5 மாநில தேர்தல்: தோல்வியடைந்த முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள் யார்? - முழு பட்டியல்

5 மாநில தேர்தல்: தோல்வியடைந்த முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள் யார்? - முழு பட்டியல்
5 மாநில தேர்தல்: தோல்வியடைந்த முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள் யார்? - முழு பட்டியல்

நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் எந்தெந்த முதல்வர்கள் மற்றும் முன்னாள் முதல்வர்கள் தங்கள் தொகுதிகளில் தோல்வியடைந்துள்ளனர் என்பது பற்றிய தொகுப்பு...

இந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தான் போட்டியிட்ட 2 இடங்களிலும், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கதிமா தொகுதியிலும் தோல்வியடைந்தனர்.



இதனைப்போலவே, உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் சிங் ராவத் மற்றும் கோவா முன்னாள் முதல்வர் சர்ச்சில் அலெமாவோவும் தங்கள் தொகுதிகளில் தோல்வியடைந்தனர். மேலும், பஞ்சாப் முன்னாள் முதல்வர்கள் பிரகாஷ் சிங் பாதல், அமரீந்தர் சிங்,ராஜிந்தர் கவுர் பாட்டல் ஆகியோரும் தாங்கள் போட்டியிட்ட தோல்வியடைந்தனர்.

உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தோல்வி:

காதிமா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பாஜகவை சேர்ந்த உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, காங்கிரஸ் வேட்பாளர் புவன் சந்திர கப்ரியிடம் 7,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தாமி 2012 மற்றும் 2017 ல் இரண்டு முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்றவர்.



ஜூலை 3, 2021 அன்று உத்தரகாண்ட் முதல்வராக இருந்த திரத் சிங் ராவத் ராஜினாமா செய்த பிறகு உத்தரகாண்டின் 10வது முதல்வராக தாமி பதவியேற்றார். 45 வயதில் பதவியேற்ற உத்தரகாண்டின் இளம் முதல்வர் இவர் ஆவார்.

2 தொகுதிகளிலும் தோல்வியடைந்த பஞ்சாப் முதல்வர் சன்னி:

பஞ்சாபில் கடந்த ஆண்டு முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் பதவி விலகிய பிறகு, சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தற்போதைய தேர்தலில் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார்.



சாம்கவுர் சாகிப் மற்றும் பாதவுர் தொகுதிகளில் போட்டியிட்ட சன்னி, பாதவுர் தொகுதியில் 37,558 வாக்குகள் வித்தியாசத்திலும் , சாம்கவுர் சாகிப் தொகுதியில் 7,942 வாக்குகள் வித்தியாசத்திலும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களிடம் தோல்வியடைந்தார்.

5 முன்னாள் முதல்வர்களின் தோல்வி:

காங்கிரஸை சேர்ந்த உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் சிங் ராவத் லால்கவுன் தொகுதியில் பாஜகவிடம் 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். திரிணாமுல் கட்சியின் கோவா முகமாக போட்டியிட்ட கோவா முன்னாள் முதல்வர் சர்ச்சில் அலெமாவோ, பெனாலியம் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

பஞ்சாப்பில் பல முறை முதல்வராக இருந்த இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதி, சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், தான் போட்டியிட்ட லாம்பி தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளரிடம் 11,357 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.



தனியாக கட்சி ஆரம்பித்து பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், தான் போட்டியிட்ட பாட்டியாலா தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் அஜித்பால் சிங்கிடம் 19,697 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதனைப்போலவே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாப் முன்னாள் முதல்வரான ராஜிந்தர் கவுர் பாட்டல், லெஹ்ரா தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com