'உத்தராகண்ட் நாயகனின் எளிமையான பின்புலம்' - 'இந்தியன் ஐடல்' பவன்தீப் ராஜன் யார்?!

'உத்தராகண்ட் நாயகனின் எளிமையான பின்புலம்' - 'இந்தியன் ஐடல்' பவன்தீப் ராஜன் யார்?!
'உத்தராகண்ட் நாயகனின் எளிமையான பின்புலம்' - 'இந்தியன் ஐடல்' பவன்தீப் ராஜன் யார்?!

'இந்தியன் ஐடல்' ரியாலிட்டி ஷோ டைட்டிலை கைப்பற்றி வடமாநிலங்களில் நட்சத்திரமாக வலம் வருகிறார் இளம் இசை இசைக் கலைஞரான பவன்தீப் ராஜன். உத்தராகண்ட் மாநிலத்திலிருந்து பாலிவுட் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ள இவரது பின்புலத்தைப் பார்ப்போம்.

'இந்தியன் ஐடல்' ரியாலிட்டி ஷோ வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி. இதுவரை 12 சீசன்களை நிறைவு செய்துள்ளது இந்த நிகழ்ச்சி. 12-வது சீசனின் இறுதிப் போட்டி ஆகஸ்ட் 15 அன்று பிரமாண்டமாக நடந்தது. இதன் வெற்றியாளராக பவன்தீப் ராஜன் என்பவர் அறிவிக்கப்பட்டார்.

மொத்தம் ஐந்து போட்டியாளர்கள் இறுதிப்போட்டியில் கலந்துகொண்ட நிலையில், தனது தனித்துவ திறமையால் பாடகர் பவன்தீப் ராஜன் நடுவர்களை ஈர்த்தார். பரிசுத்தொகையாக அவருக்கு ரூ.25 லட்சம் அளிக்கப்பட்டது. பரிசுத்தொகையை தாண்டியும் அவருக்கு கிடைத்திருக்கும் புகழ் வெளிச்சம், அவரை தற்போது ஒரு ஸ்டாராக ஆக்கியிருக்கிறது. வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட உடனேயே வடமாநில நெட்டிசன்கள் அவரை ட்விட்டரில் கொண்டாடித் தீர்த்துவிட்டனர்.

பவன்தீப் ராஜன் யார்? - உத்தராகண்ட் மாநிலத்தின் சாம்பவாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது குடும்பமே சங்கீதப் பின்னணியை கொண்ட குடும்பம். அவரது தந்தை சுரேஷ் ராஜன் உத்தராகண்ட் மாநிலத்தில் புகழ்பெற்ற கவுமணி நாட்டுப்புறப் பாடகர். பவன்தீப்பின் சகோதரி ஜோதிதீப்பும் ஒரு பாடகர். தந்தையின் தடத்தைப் பின்பற்றியே பவன்தீப் ராஜனும் சிறுவயது முதலே இசை மீது கவனம் செலுத்தினார். பாடகர் என்பதோடு நிற்காமல் கிட்டார், கீபோர்டு, தபலா, பியானோ மற்றும் டோலாக் போன்ற இசைக்கருவிகளை முறையாக கற்றுக்கொண்டு, இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். தனது சிறுவயதிலேயே சிறந்த தபலா வாசிப்பவர் விருதையும் வென்றவர்.

இந்தியாவின் பல மாநிலங்களிலும், அதேநேரம் வெளிநாடுகளிலும் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள பவன்தீப், தனியாக இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். இவரின் இசையில் வெளியான 'யாகீன்' (2015) என்ற ஆல்பமும், 'சோலியார்' (2016) என்ற மற்றொரு ஆல்பமும் ஹிட் அடித்தன. ரிஷி வர்மா மற்றும் ஆராத்யா டைங் நடிப்பில் வெளியான இந்திப் படமான 'ரோமியோ என் புல்லட்' படத்தில் நான்கு பாடல்களைப் பாடியும் இருக்கிறார் பவன்தீப்.

இந்த நிலையில்தான் 'இந்தியன் ஐடல்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆரம்பம் முதலே ஒரு வலுவான போட்டியாளராக அறியப்பட்டார். இறுதிப்போட்டியில் சோலோவாக தானே இசையமைத்து பாடிய இவரின் பெர்ஃபாமென்ஸ் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியில் வென்றதை அடுத்து அவரை பாலிவுட்டின் பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார். மேலும், இந்த வெற்றியின் மூலம் அவருக்கு பாலிவுட்டில் நிறைய வாய்ப்புகள் வந்துள்ளன. சில படங்களில் நடிக்கவும், பாடவும் கமிட் ஆகி இருக்கிறார்.

இதைவிட இவரின் சொந்த மாநிலத்தின் கலை, சுற்றுலா மற்றும் கலாசார துறையின் நல்லெண்ணத் தூதராக நியமித்து உத்தரகாண்ட் மாநில அரசு அவரை பெருமைப்படுத்தி இருக்கிறது. இந்த நியமனத்தை அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் டமி அறிவித்ததுடன், "எளிமையான பின்புலத்தில் இருந்து வந்து, பவன்தீப் தனது திறமையால் இசை உலகில் ஒரு முத்திரையைப் பதித்துள்ளார். அவர் உத்தராகண்டை இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளிலும் பிரபலமாக்கியுள்ளார்" என்று கூறியிருக்கிறார்.

ஆம், முதல்வரின் கூற்று உண்மைதான். தன் கலைத் திறனால் உத்தராகண்டுக்கே புகழ் சேர்த்திருக்கிறார் பவன்தீப் ராஜன். இவரது ஒவ்வொரு பாடலும், கூடவே மீட்டும் இசையும் யூடியூபிலும் லட்சக்கணக்கான பார்வைகளை ஈர்ப்பவை.

இவ்வளவு பாராட்டுகளை பெற்றுவரும் பவன்தீப்புக்கு வயது 23 மட்டுமே. மேலும், இது அவரது முதல் ரியாலிட்டி ஷோ கிடையாது. முன்னதாக, 2015-ல் 'தி வாய்ஸ் இந்தியா' ரியாலிட்டி ஷோ டைட்டிலையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com