வாய் துர்நாற்றம் எதனால் ஏற்படுகிறது? தடுக்கும் வழிகள் இதோ!

வாய் துர்நாற்றம் எதனால் ஏற்படுகிறது? தடுக்கும் வழிகள் இதோ!
வாய் துர்நாற்றம் எதனால் ஏற்படுகிறது? தடுக்கும் வழிகள் இதோ!

வாய் துர்நாற்றத்திற்கான காரணங்கள் மற்றும் அதைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்

நன்றாக பல்லை துலக்கினால் வாய் துர்நாற்றம் போய்விடும் என்று சிலர் எண்ணுகின்றனர். ஆனால் உண்மையில் சுத்தமாக பல் துலக்கினாலும் வாய்துர்நாற்றம் வரும். காரணம் என்னவென்றால், வாய் துர்நாற்றம் என்பது வாயோடு மட்டுமே தொடர்புடையது அல்ல.

வாய் மட்டுமல்ல, வயிற்றில் பிரச்னைகள் இருந்தாலும் வாய்நாற்றம் உண்டாகும். உணவுப்பழக்கம் தவிர ஆல்கஹால் மற்றும் புகைப்பழக்கத்தால் மக்கள் தொகையில் பாதிப்பேருக்கு இந்த பிரச்னை இருக்கிறது என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

10 சதவீதம் பேருக்கு மற்ற உடல் பிரச்னைகளான நீரிழிவு, கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்னைகளால் வாய் துர்நாற்றம் வருகிறது. வயிற்றில் அல்சர் இருப்பவர்களுக்கு வாய் துர்நாற்றம் வீசும் வாய்ப்புகள் அதிகம் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

அல்சர்
பொதுவாக பாக்டீரியா தொற்றால் அல்சர் பிரச்னை உருவாகிறது. குறிப்பாக ஹெலிகோபாக்டர் பைலரி(Helicobacter pylori)என்ற பாக்டீரியாவால் வயிற்றுப்புண் உருவாகிறது. ஆனால் இந்த பிரச்னையை மருந்து மாத்திரைகள் மூலம் சரிசெய்யமுடியும். ஆனால் இந்த பாக்டீரியா மட்டுமே வாய் துர்நாற்றத்துக்கு காரணமாக இருக்கமுடியாது. ஏனென்றால் ஹெலிகோபாக்டர் பைலரி பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ப்ரிவோடெல்லா இன்டர்மீடியா (Prevotella intermedia) என்ற மற்றொரு வாய் துர்நாற்றத்தை உருவாக்கக்கூடிய முக்கியமான பாக்டீரியா தொற்றும் இருந்தது அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே வாய் துர்நாற்றம் எழும்போது எதனால் என்பதை மருத்துவரிடம் சென்று பரிசோதித்து அதற்கான சிகிச்சை எடுப்பது நல்லது.

இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (Gastroesophageal Reflux Disease)


GERD என்று சொல்லப்படுகிற இரைப்பை உணவுக்குழாய் நோயும் வாய் துர்நாற்றத்துக்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். வயிற்றிலுள்ள அமிலம் உணவுக்குழாய்க்கு திரும்புவதால், மார்பு மற்றும் தொண்டையில் ஒருவித எரிச்சல் உண்டாவதுடன் வாய் துர்நாற்றத்துக்கும் காரணமாகிறது. மேலும் வயிற்றிலுள்ள அமிலம் வாய்க்கு வருவதால் பற்களை அரித்து பலவீனமாக்குகிறது. எனவே மருத்துவரை கட்டாயம் அணுகி அறிவுரை பெறுவது சிறந்தது.

மேலும் உடலிலுள்ள சல்ஃபர் அளவை சோதிக்க ‘sniff test’ எடுக்க வேண்டும். மேலும் வாய் துர்நாற்றம் வந்தால் பல்சொத்தை அல்லது ஈறுகளில் பிரச்னை இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். அதேபோல் தினமும் நாக்கை சுத்தம் செய்வதும் அவசியம்.

வாய் துர்நாற்றத்தைக் குறைக்க சில வழிகள்

  • சாப்பிட்டுவிட்டு 2 அல்லது 3 மூன்று மணிநேரம் கழித்து தூங்கச்செல்ல வேண்டும்.
  • ஒருநாளில் மூன்றுவேளை அதிகமாக சாப்பிடுவதற்கு பதிலாக, எளிதில் செரிக்கக்கூடிய வகையில் அதை பலவேளைகளாக பிரித்து சாப்பிடலாம்.
  • வாய் துர்நாற்றம் போக சூயிங்கம் அல்லது இதற்கென்றே விற்கும் பிரத்யேக மிட்டாய்களை வாங்கி பயன்படுத்தலாம்.
  • மது மற்றும் புகைப்பிடித்தல் பழக்கத்தை கைவிடல் சிறந்தது.
  • வெங்காயம், பூண்டு போன்ற உணவுகளை தவிர்க்கலாம்.
  • நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
  • அதிக தண்ணீர் குடிக்கவேண்டும். இது வயிற்றிலுள்ள நாற்றத்தை உருவாக்கும் பாக்டீரியாக்களை அழிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com