தமிழகத்தில் பிளாஸ்மா தானம் : மக்கள் கருத்தும் மருத்துவர் விளக்கமும்..!

தமிழகத்தில் பிளாஸ்மா தானம் : மக்கள் கருத்தும் மருத்துவர் விளக்கமும்..!
தமிழகத்தில் பிளாஸ்மா தானம் : மக்கள் கருத்தும் மருத்துவர் விளக்கமும்..!
Published on

தமிழகத்தில் கொரோனாத் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் வழங்குவதின் மூலம் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களை காப்பாற்ற இயலும் என்ற பரபரப்புரை தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் கொரோனாவில் இருந்து ஏராளமான நபர்கள் மீண்டு வீடு திரும்பினாலும், அதில் பிளாஸ்மா தானம் செய்ய முன் வருபவர்களின் எண்ணிக்கையானது மிகவும் சொற்பமாகவே இருக்கிறது. கொரோனாவிலிருந்து காப்பாற்ற இப்படி ஒரு வாய்ப்பு இருந்த போதிலும் ஏன் மக்கள் தயங்குகிறார்கள் என்ற சந்தேகம் எழுந்தது. அச்சந்தேகத்தை மக்களிடமே சென்று தீர்த்துக்கொள்ளும் வேட்கையோடு களத்தில் இறங்கினோம்.

பிளாஸ்மா தானம் குறித்து, மதுரைப் பகுதியில் கொரோனாவிலிருந்து மீண்ட ஒருவரிடம் பேசினோம். அவர் கூறியதாவது “ எனக்கு பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. நான் நிச்சயம் செய்வேன். வேலைப்பளு காரணமாக செய்ய முடியாமல் இருக்கிறது. எங்கள் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் பிளாஸ்மா தானம் குறித்த எந்த விழிப்புணர்வும் இல்லை. அது ஒரு குருதிக்கொடை என்பதை மறந்து வேறு ஏதோ கற்பனையில் இருக்கின்றனர். ஆகவே பிளாஸ்மா தானம் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை  அரசு உச்சபட்ச வேகத்துடன் செய்ய வேண்டும்” என்றார்.

அதேப் பகுதியில் கொரோனாவிலிருந்து மீண்ட மற்றொரு நபரிடம் இது குறித்துக் கேட்டோம். அவர் கூறியதாவது “ நானே இன்னும் முழுமையாக குணமடையவில்லை. கொரோனா சிகிச்சை முடிந்த பின்னரும் உடல் இன்னும் சரியான நிலைக்கு வரவில்லை. உடலில் சக்தி குறைபாடு இருப்பது கண்கூடாகத் தெரிகிறது. அதனால் 3 அல்லது நான்கு மாதங்கள் கழித்து பிளாஸ்மா தானம் செய்யலாம் என்று இருக்கிறேன்.” என்றார்

திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவரிடம் கேட்டோம் “ எனக்கு பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் இது வரை மருத்துவமனையிலிருந்து யாரும் என்னைக் கூப்பிடவில்லை. கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பும், மூன்று நான்கு நாட்கள் கழித்தும் கொரோனா சிகிச்சை குறித்து சுகாதார பணியாளர்களிடம் இருந்து அத்தனை அழைப்புகள் வந்தன. ஆனால் பிளாஸ்மா தானம் குறித்து எனக்கு இது வரை எனக்கு ஒரு அழைப்பு கூட வரவில்லை. ஏன் இந்த வேறுபாடு எனத் தெரிய வில்லை. எங்கள் ஊரில் சிலர் பிளாஸ்மாவை உறுப்பு என நினைக்கிறார்கள். அதனால் அரசு உடனடியாக பிளாஸ்மா தானம் குறித்த விழிப்புணர்வை முன்னெடுக்க வேண்டும்” என்றார்.

இது குறித்து Dr subash DCH MD (Blood Transfusion)Prof & Head ,MMC Blood Bank அவர்களை தொடர்பு கொண்டு பேசினோம்.

பிளாஸ்மா தானம் குறித்து மக்கள் கூறிய கருத்துகளை எப்படி பார்க்கிறீர்கள்?

