'கிரிக்'கெத்து 7: ஒரு நாயகன் உதயமான 'கெத்தான' தருணம் - 16 வயதில் சிதறவிட்ட சிக்ஸர்கள்!

'கிரிக்'கெத்து 7: ஒரு நாயகன் உதயமான 'கெத்தான' தருணம் - 16 வயதில் சிதறவிட்ட சிக்ஸர்கள்!
'கிரிக்'கெத்து 7: ஒரு நாயகன் உதயமான 'கெத்தான' தருணம் - 16 வயதில் சிதறவிட்ட சிக்ஸர்கள்!

'கிரிக்கெட் உலகுக்கு ஒரு மாபெரும் வீரர் வந்துவிட்டார்' என்பதை அறிவிக்கும் தருணம் எப்போதும் அபாரமாக இருக்கும். ஒரு கமர்ஷியல் படத்தில் மாஸ் ஹீரோவின் அறிமுகம் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் எனச் சொல்லலாம். அதனை பல நாட்டு கிரிக்கெட் வீரர்கள் செய்துகாட்டி இருக்கிறார்கள். ஆனால், காலத்துக்கும் மறக்க முடியாத கெத்தான தருணத்தை சில வீரர்களே உருவாக்கியிருக்கிறார்கள். அதிலும் சிலரே பல்லாண்டுகளுக்கும் போற்றப்படுவார்கள். அப்படிபட்டவர்தான் கிரிக்கெட் உலகின் சாதனை நாயகன், இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர், சுருக்கமாக SRT.

தான் கிரிக்கெட் உலகில் மூடிசூடா மன்னனாக திகழப் போகிறோம் என்பதை அவர் அறிவித்தபோது வயது 16 என்பதுதான் ஆச்சர்யம். அப்போது பல பவுலர்களுக்கு தெரியாது, இந்தச் சிறுவன் நாம் வீசும் பந்துகளை நாலாபுறமும் சிதறடிப்பான் என்று. இந்த வார அத்தியாயத்தில் வெகு சுருக்கமாக ஒரு நாயகன் உருவான கெத்தான தருணத்தை சற்றே பின்னோக்கிப் பார்க்கலாம். 1989-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றது. நவம்பர் 15-ம் தேதி கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் சச்சின் அறிமுகமானார். அதேபோல பாகிஸ்தான் அணியில் வேகப் பந்துவீச்சாளர் வக்கார் யூனுஸ் (பின்னாளில் மிகச் சிறந்த வேகப்பந்து ஜாம்பவரானார்) அன்றுதான் அறிமுகமாகினர்.

முதல் டெஸ்ட்டில் 15 ரன்களை மட்டுமே எடுத்தார் சச்சின். ஆனால், பைசலாபாத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் சச்சின் தனது பேட்டிங்கை நிரூபித்து முதல் இன்னிங்ஸில் 59 ரன்கள் சேர்த்தார். 3-வது டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை சச்சின் தவறவி்ட்டு 41 ரன்களில் அப்துல் காதர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சாய்ல்கோட்டில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டியில் வாக்கர் யூனுஸ் வீசிய பந்து சச்சின் மூக்கில் பட்டு ரத்தம் சொட்டியது. ஆனால் மனம் தளராமல் ஓய்வுக்குப் பின் ஆடிய சச்சின் 2-வது அரைசதத்தை அந்தப் போட்டியில் நிறைவு செய்தார். 16 வயதில் இம்ரான் கான், வக்கார் யூனஸ், வாசிம் அக்ரம் மற்றும் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளரான அப்துல் காதிர் ஆகியோரை எதிர்கொண்டதன் மூலம் உலக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் புருவங்களை உயரவைத்தார் சச்சின் டெண்டுல்கர்.

சச்சின் டெண்டுல்கர் Vs அப்துல் காதிர்

இந்தியா - பாகிஸ்தான் இடையே நட்பு ரீதியான ஒருநாள் போட்டி நடைபெற்றது. அதற்கு ஐசிசி அந்தஸ்து கிடையாது. அதனால், வெற்றி - தோல்வி பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. சச்சின் அப்போதுதான் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அவரது முதல் போட்டியே பாகிஸ்தான் அணிக்கு எதிரானதுதான். அந்தத் தொடரில்தான் இந்தச் சம்பவமும் நடந்துள்ளது. அப்துல் காதிர் அப்போது புகழ்பெற்ற சுழற் பந்துவீச்சாளர். லெக் ஸ்பின்னரான அப்துல் காதிர் 10 வகையாக பந்தை வீசுவார். தன் தனித்துவமான சுழற் பந்துவீச்சால் மந்திரக் கைபந்துவீச்சாளர் என்று புகழ் பெற்றவர். இந்த நிலையில், அந்தப் போட்டியில் சச்சினுக்கு பந்து வீச வேண்டிய ஓவருக்கு முன் ஒரு விஷயத்தை கூறினார்.

"இது ஒருநாள் போட்டி அல்ல. அதனால், அடுத்த ஓவரில் நீ என் பந்தில் சிக்ஸ் அடிக்க முயற்சிக்கலாம். அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய நட்சத்திரம் ஆகி விடுவாய்" என கூறி இருக்கிறார் அப்துல் காதிர். சச்சின் அதை சவாலாக எடுத்துக் கொண்டார். அப்போது போட்டியில் 5 ஓவர்களில் 70 ரன்கள் எடுக்க வேண்டும். எப்படியும் அடித்து ஆடிதான் ஆக வேண்டும். எனவே, அப்துல் காதிர் சொன்னது போல அவர் ஓவரில் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியை விளாசினார். அந்தப் போட்டியில் சச்சின் 18 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார். இந்தியா அந்தப் போட்டியில் வெற்றி பெறாவிட்டாலும், சச்சினுக்கு பெயர் கிடைத்தது. சச்சினின் திறமைதான் அந்த சிக்ஸர்களுக்கு காரணம் என பின்னாட்களில் அப்துல் காதிர் கூறினார்.

அப்போதுதான் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்துக்கும் "நான் வந்துவிட்டேன் பந்துவீச தயாராக இருங்கள்" என கெத்தாக அறிவித்தார் சச்சின்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com