ஸ்டெர்லைட்டுக்கும் பாஜகவுக்கும் எங்கே தொடர்பிருக்கிறது ? : பாஜக
ஸ்டெர்லை ஆலைக்கும் பாஜகவுக்கும் தொடர்பிருக்கிறது என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் புதிய தலைமுறை இணையதளத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் பாஜகவுக்கும் ஸ்டெர்லை ஆலைக்கும் இடையே பல்வேறு வகைகளில் தொடர்பிருப்பதாக கூறியிருந்தார். அதற்கான பதிலளிக்கும் வகையில் இந்த கட்டுரை எழுதப்படுகிறது.
ஸ்டெர்லைட் ஆலைக்கான அனுமதிக்கும் பா.ஜ.க-வுக்கும் தொடர்பிருப்பதாகவும், முன்பிருந்த காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்ட சுற்றுச் சூழல் சட்டங்களை தளர்த்தி 2014-ல் ஆட்சிக்கு வந்த மோடி அரசு, ஸ்டெர்லைட் ஆலைக்கு சிறப்பு அனுமதி வழங்கியதாகவும் பொய்களை அள்ளிக் கொட்டியிருக்கிறார். அதாவது காங்கிரஸ் ஆண்ட காலமான 1986, 2006, 2010-ல் தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்கள் அனைத்தும் இயற்றப்பட்டதாகவும், அதன்படி பொதுமக்கள் கருத்தைக் கேட்காமல் எந்த புதிய தொழிற்சாலையையும், விரிவாக்கத் திட்டங்களையும் காங்கிரஸ் அரசு மேற்கொண்டதில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், மோடி அரசு 2014-ல் பொறுப்பேற்ற பிறகு, சட்டத்திருத்தங்கள் மேற்கொள்வதற்கு முன்பே சுற்றுச்சூழல் சட்டத்துக்கு புதிய விளக்கம் அளித்ததாகவும் அதன் அடிப்படையில் தான் ஸ்டெர்லைட் ஆலை தனது விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டதாகவும் ரவிக்குமார் கூறியுள்ளார்.
ஏதோ ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதாயம் அளிக்கவே பா.ஜ.க அரசு இந்த புதிய விளக்கத்தை அளித்ததாகவும், இந்த நிறுவனத்துக்கு சலுகைகளை வழங்கியதாகவும் பா.ஜ.க அரசு மீது மேற்கண்ட குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார். இவர் கூறுவது அனைத்தும் பொய் என்பதை நாம் நிரூபிக்கத் தேவையில்லை. விடுதலை சிறுத்தைகளின் கூட்டாளிகளான காங்கிரசும், தி.மு.க-வுமே இதை நிரூபிக்கின்றனர். அதாவது காங்கிரஸ் ஆட்சியில் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷும், தி.மு.க முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் ஜெயதுரை ஆகிய இருவருமே இதை பொய் என்று நிரூபிக்கிறார்கள். கடந்த 11.08.2010 அன்று, நாடாளுமன்றத்தில் தி.மு.க-வை சேர்ந்த தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரான S.R.ஜெயதுரை ஸ்டெர்லைட் நிறுவனம் குறித்து கேள்வி ஒன்றை எழுப்புகிறார். அதாவது, பொதுமக்கள் கருத்தைக் கேட்காமலேயே ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு தனது உற்பத்தியை 2 மடங்கு பெருக்குவதற்கான சுற்றுச் சூழல் அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதற்கு சட்டத்தில் இடமுள்ளதா? இது குறித்த விவரங்களையும், உண்மைகளையும் தரமுடியுமா என்று கேட்கிறார். அதற்கு மத்திய காங்கிரஸ் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பதில் கூறுகையில் “2006-ம் ஆண்டைய சுற்றுச் சூழல் விளைவு மதிப்பீடு சட்டத்தில் கூறப்பட்டுள்ள வழிமுறையின்படி, 2009 ஜனவரி 1 – அன்று மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தின் 2-வது விரிவாக்கத் திட்டங்களுக்கான அனுமதி தரப்பட்டதாக கூறியுள்ளார். அதற்கு மக்களை கலந்து ஆலோசிக்க தேவை இல்லை என்றும் நாடாளமன்றத்தில் கூறுகிறார். 2014-ல் மோடி அவர்கள் மக்களை கலந்தாலோசிக்காமல் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று ஸ்டெர்லைட்க்கு ஆதரவாக இயங்கியதாக கூறும் ரவிகுமார்க்கு 2010-ல் ஜெய்ராம் ரமேஷ் இவ்வாறு கூறியிருப்பது தெரியாதா? இந்த காலக்கட்டத்தில் இவரது தலைவர் திருமாவளவன் கூட பாராளுமன்ற உறுப்பினர் தானே?