 மக்கள் கூறிய கருத்துகளுக்கு நான் பதிலளிக்கும் முன்னர் பிளாஸ்மா தானம் குறித்த சில விளக்கங்களை நான் அளிக்க விரும்புகிறேன். பிளாஸ்மா தானம் என்பது கொரோனாத் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் இரத்தத்தின் நோய் எதிர்ப்பு சக்தியில் உள்ள பிளாஸ்மாவை மட்டும் பிரித்தெடுப்பது ஆகும்.

 கொரோனாவிலிருந்து மீண்ட அனைவராலும் பிளாஸ்மா தானம் வழங்க இயலாது. அதற்கென்று சில வரைமுறைகள் உள்ளன. பிளாஸ்மா தானம் வழங்க நீங்கள் முன் வருகிறீர்கள் என்றால் முதலில் அது குறித்த முழுமையான விளக்கம் உங்களுக்குத் தரப்படும். அந்த விளக்கத்திற்கு பின்னர் பிளாஸ்மா வழங்குவதற்கான சம்மத படிவம் வழங்கப்படும். உங்களுக்கு சம்மதம் இருந்தால் மட்டும் அதில் கையெழுத்திட்டு நீங்கள் பிளாஸ்மா தானம் வழங்க முன் வரலாம். உங்களுக்கு சம்மதம் இல்லை என்றால் நீங்கள் தானம் வழங்கத் தேவையில்லை.

(சம்மத படிவம் - நோயாளியின் அனுமதி பெற்று வெளியிடப்படுகிறது) 

நீங்கள் பிளாஸ்மா தானம் வழங்க தகுதியானவரா என்பதை கண்டறிய முதலில் உங்கள் உடலில் இருந்து 10 மிலி அளவிலான ரத்தம் எடுக்கப்படும். அந்த ரத்தத்தில் உள்ள ரத்தத்தின் அளவு, புரதம் மற்றும் கால்சியத்தின் அளவு உள்ளிட்டவற்றோடு ஹெச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி மற்றும் ஹெபடைடிஸ் சி ஆகியவற்றுக்கான சோதனைகளும் நடத்தப்படும். இது மட்டுமன்றி சிபிலிஸ், மலேரியா மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறித்த சோதனையும் நடத்தப்படும்.

இந்தச் சோதனைகளைச் செய்ய எங்களுக்கு 4 மணி நேரம் தேவைப்படும். ஆகவே பிளாஸ்மா தானம் செய்ய முன் வருகிறவர்கள் முதல் நாளில் இரத்ததை எங்களிடம் கொடுத்து விட்டுச் செல்லலாம். இதற்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி பணியாளர்கள் இயங்குகிறார்கள். அந்தச் சோதனையில் தகுதி பெறும் நபர்கள் மட்டுமே பிளாஸ்மா தானம் செய்ய இயலும்.

அப்படி தகுதிப் பெறும் பட்சத்தில் அவரது உடலில் இருந்து 500 மிலி ரத்தமானது எடுக்கப்படும். அதிலுள்ள பிளாஸ்மா நோயாளிகளின் உடலில் செலுத்தப்படும்.

பிளாஸ்மா தானம் கொடுத்தப் பின்னர் அவர்களது உடலளவில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?

எந்தவித பாதிப்பும் ஏற்படாது. தற்போது வரை பிளாஸ்மா தானம் செய்தவர்கள், தங்களது உடலில் இருந்து ஏதோ பாரம் இறங்கியதுபோல் என்று உணர்வதாக கூறியிருக்கின்றனர். பிளாஸ்மா தானம் கொடுத்த அடுத்த 14 நாட்கள் கழித்து மீண்டும் தானம் செய்ய முன்வரலாம்.

மக்கள் மத்தியில் பிளாஸ்மா தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த என்ன விதமான முயற்சிகளை எடுத்துள்ளீர்கள்?

அரசு சார்பில் பிளாஸ்மா தானம் குறித்த முழுமையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறன. பிளாஸ்மா தானம் செய்வதற்கு தகுதியான நபர்களை தொலைப்பேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு பேசுகிறோம். பிளாஸ்மா தானம் கொடுத்தவர்களும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 

- கல்யாணி பாண்டியன் 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com