தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தேவைதானா ? ஒரு பார்வை

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தேவைதானா ? ஒரு பார்வை
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தேவைதானா ? ஒரு பார்வை

ஹிந்தி மூன்றாவது மொழியாக இல்லாததால் தான் மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் தமிழகத்திற்கு கிடைக்கப்பெறாமல் போய்விட்டது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுவதை பார்க்க முடிகிறது. நவோதயா பள்ளிகள் என்றால் என்ன தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வியும் மற்ற மாநிலங்களில் பள்ளிக் கல்வியும் எந்த அளவிற்கு தரம் வாய்ந்ததாக உள்ளது, தமிழகத்திற்கு நவோதயா பள்ளிகள் தேவைதானா என்பதை சற்றே விரிவாக பார்க்கலாம்.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நேரடியாக செயல்படக்கூடிய பள்ளிகள்தான் ஜவஹர் நவோதயா வித்யாலயா என்ற மத்திய அரசு பள்ளிகள். நாடு முழுவதும் இருக்கக்கூடிய கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்கும் வகையில் 1985 ஆம் ஆண்டு முதல் இந்த புதிய பள்ளிக்கல்வி நிலையங்கள் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. இந்தப் பள்ளிகளின் சிறப்பம்சமே கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் பள்ளியிலேயே தங்கிப் படிக்கும் வசதிகளை இலவசமாக மேற்கொள்ளப்படுவது தான். இது போன்று நாடு முழுவதும் மொத்தம் 598 நவோதயா பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

இந்த நவோதயா பள்ளிகளை பெரும்பாலான மாநிலங்கள் ஏற்றுக்கொண்ட போதிலும், மூன்றாவது மொழியாக ஹிந்தி கட்டாயம் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக தமிழகத்தில் இந்த பள்ளிகள் செயல்படவில்லை. தமிழக அரசு மற்றும் சில அரசியல் கட்சிகளின் தவறான முன்னெடுப்பு காரணமாகத்தான் ஏழை மாணவர்களுக்கு பயன்படும் நவோதயா பள்ளிகள் தமிழகத்திற்கு கிடைக்கப்பெறவில்லை என்ற குற்றச்சாட்டு தற்பொழுது அதிகம் எழத் தொடங்கியிருக்கிறது. 

தமிழகத்தில் மொத்தம் இருக்கக்கூடிய ஆரம்ப கல்வி பள்ளிகளின் எண்ணிக்கை 6362. இது வெறும் அரசு பள்ளிகள் மட்டும் தான். இதுவே பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் அதிக எண்ணிக்கையில் இருக்கக்கூடிய உத்தரப்பிரதேச மாநிலத்தை, தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டால் உத்தரப்பிரதேசத்தில் வெறும் 1905 அரசு ஆரம்பப் பள்ளிகள் மட்டுமே செயல்படுகிறது. 

தமிழ்நாட்டில் தனியார் ஆரம்பப் பள்ளிகளை 4118 ஆக இருக்கக் கூடிய சூழ்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 775 ஆக உள்ளது தான் வியப்பிற்குறியது. பீகார் மாநிலத்தை பொறுத்தவரை ஆரம்பப் பள்ளிகளின் எண்ணிக்கை 5444 உள்ள சூழ்நிலையில் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 1374 ஆக உள்ளது.  குஜராத் மாநிலத்தில் ஆரம்பக் கல்வி பள்ளிகளின் எண்ணிக்கை 1160 ஆனால் தனியார் வசம் 3504 பள்ளிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் கூட ஆரம்பக் கல்வி நிலையங்கள் அரசு சார்பில் 5,546 பள்ளிகள் மட்டுமே இயங்குகிறது. இதுவே மேல்நிலைப் பள்ளிகளைப் பொறுத்தவரை அரசு பள்ளிகள் மட்டும் தமிழகத்தில் 6362 ஆக உள்ளது. ஆனால் உத்தரபிரதேச மாநிலத்தில் வெறும் 1810 மேல்நிலைப் பள்ளிகள் மட்டுமே உள்ளது. இதுவே பீகார் மாநிலத்தில் 2129 பள்ளிகள் மட்டுமே உள்ள நிலையில் குஜராத்தில் வெறும் 451 பள்ளிகள் மட்டுமே உள்ளது. கர்நாடகத்தில் 1442 உயர்நிலைப் பள்ளிகள் மட்டுமே அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அரசு ஆசிரியர்கள் எண்ணிக்கை 

      ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள்        மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்
                 தமிழகம் - 57379                       தமிழகம் - 27420
         உத்திரபிரதேசம் - 6677                உத்திரபிரதேசம் -  979
                  பீகார் - 31382                       பீகார் - 10317
                குஜராத் - 4599                       குஜராத் - 2476
              கர்நாடகா - 43436                    கர்நாடகா - 7840

இப்படி கட்டுமானத்திலும், கல்வி தரத்திலும், தேவையான ஆசிரியர்கள் எண்ணிக்கையிலும் மற்ற மாநிலத்துடன் ஒப்பிட்டால் தமிழகம் முன்னோடி மாநிலமாகவே உள்ளது. மேலும் கிராமப்புற மாணவர்கள் தங்கி படிக்ககூடிய வகையிலான நூற்றுக்கணக்கான பள்ளிகளை தமிழக அரசே இலவசமாக செயல்படுத்தி வரும் நிலையில் நவோதையா பள்ளிகள் இல்லாததால் தமிழகத்தின் கல்வி தரம் குறைந்துவிடும் என்ற கூற்று உடைந்து விடுகிறது. 

தகவல்கள் : நிரஞ்சன் - செய்தியாளர் -டெல்லி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com