இந்தியா-சீனா எல்லை விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவாரா அஜித் தோவல்?

இந்தியா-சீனா எல்லை விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவாரா அஜித் தோவல்?
இந்தியா-சீனா எல்லை விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவாரா அஜித் தோவல்?

பயங்கரவாதிகள் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துக் கொண்டிருந்த நிலையை மாற்றி, பதில் தாக்குதல் நடத்தும் சூழலைக் கொண்டுவந்ததில் முக்கியப் பங்காற்றியவர் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்.

உரி தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் கடந்தாண்டு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை நடத்தியது. இந்த தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர் என்ற நற்பெயர் அஜித் தோவலுக்கு இருக்கிறது. அந்த தாக்குதலில் 7 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதில் 35 முதல் 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. வெளியுறவுத் துறையில் கைதேர்ந்தவரான தோவல், தற்போது எழுந்திருக்கும் இந்தியா-சீனா இடையிலான தோக்லாம் எல்லை விவகாரத்தையும் தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பார் என்று கருதப்படுகிறது.

யார் இந்த அஜித் தோவல்..?

அஜித் தோவல், இன்றைய உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த 1945ஆம் ஆண்டு பிறந்தார். இந்திய ராணுவத்தில் இவரது தந்தை பணியாற்றியதால், பள்ளிப் படிப்பை ராணுவப் பள்ளியில் முடித்தார். இதையடுத்து கடந்த 1968-ல் கேரள மாநிலத்தில் இருந்து ஐபிஎஸ் பணிக்குத் தேர்வான அஜித் தோவல், பதவிக்கு வந்து 6 ஆண்டுகளிலேயே குடியரசுத் தலைவர் விருதைப் பெற்றார். குறைந்தது 14 ஆண்டுகள் காவல் துறையில் பணியாற்றிய பின்னரே இந்த விருதினைப் பெற முடியும் என்பதைத் தாண்டி, தனது திறமையால் 6 ஆண்டுகளில் இந்த விருதை அவர் தன்வசமாக்கினார். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் மற்றும் இங்கிலாந்துக்கான இந்திய தூதர் ஆகிய பதவிகளை அவர் வகித்தார். பின்னர், உளவுத் துறையில் பணியாற்றிய அஜித் தோவல், அந்த பிரிவின் தலைவராக இருந்தபோது கடந்த 2005-ல் ஓய்வு பெற்றார். உளவுத்துறையில் பணியாற்றிய போது அன்னிய மண்ணில் பல்வேறு நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டியவர் அஜித் தோவல். சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள மிசோரம் பகுதியில் மாறுவேடத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட தோவல், சிக்கிம் இந்தியாவுடன் இணைவதில் முக்கிய பங்காற்றினார்.

பாதுகாப்பு ஆலோசகர் பயணத்தின் தொடக்கம்..

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடன், நாட்டின் 5ஆவது தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவலை நியமித்தது. பதவியேற்றவுடன் எல்லைப் பாதுகாப்பு குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்ட தோவல், எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ் .எஃப்) தலைவருடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி நடந்த இந்த சந்திப்பில், எல்லை தாண்டி நிகழ்த்தப்படும் பயங்கரவாத ஊடுருவல் மற்றும் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்குமாறு எல்லைப் பாதுகாப்புப் படைக்கு அறிவுறுத்தினார். உங்களை நோக்கிப் பாயும் ஒவ்வொரு தோட்டாவுக்கும் பதிலடியாக இரண்டு தோட்டாக்களை பரிசளியுங்கள் என்று தோவல் குறிப்பிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பி.எஸ்.எஃப்-பின் கை விலங்குகளை முழுமையாக அவிழ்த்துவிட்ட தோவல், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் பயங்கரவாத ஊடுருவல் நிறுத்தப்படும் வரை அந்தப் பகுதியில் இருக்கும் துருப்புகள் மீது கடுமையான தாக்குதல்களை நிகழ்த்துமாறு அறிவுறுத்தினார்.

