காவிரி பிரச்னையில் வஞ்சகம் தொடருமா?

காவிரி பிரச்னையில் வஞ்சகம் தொடருமா?
காவிரி பிரச்னையில் வஞ்சகம் தொடருமா?

காவிரி தொடர்பான வழக்கு மே 3ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. அதில் செயல் திட்டத்தின் வரைவை சமர்ப்பிக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. செயல் திட்டம் தயாரிப்பதற்கு இரண்டு மாதகால அவகாசம் வேண்டுமென்று சில நாட்களுக்கு முன்னால்  மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. அதற்கு வெளியில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக அந்த மனுவை திரும்ப பெற்றுக்கொண்டது. எனவே, மே 3ஆம்தேதி  ஏதோ ஒரு செயல் திட்டத்தை மத்திய அரசு சமர்ப்பிக்கும் என்பது உறுதி.

கர்நாடகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் சட்டபேரவைக்குத் தேர்தல்நடைபெறவிருப்பதால் தான் பாஜக செயல்திட்டம் தயாரிப்பதில் தயக்கம் காட்டுகிறது என்று பாஜகவினர் சொல்லி வரும் காரணத்தை மற்றவர்களும் கூடநம்புவது போல் தெரிகிறது. கர்நாடக தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால் நிச்சயம் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்குமென்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூட அண்மையில் பேசியிருந்தார். இது உண்மைதானா என்ற கேள்வி நமக்கு எழுகிறது. 

கர்நாடகாவில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவதை விட 2019ஆம் ஆண்டு நடக்கவுள்ள பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்க வேண்டுமென்பதில் தான் பாஜக அதிக கவனம் செலுத்துகிறது.

2014 தேர்தலில் பாஜக வெற்றிபெற்ற 284 தொகுதிகளில் பெரும்பாலானவை வடமாநிலங்களைச் சேர்ந்தவையாகும்.  
தென்மாநிலங்களில் பாஜக ஒப்பீட்டளவில்மிகவும்பலவீனமாகவே உள்ளது. 2014 தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு இடம் மட்டுமே அதற்குக் கிடைத்தது. கேரளாவில்அதுவும் இல்லை.  ஆந்திராவிலும்,  தெலுங்கானாவிலும் சில இடங்கள்  மட்டும்தான் பாஜகவுக்குக் கிடைத்தன. தென் மாநிலங்களிலேயே அதிகமாக கர்நாடாகாவில்தான் 17 இடங்களை பாஜக கைப்பற்றியது.1998 முதல் தொடர்ச்சியாக அனைத்து பொதுத் தேர்தல்களிலும் கர்நாடகாவில் இரட்டை இலக்க இடங்களை பாஜக வென்றுள்ளது. 

மொத்தம் 129 இடங்கள் கொண்ட இந்த 5மாநிலங்களில் 60 இடங்களையாவது பிடித்துவிட வேண்டுமென்று பாஜக
குறிவைத்துள்ளது. அப்படி வெற்றி பெற்றால் தான் 2019 தேர்தலில் 200இடங்களையாவது பாஜகவால் பெற முடியும். ஆனால் பாஜகவின் இந்தக் கனவு பலிக்குமா அதற்கு வாய்ப்பிருக்கிறதா என்று பார்ப்போம். 

பாஜக சற்றும் எதிர்பாராத விதத்தில் 2014ல் இல்லாத ஒரு புதிய அரசியல் தென்மாநிலங்களில் இப்போது வலுவாகவெளிப்பட்டு வருகிறது. மத்திய அரசால் தென்மாநிலங்கள்புறக்கணிக்கப்படுகின்றன என்று அந்த மாநிலங்களின் முதல் அமைச்சர்களே வெளிப்படையாகப் பேசும் நிலை உருவாகியிருக்கிறது. இந்தி எழுத்துகளை அழிப்பது, திராவிட நாடு கோரிக்கையை எழுப்புவது எனஇந்த உணர்வு இளைஞர்களை எழுச்சிகொள்ள வைக்கிறது. 

15 ஆவது நிதிக்குழுவில்வரிவருவாயைப் பகிர்ந்தளிப்பது தொடர்பாக முன்வைக்கப்பட்டிருக்கும் திட்டத்தில் தென்மாநிலங்கள் பெருமளவு பாதிக்கப்படும் என்பதைப் புள்ளிவிவரங்களோடு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளிப்படுத்தியதும், அதைத் தொடர்ந்து தென்மாநில முதல் அமைச்சர்கள் போர்க் கொடி உயர்த்தியதும், கேரளஅரசு தென்மாநில நிதி அமைச்சர்களின் மாநாட்டைக்  கூட்டியதும்முக்கியமானவை. மத்திய அரசுக்கு எதிரான இந்த அரசியல் திரட்சி  பாஜகவுக்கு எதிரான ஒன்றாகவே பரிமாணம் எடுத்திருக்கிறது. இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாஜக தென்மாநிலங்களில் கூடுதல் இடங்களைப் பிடிப்பது மிகப்பெரிய சவாலாகவே இருக்கும்.

ஆந்திர முதலமைச்சரும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமானசந்திரபாபு நாயுடு இப்போது பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளார்.அதுமட்டுமின்றி பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். இந்நிலையில் ஆந்திராவில் போனதேர்தலில் வென்ற இடங்களைக்கூட பாஜகவால் வெல்ல முடியாது என்பது உறுதி.தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர்ராவோ பாஜகவுக்கு எதிராக மாநில கட்சிகளை எல்லாம் ஒருங்கிணைக்கின்ற  முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். எனவே, அந்த மாநிலத்திலும் பாஜகவுக்குக் கூடுதல் இடங்கள் கிடைப்பது சாத்தியமில்லை. கேரளாவில் ஒரு இடத்தை  வென்றாலேஅது சாதனையாகத் தான் இருக்கும். இந்தியாவிலேயே மிகஅதிகபட்சமாகபாஜக எதிர்ப்பு அலை வீசுவது தமிழ்நாட்டில் தான். எனவே, அதிமுகவோடு கூட்டுச்சேர்ந்தாலும் கூட இங்கே பாஜகவால் வெற்றிபெற முடியாது.

இந்நிலையில் அதற்கு இருக்கிற ஒரே நம்பிக்கை கர்நாடகாதான் பாராளுமன்ற தேர்தலில் தற்போதுள்ள 17 இடங்களை எப்படியாவது 20 இடங்களாக  உயர்த்திவிடவேண்டுமென்பது பாஜகவின் இலக்காக இருக்கிறது. அப்படி இருக்கும் போதுகர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்துவிடும் என்று சொல்வது தமிழக மக்களை ஏமாற்றுவதற்கான வாதமே தவிர அது உண்மையல்ல.

இப்போது டெல்டா மாவட்டங்களில் துணை இராணுவப் படைகள்நிறுத்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அங்கு ஹைட்ரோகார்பன் எடுப்பதற்குப் பாதுகாப்பாகத் தான் அவை நிறுத்தப்பட்டிருப்பதாக யூகங்கள் எழுந்துள்ளன. ஆனால், காவிரி பிரச்சனையில் போராட்டங்கள்வெடிக்கும் என்பதை எதிர்பார்த்தே துணை இராணுவப்படை நிறுத்தப்பட்டுள்ளதோஎன்கிற ஐயம் நமக்கு எழுந்துள்ளது. அதற்காகத்தான் என்றால்  மே 3ஆம்தேதி தமிழகத்தை வஞ்சிக்கும் விதமாக ஒரு செயல் திட்டத்தைத்தான் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் முன்வைக்கப் போகிறதா? 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com