கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும் தொற்று ஏற்படுவது ஏன்? - மருத்துவர்கள் விளக்கம்

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும் தொற்று ஏற்படுவது ஏன்? - மருத்துவர்கள் விளக்கம்

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும் தொற்று ஏற்படுவது ஏன்? - மருத்துவர்கள் விளக்கம்
Published on

இந்தியாவில் கொரோனாதொற்றின் இராண்டாவது அலை மக்களை பெருமளவில் அச்சுறுத்தி வருகிறது. இந்த அச்சுறுத்தலுக்கு ஆறுதல் தரும் விதமாக கொரோனா தடுப்பூசிகள் பார்க்கப்படுகின்றன. முன்கள பணியாளர்கள், 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசிகள் செலுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தடுப்பூசி போட்ட பின்னர் கொரோனா தொற்று ஏற்படுவது மக்களிடம் சில சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

ஆகையால் இந்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், பொதுநலமருத்துவர் Dr.A.B.ஃபரூக் அப்துல்லா மற்றும்  அரசின் சிறப்பு மருத்துவர் குழுவின் குகானந்தம் ஆகியோர் கூறிய விளக்கங்களை பார்க்கலாம். 

பொதுநலமருத்துவர் Dr.A.B.ஃபரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் இது குறித்து “குறிப்பிட்டதாவது,

“கேள்வி - இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் கொரோனா வருமா? பிறகு எதற்குத் தடுப்பூசி போட வேண்டும்?

முதல் விளக்கம்:

கொரோனா தொற்றுக்கு எதிரான முதல் தலைமுறை தடுப்பூசிகள் கொரோனா தொற்றைத் தடுக்காது. இருப்பினும் அவை கொரோனா தொற்றைத் தடுக்கும் விதத்திலேயே அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. அதாவது தடுப்பூசி பெற்றவரை கொரோனா வைரஸ் தாக்கி தொற்று உண்டாக்கலாம். ஆனால் அந்தத் தொற்று நிலை முற்றி அதற்கடுத்த நோய் நிலையாக மாறும் தன்மையைத் தடுப்பூசி தடுக்கும்.

தற்போது வந்த ஆய்வுகளின் படி, இரண்டு தடுப்பூசிகளுக்கும் தீவிர கொரோனா நோயைத் தடுக்கும் திறன் உண்டு என்பது தெரியவந்துள்ளது.

இரண்டாவது விளக்கம்:

தடுப்பூசியைக் கொண்டு நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகளில், இந்தத் தடுப்பூசிகள் எவ்வித வீரியம் கொண்ட கொரோனா தொற்றை தடுக்கின்றன என்பதை பரிசோதித்துள்ளனர்.

அதன் முடிவில், தடுப்பூசி பெற்றவர்களுக்கும் அறிகுறிகளற்ற கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு உண்டு என்றும் அத்தகைய வாய்ப்பைத் தடுப்பூசிகள் பெரிதாக குறைப்பதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே தடுப்பூசி பெற்றிருந்தாலும் கூட அறிகுறிகளற்ற கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு உண்டு.

அதன் காரணமாகத்தான் தடுப்பூசி பெற்றவர்களும் முகக்கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியைப் பேண வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

மூன்றாவது விளக்கம்:

தற்போது உள்ள தடுப்பூசிகளின் மூன்றாம் கட்ட மருத்துவ ஆய்வு முடிவுகளின்படி, கோவேக்சின் தடுப்பூசியின் நோய் தடுக்கும் திறன் 80% சதவீதமாகவும் கோவிஷீல்டு தடுப்பூசியின் நோய் தடுக்கும் திறன் 70% சதவீதமாகவும் உள்ளது. அதாவது தடுப்பூசியை ஒருவர் போட்டுக்கொண்டால் அவர் 70 - 80% கொரோனா நோயில் இருந்து பாதுகாக்கப்படுவார். அதே சமயம் 20 - 30% தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு.

இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் ஆய்வு குழுக்களில் தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை.

நான்காவது விளக்கம்:


இரண்டு தவணை தடுப்பூசிகளைப் பெற்றாலும் இரண்டாவது தவணையைப் பெற்ற பிறகு, கோவிஷீல்டு என்றால் இரண்டாவது டோஸ் போடப்பட்ட 14 நாட்கள் கழித்தும், கோவேக்சின் என்றால் இரண்டாவது தவணை போடப்பட்டதில் இருந்து 28 நாட்கள் கழித்தும் முழுமையான எதிர்ப்பு சக்தியுடன் செயல்படுகிறது என்பது தெரியவந்துள்ளது. எனவே இரண்டாவது தவணையாக தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் மேற்சொன்ன கால இடைவெளிக்குள் தொற்று ஏற்படும் வாய்ப்பு உண்டு

ஐந்தாவது விளக்கம் :

வேரியண்ட்களின் வருகை


இந்தியாவில் யூகே வேரியண்ட் , டபுள் ம்யூடண்ட் வேரியண்ட், தென் ஆப்பிரிக்க வேரியண்ட் உள்ளிட்டவை கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை ஏற்படுத்தி வருகின்றன. ஆகையால், தற்போதைய தடுப்பூசிகள் வேரியண்ட்களுடன் செயல்படும் போது அதன் முந்தைய செயல் திறனிலிருந்து குறையவே வாய்ப்பு உண்டு.

உதாரணம்: தென் ஆப்பிரிக்க வேரியண்ட்

உலகின் ஏனைய பகுதிகளில் 70% செயல் திறனுடன் செயல்படும் ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசி தென் ஆப்பிரிக்காவில் 22% சதவீதமாக செயல்படுகிறது. இந்தியத் தடுப்பூசிகள் வேரியண்ட்களுக்கு எதிராகவும் சிறப்பாக வேலை செய்கின்றன என்பதை ஆய்வுப்பூர்வமாக அறிவியலாளர்கள் நிறுவி வருகின்றனர்.

தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும், முக கவசம் அணிதல், தனி மனித இடைவெளி பேணுதல், அறிகுறிகளை அலட்சியம் செய்யாதிருத்தல், கைகளை சோப்பு போட்டுக் கழுவுதல், முடிந்தவரை வீடுகளுக்குள் இருத்தல், பயணங்களைத் தவிர்த்தல், அத்தியாவசியமின்றி முதியோர்கள் வீட்டை விட்டு வெளியேறாதிருத்தல் உள்ளிட்டவை நம்மை காக்கும்.

தடுப்பூசி ஒருவரைத் தீவிர கொரோனா ஏற்படுவதில் இருந்தும் கொரோனா மரணங்களில் இருந்தும் காக்கும் என்று தற்போது வரை கிடைத்துள்ள ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆகவே தடுப்பூசி போட்டுக் கொண்டு ஏனைய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாமல் இருப்பது தவறு” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசின் சிறப்பு மருத்துவர் குழுவின் குகானந்தம் கூறும் போது, “ அனைத்து தரப்பினருக்கும் கொரோனா தடுப்பூசி போட அரசு நடவடிக்கை வேண்டும். தடுப்பூசிகள் மிக நன்றாக வேலை செய்கிறது. ஆகையால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்பு நோய்தொற்று உருவாகிறது என்பது ஒரு பொய்யான பிரசாரம். வேறுபட்ட சூழ்நிலைகளால் சிலருக்கு தொற்று உருவாகியிருக்கலாம். இது வரை 12 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

அவர்களுக்கு பெரிதளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை . ஆகையால் அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற விதியை நடைமுறையாக்க வேண்டும்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com