பஞ்சாப் புதிய முதல்வர்... பதறும் கட்சிகள்.. உத்தரபிரதேச தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?!

பஞ்சாப் புதிய முதல்வர்... பதறும் கட்சிகள்.. உத்தரபிரதேச தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?!
பஞ்சாப் புதிய முதல்வர்... பதறும் கட்சிகள்.. உத்தரபிரதேச தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?!

பஞ்சாப்பின் முதல் பட்டியிலன முதல்வராக பதவியேற்றுள்ள சரண்ஜித் சிங் சன்னிக்கு வாழ்த்துக்கள் ஒருபுறம் குவிந்துவரும் நிலையில், ஒருபுறம் அவரின் நியமனத்தை வைத்து விமர்சனமும் எழுந்து வருகிறது. சரண்ஜித் சிங் நியமனத்தில் காங்கிரஸுக்கு எதிர்க்க பகுஜன் சமாஜ்வாதி தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் ஆம் ஆத்மி தலைவர் பகவந்த் மான் ஆகியோர் முன்வைக்கும் விமர்சனம், `பட்டியிலன முதல்வர் என்பது காங்கிரசின் தேர்தல் நேர யுக்தி என்றனர்.

அதிலும் மாயாவதி, ``இது காங்கிரஸின் "தேர்தல் ஸ்டண்ட்" தவிர வேறுஒன்றுமில்லை. பஞ்சாப், உத்திரபிரதேசம் அல்லது பிற மாநிலங்களில் உள்ள பட்டியலின மக்கள் மற்றும் பிறப்படுத்தப்பட்ட மக்கள், சாதிவெறி கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் என்ன கொடுத்தாலும் நம்ப வேண்டாம். அவர்கள் கொடுக்கும் சலுகைகள் எல்லாம் உங்களின் வாக்குகளுக்காகவும், சுயநல நோக்கங்களுக்காகவும் கொடுக்கப்படுகின்றன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இது காங்கிரஸின் தேர்தல் ஸ்டண்ட்  என்பதற்கு உதாரணம் தான் பஞ்சாப்பில் வரவிருக்கும் சட்டசபை தேர்தலை பட்டியிலனத்தைச் சேர்ந்த முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் இல்லாமல் ஜாட் இனத்தைச் சேர்ந்த சித்து தலைமையில் எதிர்கொள்ள இருக்கிறது காங்கிரஸ். 

பட்டியிலன மக்கள் மீது காங்கிரஸ் இன்னும் நம்பிக்கை கொள்ளாமல் இருக்கிறது. எனவே பட்டியிலன மக்கள் காங்கிரஸின் இந்த இரட்டை நிலைப்பாடு குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பஞ்சாப் பட்டியிலன மக்கள் காங்கிரஸின்  இந்த பிடியில் சிக்க மாட்டார்கள் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஷிரோமணி அகாலி தளம் கட்சியுடன் பகுஜன் சமாஜ் வைத்துள்ள கூட்டணி காங்கிரஸுக்கு கசப்பை கொடுத்திருக்கிறது. எங்கள் கூட்டணியை பார்த்து பயப்படுகிறது. அதனால், பட்டியிலன மக்களை கவர இது போன்ற செயல்களை செய்கிறது. காங்கிரஸ் மற்றும் பிற அரசியல் கட்சிகள் பட்டியிலன மக்களை நெருக்கடி நேரங்களில் மட்டுமே நினைப்பது உண்மை" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதே விமர்சனத்தை பாஜகவும் வைத்துள்ளன. இந்த விமர்சனங்களுக்கும், காங்கிரஸின் முதல்வர் தேர்விலும் இருக்கும் பின்னணி பஞ்சாப்பில் இருக்கும் 32 சதவிகிதம் பட்டியிலன மக்களின் வாக்குகள். மற்ற மாநிலங்களை காட்டிலும், பஞ்சாப்பில் அதிகமான பட்டியிலன மக்கள் வசிக்கின்றனர். சில பிராந்தியங்களில், குறிப்பாக காங்கிரஸின் கோட்டையான தோபா - பியாஸ் மற்றும் சட்லூஜ்  பகுதிகளில் 40 சதவிகிதத்திற்கு மேல் அம்மக்கள் வசிக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டே காங்கிரஸ் முதல்வராக பட்டியிலனத்தை சேர்ந்தவரை முன்னிலைப்படுத்தியுள்ளது.

