யார் இந்த வேடன்?
யார் இந்த வேடன்?PT

குரலற்றவர்களின் குரலா... அரசுக்கு எதிரான குரலா... யார் இந்த வேடன்?

முதல் பாடல் Voice of voiceless. அன்று முதல் இன்று வரை மலையாள உலகில் ராப் இசை மூலம் குரலற்றவர்களின் குரலாக வேடன் ஒலித்துக்கொண்டிருக்கிறார்.
Published on

2020 கொரோனா காலகட்டம்.. நான் பாணன் அல்ல, பரையன் அல்ல, என ஆக்ரோஷத்தோடு பாடும் ஒரு இளைஞனின் பாடல் சமூக வலைத்தளங்களால் வைரலானது. அதுதான் வேடனின் முதல் பாடல் Voice of voiceless. அன்று முதல் இன்று வரை மலையாள உலகில் ராப் இசை மூலம் குரலற்றவர்களின் குரலாக வேடன் ஒலித்துக்கொண்டிருக்கிறார்.

யார் இந்த வேடன்?

இலங்கையின் ஜாஃப்னா பகுதியை சேர்ந்த தாய்க்கும் கேரளாவின் பாலக்காடு பகுதியை சேர்ந்த தந்தைக்கும் பிறந்தவர் ஹிரந்தாஸ் முரளி என்கிற வேடன். திருச்சூர் அருகே உள்ள ஸ்வப்னபூமி எனும் பகுதியில் பிறந்து வளர்ந்த வேடனுக்கு தன்னுடைய நிலப்பரப்பு மூலமே அரசியல் விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டிருக்கிறது.

பள்ளிப்படிப்பு முடித்துவிட்டு ஒரு ஸ்டுடியோவில் பணிபுரிந்த காலகட்டத்தில் ஒரு பாடகருடன் ஏற்பட்ட பழக்கமே வேடனுக்கு இசை மீதான ஆர்வத்தை அதிகரித்திருக்கிறது. இதற்காக தன்னுடைய இயற்பெயரான ஹிரந்தாஸ் முரளி எனும் என்பதை வேடன் என மாற்றியிருக்கிறார். வேடன் என்பதற்கான அர்த்தம் அவர் வாழ்ந்த சமூக மக்கள் வேட்டைக்கு செல்வதை குறிப்பது.

காலனி பகுதியாக பார்க்கப்பட்ட ஸ்வப்னபூமியில் தன்னுடைய தந்தை வழி பாட்டி உட்பட பலர் முன்னொரு காலத்தில் நிலங்கள் வைத்திருந்ததையும் பின்னர் அந்த நிலங்கள் சூழ்ச்சிகள் மூலம் பறிக்கப்பட்டதையும் தன்னுடைய பாட்டியின் கதைகள் மூலம் தெரிந்து கொண்ட கதைகளைதான் வேடன் தன்னுடைய பாடல்களின் வரிகளாகவும் மாற்றி இருக்கிறார்.

தன் வரலாற்றிலிருந்து சமகால அரசியலை இணைத்த பாடகர்!

"காடுகளை சூறையாடுபவரின் நாட்டில்

அரிசியைத் திருடியவன் இறந்துவிடுவான்.

நம்பத்தகாதவன் ஆட்சி செய்யும் இடத்தில்

அவன் நிலத்தைக் கொள்ளையடித்து அழித்துவிடுவான்.

நன்கு அறியப்பட்ட முட்டாள்கள்

உங்களைப் போருக்கு அழைப்பார்கள்"

தன்னுடைய வரலாற்றில் இருந்து சமகால அரசியலையும் இணைத்து வரிகளை கட்டமைப்பது வேடனின் பாடலுக்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது. குறிப்பாக ”voice of voiceless” பாடல் வெளியான காலகட்டத்தில் CAA-வுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று கொண்டிருந்தது. இதற்காக கொச்சியில் நடைபெற்ற போராட்ட களத்தில் பாடுவதற்காக வேடன் அழைக்கப்பட்டார். அதுதான் அவரின் முதல் மேடையும் கூட.

மத்திய அரசை நேரடியாக விமர்சனம்

"போலி தேசபக்தர்களால் ஆளப்படும் ஒரு நாட்டில்,

மதம் மற்றும் சாதியின் நோய்கள் சீரழித்திருக்கிறது,

ஆட்சியாளருக்கு எந்த கவலையும் இல்லை.

அவர்கள் உங்கள் வரிப்பணத்தில்

மகிழ்ச்சியாக உலகம் சுற்றுகிறார்கள்"

என்கிற வரிகள் அப்போதே மத்திய அரசை நேரடியாக விமர்சனம் செய்வதாக இருந்தது. ஆனால், அப்போது வேடன் என்கிற தனிநபர் யார் என்பது பலருக்கு தெரியாது. அதனால்,அந்த தனிநபரின் விமர்சனங்களுக்கும் மதிப்பு இருந்தது கிடையாது.

10, 12 ஆண்டுகளுக்கு முன்பே கேரளா திரைத்துறையில் ராப் இசை பாடல்கள் அறிமுகம் ஆனாலும் கடந்த 4 முதல் 5 ஆண்டுகளாகவே இந்த வடிவ இசை அங்கு பிரபலம் அடைந்து வருகிறது. திருமாலி, நீரஜ் மாதவ், ஹனுமான்கிண்ட் போன்ற ராப் இசை கலைஞர்கள் வேகமாக வளர்ந்து வந்த காலகட்டத்தில் அந்த வளர்ச்சியில் வேடனுக்கும் இடம் கிடைத்தது.

