என்.எஸ்.இ.யின் அடுத்த தலைவர் யார்? - அடுத்தகட்ட நகர்வு என்ன?

என்.எஸ்.இ.யின் அடுத்த தலைவர் யார்? - அடுத்தகட்ட நகர்வு என்ன?
என்.எஸ்.இ.யின் அடுத்த தலைவர் யார்? - அடுத்தகட்ட நகர்வு என்ன?

நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச். கடந்த சில வாரங்களாக உள்ளூர் மீடியா முதல் சர்வதேச மீடியா வரை விவாதிக்கப்பட்ட நிறுவனமாக இருந்தது. யார் அந்த யோகி என்னும் கேள்விக்கு இன்னும் விடை தெரியவில்லை என்றாலும் அடுத்தகட்ட நகர்வுக்கு என்.எஸ்.இ தயாராகிவிட்டது.

என்.எஸ்.இ.யின் தற்போதைய தலைமைச் செயல் அதிகாரி விக்ரம் லிமயே. 2017-ம் ஆண்டு சித்ரா ராமகிருஷ்ணா விலகியதை அடுத்து லியமே நியமனம் செய்யப்பட்டார். இவரது பதவிகாலம் வரும் ஜூன் மாதம் நிறைவு பெறுகிறது. வழக்கமாக தலைமைச் செயல் அதிகாரிகள் பதவி நீட்டிப்பு செய்யப்படுவது வழக்கம் என்றாலும், தற்போதைய சூழலில் அனைத்தையும் முறையாக நடத்துவதற்கான முயற்சியில் என்.எஸ்.இ இறங்கி இருக்கிறது.



பங்குச்சந்தையில் 25 ஆண்டு கால அனுபவம் மிக்கவராக இருக்க வேண்டும், ஐபிஓவை கையாளும் திறன் இருக்க வேண்டும், ஜூன் 30-ம் தேதியன்று 60 வயதை தாண்டி இருக்க கூடாது உள்ளிட்ட பல தகுதிகளுடன் சில நாட்களுக்கு முன்பு தேசிய அளவில் விளம்பரம் வெளியானது.

இது தொடர்பாக நிதிச்சந்தையில் அனுபவம் மிக்க சிலரிடம் பேசியபோது, என்.எஸ்.இ.க்கு தகுதியான தலைவர் கிடைப்பது சிரமமாக இருக்கும். ஏற்கெனவே பல பிரச்னைகள் என்.எஸ்.இ.யில் நடந்தபிறகு, இந்த சமயத்தில் புதிதாக ஒருவர் தலைமைச் செயல் அதிகாரியாக செல்வது என்பது ரிஸ்க் என நினைக்ககூடும். இதுவரை நடந்த அனைத்து பிரச்னைகளையும் புதிதாக பொறுப்பு ஏற்பவர் சரி செய்ய வேண்டும், ஊடகங்களிடம் பேச வேண்டும். இது மிகப்பெரிய சிக்கல். தவிர பல ஆண்டுகளாக என்.எஸ்.இ. ஐபிஓ தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது.



புதிதாக பொறுப்பேற்பவர் ஐபிஒவை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பது முக்கியமான சவால். ஆனால் தற்போதைய பிரச்சினைகளையெல்லாம் முடித்து செபியின் அனுமதி வாங்கி ஐபிஒ கொண்டுவருவது முடியாத விஷயம் அல்ல. ஆனால் சவாலான விஷயம். வேலைக்கு வந்த பிறகு சவால் வருவது என்பது வேறு, பொறுப்புக்கு வரும்போதே சவாலுடன் வருவது வேறு என அவர் நம்மிடம் பேசினார்.

மார்ச் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

தொடர்புடைய  சில வரிகள்...

·         என்.எஸ்.இ.யில் நடந்த முறைகேடு காரணமாக முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ஆனந்த் சுப்ரமணியன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

·         சித்ரா ராமகிருஷ்ணா கைது செய்யப்பட கூடும் என்பதால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின்  தாக்கல் செய்திருந்தார். ஆனால் டெல்லி நீதிமன்றம் அதனை ரத்து செய்துவிட்டதால் சித்ரா கைது செய்யப்படக்கூடும் என்னும் தகவல்கள் உலா வருகின்றன.

என்.எஸ்.இ தொடர்பான செய்திகள்  இன்னும் முடியவில்லை..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com