மின்சாரத்தை கொண்டு செல்ல உயர்மின் கோபுரங்களே நல்லது - ஏன் !

மின்சாரத்தை கொண்டு செல்ல உயர்மின் கோபுரங்களே நல்லது - ஏன் !

மின்சாரத்தை கொண்டு செல்ல உயர்மின் கோபுரங்களே நல்லது - ஏன் !
Published on

தமிழகத்தில் கெயில் குழாய் பதிப்புக்கு பிறகு , கொங்கு மண்டலம் மீண்டும் போராட ஆரம்பித்திருக்கிறது. கண்டு கொள்ளாமல் இருந்த அரசு, ஒரு கட்டத்தில் போராட்டத்தின் வீரியத்தை உணர்ந்து , விவசாயிகளை பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. ஆனால் கடைசியில் பேச்சுவார்த்தைக்கு வந்த விவசாயிகள் அங்கும் போராட முயல, கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பூமிக்கு அடியில் மின் கேபிளை பதிப்பதோடு, சாலை ஓரங்களில் இந்த திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை அவர்கள் தரப்பில் வைக்கப்படுகிறது. 

உயர்மின்கோபுர விவகாரத்தில் இப்போது வரை அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலிக்க தயாராக இல்லை. சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் தங்கமணி “ உயர் மின்னழுத்த கோபுரங்கள் வழியாக மட்டுமே 80 கிலோ வோல்ட் மின்சாரத்தை கொண்டு செல்ல முடியும், அதனை புதைவட கம்பிகள் மூலம் கொண்டு செல்வது சாத்தியமில்லை என கூறினார்.  

அமைச்சரின் பதில் சரியா, இதில் உள்ள சிக்கல் என்ன என ஆராய்ந்த போது சில முக்கிய தகவல்கள் கிடைத்தன. புதைவட கம்பிகளை பொருத்தவரை 5 வகையான கம்பிகள் உள்ளன. இவை மின் அழுத்தத்தை வைத்து வகைப்படுத்தப்படுகின்றன. அதிகபட்சமாக 132 கிலோ வோட் மின் அழுத்தம் கொண்ட கம்பிகளை புதைவடமாக மேற்கொள்ளலாம். தமிழகத்தில் மின் கோபுரங்கள் வழியாக செல்ல உள்ள கம்பிகளின் அழுத்தம் 80 கிலோ வோல்ட் மட்டுமே. பிறகு என்ன பிரச்னை என உங்களுக்கு தோன்றும். 

பூமிக்கடியில் செல்லும் கம்பிகளை பொருத்தவரை தூரம் மற்றும் மின்னழுத்த அளவு இரண்டும் நேரெதிரானவை. குறைந்த தூரத்துக்கு பயன்படுத்தினால் நன்று, அதிக தூரத்துக்கு பயன்படுத்தினால் பிரச்னை. அதன் சாதக, பாதகங்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம். 

சவால்கள் :

1. கோபுரங்களை காட்டிலும் பூமிக்கடியில் கேபிளை கொண்டு செல்வதற்கான செலவு மிக அதிகம். வெறும் கம்பிகளை மட்டும் புதைக்க முடியாது, மின்சாரம் வெளியே பாயாமல் தடுக்க உரிய தடுப்புகள் செய்ய வேண்டும். மேற்பரப்பை சீர் செய்ய வேண்டும்.        

2. மின் பாதையில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அதனை கண்டறிவது எளிதல்ல. அப்படியே கண்டறிந்தாலும் அதனை சரி செய்வது மிகவும் சவாலானது. ஆனால் கோபுரங்கள் கொண்ட மின்பாதையில் கண்டறிதல் மிக எளிது. நேர விரயம் குறையும்

3.புதைவட கேபிள்களில் பிரச்னை ஏற்பட்டு அதனை கண்டறிந்தாலும் அதற்கு ஆகும் செலவு என்பது புதிதாக புதைவட கேபிள் பதிப்பதற்கு ஆகுல் செலவிற்கு ஒத்தது. ஆனால் கோபுரங்களில் மிக குறைந்த விலையில் சரி செய்யலாம். ஆட்களும் அதிகம் தேவையில்லை

4. புதைவடங்களில் பிரச்னைகள் ஏற்படும் போது வாடிக்கையாளர்கள் அவதிப்படுவதை தவிர்க்க முடியாது. அதற்கு ஆகும் காலத்தை கணிக்க முடியாது. தூரமான இடங்களில் இருந்து மின்சாரம் கொண்டு வரும் போது , அதனை நம்பி இருக்கும் மின்நிலையங்கள் வேலையற்று போகும். ஆனால் கோபுரங்களில் அந்த பிரச்னை அதிகம் இருக்காது. 

5.புதைவட கேபிள்களில் ஒரு வேளை மாற்றம் செய்யவோ அல்லது புதிய தொடர்பை ஏற்படுத்தவோ முயன்றால் அதில் சிக்கல் உருவாகும். முழுமையாக இணைப்பை மாற்றும் அளவுக்கு கொண்டு செல்லும். 

நன்மைகள் :

1. மின் திருட்டு இருக்காது. நிபுணர்களை தவிர யாரும் கையாள முடியாது

2. சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு இருக்காது. காடுகள் வழியே சென்றாலும் விலங்குகள் பாதிப்படையாது

3. தேவைப்படும் நிலத்தின் அளவு குறைவு, மீண்டும் பயன்படுத்தும் வகையில் இருக்கும்

4. பாதுகாப்பு நிறைந்தது.

புதைவட கேபிள்கள் மற்றும் கோபுர மின்கம்பங்கள் இரண்டிலும் நன்மையும் சவால்களும் இருக்கின்றன. ஆனால் தற்போது தமிழகம் செயல்படுத்த உள்ள கம்பியில் செல்லும் மின் அழுத்தம் 80கிலோ வோல்ட். இதனை அதிக தூரம் பூமிக்கடியில் கொண்டு செல்ல முடியாது. மேலும் கம்பிகளில் மின்கசிவு ஏற்பட்டால் அதன் சேதம் மிகக் கடுமை, ஏனெனில் பூமிக்கடியில் சேதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம். கோபுரங்களை பொருத்தவரை காற்று மட்டுமே சவால். கம்பி அறுந்தால் அது உடனடியாக தெரியும் வகையில் இருப்பதால், கையாள்வதில் எளிது. செலவு, பராமரிப்பு, வாழ்நாள், புதிய திட்டங்கள் என பல விஷயங்களை ஆராயும் போது கோபுரங்களே சரியாக இருக்கும். புதைவடங்கள் ரிஸ்க்.. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com