ஐ.நா 'பிளாக் லிஸ்ட்'டில் இருந்த ஆப்கன் இடைக்கால பிரதமர்: யார் இந்த முல்லா ஹசன் அகுந்த்?

ஐ.நா 'பிளாக் லிஸ்ட்'டில் இருந்த ஆப்கன் இடைக்கால பிரதமர்: யார் இந்த முல்லா ஹசன் அகுந்த்?
ஐ.நா 'பிளாக் லிஸ்ட்'டில் இருந்த ஆப்கன் இடைக்கால பிரதமர்: யார் இந்த முல்லா ஹசன் அகுந்த்?

ஆப்கானிஸ்தானின் ஆட்சியை கைப்பற்றிய மூன்று வாரங்களுக்குப் பிறகு, தலிபான்கள் இடைக்கால அரசுக்கான பிரதிநிதிகளை அறிவித்துள்ளனர். தலிபான் அமைப்பின் நிறுவனர் முல்லா உமரின் நெருங்கிய கூட்டாளியான முல்லா ஹசன் அகுந்த், பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முல்லா ஹசன் அகுந்த் யார்? - பஞ்சாவாய் மாவட்டத்தின் பஷ்முல் என்ற கிராமத்தில் பிறந்த அகுந்த், தலிபான்களின் பிறப்பிடமான ஆப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்தைச் சேர்ந்தவர். இப்போது 60 வயதை நெருங்கி இருப்பதாக நம்பப்படும் அகுந்த், தலிபான் அமைப்பின் மிக மூத்த உறுப்பினர்களில் ஒருவர். கக்கர் பழங்குடியினரின் வம்சாவளியைச் சேர்ந்த அகுந்த், பாகிஸ்தானில் உள்ள பல்வேறு மதரஸாக்களில் (இஸ்லாமிய பள்ளியில்) இஸ்லாத்தை பயின்றுள்ளார். 'தி கான்வர்சேஷன்' மீடியாவின் செய்திகள்படி, அகுந்த் சன்னி பிரிவு இஸ்லாமியர்களால் ஏற்படுத்தப்பட்ட தியோபாண்டிசம் (Deobandism) எனப்படும் இஸ்லாமிய சித்தாந்ததை கற்று தேர்ந்தவர்.

அமெரிக்க உளவுத்துறை ஆவணத்தின்படி, 1970-களில், ஆப்கானிஸ்தானில் கம்யூனிஸ்ட் ஆட்சியின்போது, அகுந்த் சோவியத் எதிர்ப்பு பிரிவான ஹெஸ்ப்-இ-இஸ்லாமியுடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். தலிபான் கிளர்ச்சி இயக்கத்தின் அடித்தளத்தை அமைத்த `ஒரிஜினல் 30' குழுவிலும் பங்கு வகித்துள்ளார்.

தலிபானுக்குள் அகுந்தின் பங்கு: ஐ.நா கூற்றுபடி, தலிபானின் நிறுவனர் முல்லா உமருக்கு "நெருங்கிய கூட்டாளியாகவும் அரசியல் ஆலோசகராகவும்" இருந்த அகுந்த், கடந்த சில தசாப்தங்களாக தலிபான்களுக்குள் செல்வாக்கு மிக்கவராக இருந்து வந்துள்ளார். இதுவரை ரெஹபரி ஷுராவின் தலைவராகவும் இருந்து வருகிறார். ரெஹபரி ஷுரா என்பது தலைமைத்துவ கவுன்சில் ஆகும். இந்த கவுன்சில் தலிபான்களின் முடிவெடுக்கும் அமைப்பாகும். அப்படிப்பட்ட அமைப்பில் தலைவர் பதவியை கடந்த 20 ஆண்டுகளாக வகித்து வருகிறார். 2001-ல் ஆப்கானிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் வெளியேற்றப்பட்டபோது, அகுந்த் பாகிஸ்தானில் இருந்து தனது நடவடிக்கைளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

அதற்கு முன்னதாக தலிபானின் முந்தைய ஆட்சியின்போது (1996-2001), அகுந்த் வெளியுறவு அமைச்சர், துணைப் பிரதமர், கந்தஹார் ஆளுநர் மற்றும் அமைச்சர்கள் குழுவின் முதல் துணை அதிகாரி போன்ற பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். தலிபான் இயக்கத்திற்குள் மிகவும் மதிக்கப்படும் நபராக, குறிப்பாக தலிபான்களின் உச்ச தலைவர் ஹைபத்துல்லா அகுன்சாடாவால் மிகவும் மதிக்கப்படும் நபராக அகுந்த் அறியப்படுகிறார். இந்த மதிப்பின் காரணமாகதான் பிரதமர் பதவிக்கு அகுந்தின் பெயரை பரிந்துரைத்து அகுன்சாடா என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தலிபான்களின் நடவடிக்கைகள் காரணமாக, 2001-ல் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் முல்லா ஹசன் அகுந்த்தை தனது 'பிளாக் லிஸ்ட்' பட்டியலில் வைத்தது. 2001-ல் உள்நாட்டு போர் தீவிரமடைந்தபோது, மத்திய ஆப்கானிஸ்தானில் அமைந்திருந்த 6-ஆம் நூற்றாண்டின் இரண்டு பாரம்பரிய நினைவுச்சின்னங்களான பாமியன் புத்தர்கள் சிலைகள் மீதான தாக்குதலுக்கு மூல காரணமாக அமைந்தவர் அகுந்த். இஸ்லாமியம் குறித்து பல படைப்புகளை எழுதியுள்ள, மத பின்புலத்தில் இருந்து தீவிர ராணுவ நடவடிக்கைகளில் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வந்துள்ளார் அகுந்த். இந்தநிலையில்தான் தற்போது இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com