண்டும். இவ்விஷயத்தில் அரசு பி.எஸ்.என்.எல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுக்கூட செயல்படலாம். இணைய வசதி கிடைத்தாலேயே, அடுத்தடுத்த வசதிகள் அனைத்தும் வேகமாக எடுக்கப்பட்டுவிடும்.

* எந்தவொரு பள்ளிக்கும், அதன் தலைமையாசிரியர்தான் கூடுதல் பொறுப்பு இருக்கக் கூடிய நபராக இருப்பார். ஆகவே தலைமையாசிரியரை அடிக்கடி மாற்றும் நடவடிக்கைகள் இருக்கக்கூடாது. தற்போதிருக்கும் தலைமை ஆசிரியர், நவம்பர் 1-ம் தேதி பள்ளிக்கு புதிதாக வரும் மாணவர்களின் பெற்றொறோருடன் ஆசிரியர்கள் உடனடியாக தொடர்பு கொண்டு பேச வேண்டும். அவர்களுக்கு நம்பிக்கையளிக்க வேண்டும். 'இங்கு நல்ல விதத்தில் உங்கள் குழந்தைகள் கவனித்துக்கொள்ளப்படுவார்கள்' என்ற உறுதியை அளித்து, அவர்களுடன் கனெக்ட்டாக இருக்க வேண்டும். மட்டுமன்றி, மாவட்ட வாரியாகவோ ஊராட்சி வாரியாகவோ தலைமையாசிரியர்கள் குழுவாக இணைந்து தங்கள் பள்ளியை மேம்படுத்தி அதை வெளியுலகுக்கு அடையாளத்துப்படுத்தும்படியான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட வேண்டும். மிகச் சிறப்பாக செயல்படும் தலைமையாசிரியர்கள் கௌரவிக்கப்பட வேண்டும். அந்த கௌரவிப்பு, அவர்களை இன்னும் சிறப்பாக செயலாற்ற உந்துதலுக்கு உள்ளாக்கும்.

* அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தரப்படும் பிற அரசுப் பணிகள் குறைக்கப்பட வேண்டும். ஏனெனில், இன்றைய தேதிக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடங்கி பாடத்திட்ட வடிவமைப்பு, பாடத்திட்டம் குறைக்கப்படுதல், கல்வியாளர் கூட்டங்கள், முன்னேற்பாடு நடவடிக்கைகள், தேர்தல் வேலைகள் என பல அரசுப் பணிகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இவை குறைக்கப்பட வேண்டும். ஆசிரியர்கள், பள்ளியில் அதிக நேரம் இருக்கும் நிலை உருவாக வேண்டும். முடிந்தவரை அவர்கள் மாணவர்களுடன் கூடுதல் நேரம் செலவிட அறிவுறுத்தப்பட வேண்டும். இதன்மூலம் ஆசிரியர் - மாணவர் இடைவெளி குறையும்; இணக்கம் அதிகரிக்கும். மாணவர்கள் தங்கள் ஆசிரியருடன் இணைந்து கல்வி கற்கும்போது, அவர்கள் கற்றல் திறன் அதிகரித்து இன்னும் வேகமாகவும் ஆர்வமாகவும் பாடம் கற்கத் தொடங்குவர்!

இவை அனைத்தையும் அரசு போர்க்கால அடிப்படையில் அமல்படுத்துவதோடு மட்டுமன்றி, பின்வரும் நாள்களில் அதை சரியாக கடைபிடிக்கவும் வேண்டும். அபப்டி செய்தால், அடுத்த ஆண்டு இந்த மாணவர்களை தங்களிடம் தக்கவைத்துக் கொள்ளவும் முடியும்; மேலும் கூடுதல் சேர்க்கையை சாத்தியப்படுத்தவும் முடியும். அரசுப் பள்ளிக்கு விளம்பரங்கள் கொடுத்தால்தான் அவற்றுக்கு அட்மிஷன் கூடும் என்றில்லை. மாணவர்களை நன்கு கவனித்துக் கொண்டாலே அட்மிஷன் தன்னால் கூடும்" என்றார்.

பல காலங்களுக்குப் பிறகு, கொரோனா போன்றதோர் பேரிடர் நேரத்தில் தமிழகத்தின் பெருவாரியான பெற்றோர் அரசுப் பள்ளி வசம் திரும்பியுள்ளனர். இவர்களை அரசு தக்கமைத்துக் கொள்ளுமா, மேற்சொன்னவை போன்ற முன்னேற்றங்களுடன் செயல்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

முந்தைய அத்தியாயங்கள்:

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com