மாயாவதி கொந்தளிப்பது ஏன்?!

பகுஜன் சமாஜ் கட்சி (BSP), உத்தரபிரதேசத்தில் ஒரு வலிமையான கட்சி என்றாலும் பஞ்சாப்பிலும் போட்டியிட முடிவு செய்து, மாநிலத்தின் முக்கிய கட்சியான ஷிரோமணி அகாலி தளம் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. பகுஜன் சமாஜ் பஞ்சாப்பில் போட்டியிட காரணம், அந்தக் கட்சியை தோற்றுவித்த கன்ஷி ராம் பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்டவர் என்பதாலும், அதைவிட பஞ்சாப்பில் இருக்கும் 32 சதவிகிதம் பட்டியிலன மக்களும் தான். `பட்டியிலன மக்களின் சார்பு கட்சி' என்ற தன்னை முன்னிலைப்படுத்தும் பகுஜன் சமாஜ், ஷிரோமணி அகாலி தளம் கூட்டணி மூலம் பட்டியிலன வாக்காளர்களை கவர முயற்சித்து வருகிறது. 

இதற்கேற்ப, ஷிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல், ``தங்களின் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றால், துணை முதல்வராக பட்டியிலன சமூகத்தைச் சேர்ந்தவர் ஆக்கப்படுவார்" என்று அறிவித்திருந்தார். இந்த பிரச்சாரம் காங்கிரஸுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனை முறியடிக்கும் நோக்கிலே காங்கிரஸ் சரண்ஜித்தை முதல்வராக்கி இருக்கிறது. தற்போது காங்கிரஸ் செயலால் பகுஜன் சமாஜ் - ஷிரோமணி கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

பஞ்சாப்பில் மட்டுமல்ல, அதன் பக்கத்து மாநிலமான உத்தரப்பிரதேசத்திலும் இதன் தாக்கம் எதிரொலிக்கும் என மாயாவதி கணக்கு போடுகிறார். பஞ்சாப்புக்கு அடுத்தபடியாக உத்தரப்பிரதேசத்திலும் பட்டியிலன மக்கள் அதிகப்படியாக வாழ்கிறார்கள். இதனால் பஞ்சாப்பில் ஏற்படும் தாக்கத்தை பொறுத்து உத்தரப்பிரதேசத்திலும் பட்டியிலன மக்களுக்கு உரிய பிரதிநிதிதத்துவம் கொடுக்க காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது. அதற்கேற்ப காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா அளித்த பேட்டி அமைந்துள்ளது.

``சரண்ஜித்தை முதல்வராக தேர்வு செய்யும் முடிவு சமூக நீதியை பலப்படுத்தும். மேலும் இந்தியா முழுவதும் பட்டியிலன, பிற்படுத்தப்பட்ட மற்றும் பின்தங்கிய சகோதர சகோதரிகளுக்கு அதிகாரமளிப்பதற்கான புதிய கதவுகளைத் திறக்கும் நேரம் இது என்பது இந்த முடிவு மூலம் வரலாற்றில் பதிவு செய்யப்படுகிறது. ஆனால் பாஜகவும் மாயாவதியும் இந்த நியமனத்தை பாராட்டாமல் விமர்சிக்கிறார்கள். 

நாங்கள் மாயாவதியை வயதில் மூத்தவராக இந்திய அரசியல் மூத்த தலைவராக மதிக்கிறோம். அவரை, பஞ்சாப்பில் தங்கள் கூட்டணி கட்சியின் வேட்பாளராக பட்டியலினத்தை சேர்ந்தவரை அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இது அவர்களால் முடியுமா?.. பட்டியலின மக்களின் உரிமையில் எங்களின் முதல்படியே இது. விரைவில் பல மாற்றங்கள் நடக்கும்" என்று சூசகமாக பேசியுள்ளார். இவரின் பேச்சு உத்தரபிரதேச தேர்தலை மையமாக வைத்தும் இருக்கலாம் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். இதனால் வரவிருக்கும் பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேச தேர்தல்களில் பாஜகவுக்கும், மற்ற கட்சிகளுக்கும் காங்கிரஸ் கொடுக்கும் கடும் சவாலாக இது இருக்கிறது. இதனை எப்படி அவர்கள் சமாளிக்க போகிறார்கள் என்பதே இப்போதைய கேள்வி!

தகவல் உறுதுணை - IndiaToday, HindustanTimes

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com