அடுத்தடுத்து சமூக பிரச்சினைகளை மையப்படுத்தி வேடன் வெளியிட்ட பூமி, வா போன்ற பாடல்கள் பெரும் வரவேற்பை பெற, சினிமா வாய்ப்பும் வெகு சீக்கிரமாகவே கிடைத்தது. ஆனால், எவ்வளவு வேகத்தில் வளர்ந்தாரோ அதே வேகத்தில் வேடன் மீதான விமர்சனங்களும் அதிகரித்தன. 2021 ஆம் ஆண்டு வேடன் மீது சில பெண்கள் பாலியல் புகார்களை கூறினார்கள்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு வேடன் வெளிப்படையாக எந்த கருத்தும் சொல்லாமல் தவிர்த்து வந்தார். இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுகளுக்கு மன்னிப்பு கேட்டு வேடன் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியானது. இப்படி வெளிப்படையாக மன்னிப்பு கேட்டதை ஆதரித்து சமூக வலைத்தளத்தில் லைக் போட்ட மலையாள நடிகை பார்வதி மீதும் விமர்சனங்கள் எழவே அந்த கருத்தை அவர் நீக்கியிருந்தார்.

மாநில எல்லைகளை கடந்து பிரபலமான வேடன்

அதன் பின்னர் 2 ஆண்டுகள் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரையுலகில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட வேடன் தொடர் வெற்றிகளை பெற்றார். ”மஞ்சும்மேல் பாய்ஸ்” போன்ற வெற்றிப்படங்களுக்கு பாடல் எழுதியது மாநில எல்லைகளை கடந்து வேடனை கொண்டு சென்றது.

இதனால், கேரளாவின் இடதுசாரி அரசு நடத்தும் சில நிகழ்ச்சிகளிலும் வேடன் பாடுவதற்காக அழைக்கப்பட்டார். தொடர்ச்சியாக மத்திய அரசு மீதான விமர்சனங்களும் இது போன்ற நிகழ்வுகளும் வேடன் மீது அரசியல் சாயத்தை கொண்டு வந்தன.

நேர்காணலில் பாஜகவை கடுமையாக சாடிய ராப்பர்

கடந்த மாதம் வேடன் கொடுத்திருந்த ஒரு நேர்காணலில் பாஜக அரசின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சனம் செய்திருந்த சில நாட்களில் வேடன் வீட்டில் 6 கிராம் கஞ்சா இருந்ததாக கைது செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக வேடன் புலிப்பல் அணிந்திருந்ததாக அவர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த நிகழ்வு கேரளாவில் பெரும் புயலை ஏற்படுத்தியது.

பாஜகவை விமர்சனம் செய்ததற்காக தான் வேடன் கைது செய்யப்பட்டதாக பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர். இதற்கிடையே, இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற வேடன் போதை மருந்து உட்கொண்டதை ஒப்புக்கொண்டு அது தவறும் என்றும் இது போன்ற தவறுகளில் இருந்து அனைவரும் விலகியிருக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

எதிர்த்த வலது சாரி.. ஆதரித்த இடதுசாரி

இப்படிப்பட்ட சூழலில்தான் இப்போது மீண்டும் வேடன் பேசுபொருளாக மாறியிருக்கிறார்.

கேரளாவில் உள்ள இந்துத்துவ அமைப்பான ஐக்கிய வேதி அமைப்பின் தலைவரான சசிகலா, வேடன் இந்துமத சித்தாந்தங்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் சமூக சீர்கேடுகளை விளைவிப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறையில் புகார் அளித்திருக்கிறார். அவரை தொடர்ந்து பாஜகவின் கவுன்சிலர் மினிமோல் என்பவர் வேடன் மீது NIA நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருக்கிறார். வேடன் பிரதமர் பற்றி அவதூறாக பேசுவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாஜகவின் இந்த நடவடிக்கைக்கு கேரளாவின் சிபிஎம் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும் மக்களிடம் இருந்தும் கண்டனங்கள் வர தொடங்கியுள்ளன. இதன் காரணமாகவே கடந்த 2 நாட்களாக தமிழ்நாட்டிலும் வேடன் மிக வேகமாக பிரபலம் அடைந்து வருகிறார்.

வேடனை தடுப்பதற்கான வேலைகள்.... அவரின் பாடல்களே சாட்சிகள்!

தன்னுடைய முதல் பாடலான ”voice of voiceless” பாடல் வெளியான சமயத்தில் கேரளாவில் இப்போது எல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள் வேடன் தேவையில்லாத பிரச்சினையை ஏற்படுத்துகிறார் என்கிற விமர்சனங்கள் எழுந்தபோது பாதிக்கப்பட்ட ஒருவன் அவனுடைய வலிகளை பேச கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பையும் உங்களால் எப்படி தடுக்க முடிகிறது என கேள்வி எழுப்பியிருந்தார் வேடன்.

இப்போது, மீண்டும் வேடனை தடுப்பதற்கான வேலைகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது. இதற்கான பதில் வேடனின் பாடல்களிலேயே இருக்கிறது.

"அடக்குமுறை இருக்கும் இடத்தில்

கைகள் உயர வேண்டும்

பாகுபாடு இருக்கும் இடத்தில்

குரல்கள் உயர வேண்டும்!

மனிதர்கள் அடிமைகளாக இருக்கும் இடத்தில்

கலகங்கள் உயர வேண்டும்"

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com