கடந்த 2014 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் ஈராக்கின் திக்ரீத் நகரை ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றினர். அப்போது அங்கிருந்த மருத்துவமனை ஒன்றில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 46 செவிலியர்கள் ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து ஈராக்குக்கு ரகசியப்பயணம் மேற்கொண்ட தோவல், ஈராக் அரசில் தனக்குள்ள தொடர்புகள் மூலம் இந்திய செவிலியர்களை ஜூலை 5-ல் மீட்டெடுத்து கொச்சிக்குத் திருப்பி அனுப்பினார்.

தோவலின் அடுத்த அதிரடி..

அஜித் தோவலின் மறுபக்கத்தை 2015 அக்டோபரில் பாகிஸ்தான் படைகள் கண்டன. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண எல்லைப் பாதுகாப்புப் படை தலைவரான உமர் பரூக் புர்கி, இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வந்திருந்தார். அப்போது பஞ்சாப் மாநில எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துருப்புகள் அத்துமீறித் தாக்குதல் நடத்தத் தொடங்கின. இரண்டு நாட்களுக்கும் மேலாக நீடித்த இந்த தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்குமாறு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவல் ஆகியோர் எல்லைப் பாதுகாப்புப் படைக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து முழு உத்வேகத்துடன் களமிறங்கிய பிஎஸ்எஃப் பாகிஸ்தான் நிலைகள் மீது அதிரடித் தாக்குதலை நடத்தத் தொடங்கியது. இந்த தாக்குதலால் நிலைகுலைந்த பாகிஸ்தான் தரப்பில், கடும் சேதங்கள் ஏற்பட்டதாகத் தெரிகிறது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படைத் தலைவர் பரூகி, அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் ஹாட்லைன் மூலம் இந்திய பாதுகாப்புப் படைத் தலைவரை அழைத்து தாக்குதலை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார். இந்த தாக்குதலில் பாகிஸ்தானியர்கள் 29 பேர் கொல்லப்பட்டதாக அந்நாடு தெரிவித்தது.

இதோடு முடிந்துவிடவில்லை தோவலின் அதிரடி. மியான்மரில் இருந்து இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவதாக எழுந்த புகார் பக்கம் திரும்பியது அவரது பார்வை. இதை ஒடுக்க சர்ஜிகல் ஸ்ட்ரைக் எனப்படும் தாக்குதலுக்கு தோவல் திட்டமிட்டார். இதையடுத்து மியான்மர் எல்லைப் பகுதிக்குள் 2015ம் ஆண்டு ஜூனில் நுழைந்த இந்திய ராணுவம், அங்கிருந்த என்எஸ்சிஎன் (கே) பயங்கரவாத முகாம்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தியது. சுமார் 50-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இந்த தாக்குதல் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளிவரவில்லை.

இந்த நிலையில், பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்கும் மாநாட்டில் பங்கேற்பதற்காக அஜித் தோவல் சீனா சென்றுள்ளார். அந்த மாநாடு தொடங்குவதற்கு முன்பாகவே சீன பாதுகாப்பு ஆலோசகர் யாங் ஜீச்சியை, அஜித் தோவல் தனியாக சந்தித்துப் பேசியிருக்கிறார். அஜித் தோவலின் பயணத்தை ஒட்டி, தோக்லாம் விவகாரத்தில் சீனா, தனது நிலைப்பாட்டை தளர்த்தியிருக்கிறது. தோக்லாம் பகுதி தங்களுக்கே சொந்தம் என்றும், இந்திய படைகள் திரும்பப் பெற வேண்டும் என்றெல்லாம் சீன பத்திரிகைகள் எழுதி வந்தன. அஜித் தோவலின் பயணத்தை ஒட்டி, சீனாவின் ஜின்குஹா பத்திரிகை மோடி அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டுள்ளது. பிரதமர் மோடியின் சிறப்பான பொருளாதாரக் கொள்கைகளால் இந்தியா முன்னேற்ற பாதையில் பயணிப்பதாக கூறுகிறது அந்த பத்திரிகையில் வெளியான கட்டுரை. சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்களுடன் இணைந்து அஜித் தோவல் நாளை சந்திக்க இருக்கிறார். அஜித் தோவலின் சீன பயணம் இருநாடுகள் இடையிலான போர் பதற்றத்தை துடைத்தெறியும் என்று நம்பப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com