சோனு சூட் மீதான ஐடி ரெய்டு ஏன்... நெட்டிசன்கள், அரசியல்வாதிகள் ரியாக்ஷன் என்ன?!

சோனு சூட் மீதான ஐடி ரெய்டு ஏன்... நெட்டிசன்கள், அரசியல்வாதிகள் ரியாக்ஷன் என்ன?!
சோனு சூட் மீதான ஐடி ரெய்டு ஏன்... நெட்டிசன்கள், அரசியல்வாதிகள் ரியாக்ஷன் என்ன?!

நடிகர் சோனு சூட்  வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 6 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனைக்கான பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

நடிகர் சோனு சூட் கொரோனா பொதுமுடக்க காலத்தில் உதவி தேவைப்பட்ட பலருக்கும் முதல் ஆளாக சென்று உதவிய நபர். புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் தொடங்கி விவசாயிகள், மாணவர்கள், பசியால் வாடியவர்கள் எனத் தேடி தேடி உதவி ரியல் ஹீரோவாக திகழ்ந்து வருகிறார் நடிகர் சோனு சூட். இப்போதும் அவரின் உதவிகள் தொடர்கிறது. தான் நடத்திவரும் அறக்கட்டளை மூலமாகவும் ஏழைகள், மாணவர்கள், ஆதரவற்றோர் உள்ளிட்ட பலருக்கும் அவர் உதவிக்கரம் நீட்டி வருகிறார். 

இந்நிலையில்தான், நேற்று முதல் மும்பையில் இருக்கும் சோனு சூட் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 6 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவகின்றனர். இந்த சோதனைக்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் சொல்லப்பட்டு வந்தன. அண்மையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார் சோனு சூட். சந்திப்புக்கு பின் டெல்லி மாநில அரசின் புதிதாக கல்வி தொடர்பாக துவக்கியுள்ள திட்டத்திற்கு தூதராகவும் சோனு சூட் நியமிக்கப்பட்டார். அப்போதே அவர் அரவிந்த் கெஜ்ரிவால் உடன் அரசியலில் இணையப்போவதாக பேச்சுக்கள் எழுந்தன. இந்தச் சந்திப்பு நடந்த ஓரிரு நாள்களில் தற்போது வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. இதனால் இதன் பின்னணியில் அரசியல் அழுத்தம் இருப்பதாக தகவல் வெளியாகின. ஆனால் இவை அனைத்தும் யூகங்கள். 

உண்மையான காரணம் என்ன?

ரெய்டு குறித்து வருமான வரித்துறை சொல்லியிருக்கும் தகவல் ஒரு புகாருக்கு அடுத்து தான் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்பது தான். சோனு சூட்டுக்கு சொந்தமான நிறுவனத்திற்கும் லக்னோவை தளமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கும் இடையே நிலமோசடி குறித்து வரி ஏய்ப்பு புகார் பற்றிய விசாரணை தான் இது. சோதனை ஒன்றும் கிடையாது என்றுள்ளது வருமான வரித்துறை. லக்னோவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் அவர் ஏற்படுத்திய சொத்து ஒப்பந்தம் புகாருக்கான மூல காரணம் என்று சொல்லப்படுகிறது. 

இதனிடையே, சோனு சூட்டுக்கு ட்விட்டரில் ஆதரவு பெருகி வருகிறது. பலரும் கொரோனா காலத்தில் அவர் செய்த உதவிகளை குறிப்பிட்டு அவரை ரியல் ஹீரோ என்றும், #IndiaWithSonuSood #WeStandWithSonuSood என்பது போன்ற ஹேஷ்டேக்குகளை பதிவிட்டு வருகின்றனர். பலரும் சோனு சூட் மீதான அன்பை பொழிந்து இந்த தருணத்தில் அவருடன் நிற்பதாக பதிவிட்டு வருகின்றனர்.

அதேநேரம் அரசியல் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. சோதனைக்கு மத்திய பாஜக தலைமையிலான அரசுதான் காரணம் என்றும் சிலர் பதிவிட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுப்ரியா ஷிண்டே என்பவர், ``சோனு சூட் மீதான ரெய்டு விரக்தியின் அடையாளம். மோடி மற்றும் ஷா இனிமேலாவது உங்களை மேம்படுத்தி கொள்ளுங்கள்"என்று கூறியுள்ளார். திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ரா, ``சோனு சூட் வருமான வரித்துறையால் சோதனை செய்யப்பட்டுள்ளார். அடுத்து என்ன அமலாக்கத்துறையா?... பாஜக பதில் சொல்ல வேண்டும்" என்றுள்ளார்.

ஏற்கனவே சிவசேனா தனது சாம்னா பத்திரிகையில், இந்த சோதனை குறிப்பிட்டு `இது தலிபான்களின் மனநிலை' என்று பாஜகவை விமர்சித்து உள்ளது. சோதனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது ஆம் ஆத்மி. அதன் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ``சோனு சூட் உடன் லட்சக்கணக்கான மக்களின் பிரார்த்தனை இருக்கிறது. அந்த மக்கள் கஷ்டப்படும்போது தாராளமாய் உதவிகளை செய்தவர் சோனு சூட்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

-மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com