ரவிக்குமார் கூறிய அனைத்துத் தகவல்களும் பொய்யானவை என்பதை இதிலிருந்தே தெரிந்துக் கொள்ளலாம். ஆக பா.ஜ.க-வுக்கும் தற்போது உற்பத்தி நடைபெற்றுவரும் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அதே போல பா.ஜ.க-வுக்கும் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் 2-வது விரிவாக்கத் திட்டங்களுக்கான அனுமதிக்கும் எந்த வித தொடர்புமில்லை என்பதை இதன் மூலம் அறியலாம். முதல் திட்டத்திற்கும், இரண்டாவது திட்டத்துக்கும் அனுமதி வழங்கியது தி.மு.க, காங்கிரஸ் கூட்டாட்சியில் தான் என்பதும் ஊரறிந்த வரலாறு. இவை தெரிந்தும் ரவிக்குமார் பாஜக மீது குற்றச்சாட்டுகள் கூறியிருப்பதை அரசியலோடு தொடர்புபடுத்தியும் பார்க்க வேண்டியுள்ளது. கடந்த மே ஒன்றாம் தேதி ராகுல் காந்தியை சந்திக்க தானும் தனது தலைவர் திருமாவளவன் அவர்களும் டெல்லி வந்திருக்கிறோம் என கீச்சியது முதல், ராகுலை சந்திக்க அவரது வரவேற்பரையில் காத்திருந்த புகைப்படம் பதிந்தது முதல், ராகுலை சந்தித்து எடுத்த புகைப்படம் வெளியிடுவது வரை டுவிட்டர் சமூக வலைதளத்தில் வெளியிட்டது வரை விசிக , காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்து கொள்ள முனைகிறது என்ற நோக்கமும் கூட வெளிப்படவே செய்கிறது.
அதே போல, பிரபல ஆங்கில பத்திரிக்கையான எக்கனாமிக் டைம்ஸ் பத்திரிகை, சுற்றுச் சூழல் துறையிடமிருந்து பெற்ற தகவல்களை கடந்த 25-ம் வெளியிட்டுள்ளது: அதில் 2006-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சுற்றுச்சூழல் விளைவு மதிப்பீட்டு சட்டத்தின் படி (EIA) தொழிற்பேட்டைக்கு உள்ளே அமையும் தொழிற்சாலைகளைத் தவிர்த்து, மற்ற ஏ பிரிவு மற்றும் பி.1 பிரிவு படி தொழிற்சாலைகள் மற்றும் திட்டங்களுக்கு மட்டுமே பொதுமக்கள் கருத்துக் கேட்பு அவசியம் என தெரிய வந்துள்ளதாக தனது செய்தியில் தெரிவித்துள்ளது. 2006-ல் இதை இயற்றியது காங்கிரஸ் அரசு தானே? 2014 டிசம்பரில் மத்திய மோடி அரசு காங்கிரஸ் அரசின் மெத்தன போக்கால் தேங்கிக்கிடந்த பல வளர்ச்சி திட்டங்களை துரிதப்படுத்தவே நடவடிக்கை எடுத்தது. இதை ஸ்டெர்லைட் ஆலைக்காக மட்டும் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக திரிக்கின்றார் ரவிகுமார். இந்த நடவடிக்கை 650 திட்டங்களுக்கு பொருந்தியது, அதில் ஒன்று தான் ஸ்டெர்லைட் ஆலை. ஸ்டெர்லைட் ஆலையை போல மீதம் 649 திட்டங்களும் ஏதேனும் சர்ச்சையில் சிக்கியுள்ளனவா? 2010-ஆம் ஆண்டே பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டாம் என்று மத்திய காங்கிரஸ் அமைச்சர் பாராளுமன்ற அவையில் குறிப்பிட்ட 2006 சட்டமே ஸ்டெர்லைட் ஆலை மக்களிடம் கருத்து கேட்காமல் மேலும் விரிவாக்கம் செய்வதற்கு காரணமே தவிர மத்திய அரசின் நடவடிக்கை அல்ல.
இது போக மத்தியில் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணியில் இருந்த காலங்களில் மொத்தம் 6 அனுமதிகளை ஸ்டெர்லைட் ஆலைக்கு மத்திய அரசங்கம் வழங்கியதாக பிரபல ஆங்கில செய்தி தொலைகாட்சி கோப்புகளை வெளியிட்டுள்ளது.
அனுமதி 1 – மார்ச் 2007
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மார்ச் 2007-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய 2x60 மெகாவாட் நிலக்கரி ஆலை அமைப்பதற்கு அனுமதி அளித்தது.
அனுமதி – 2 - ஆகஸ்ட் 2007
ஆகஸ்ட் 2007-ஆம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஸ்டெர்லைட் செப்பு ஸ்மெல்ட்டருக்கான விரிவாக்கத்திற்கு (டி-பாட்னென்னிங்) அனுமதி அளித்தது.
அனுமதி – 3 - ஜனவரி 2009
அடுத்து 2009-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு மற்றொரு அனுமதியை அளித்தது.
அனுமதி – 4 - மார்ச் 2010
2010-ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் பாராளமன்றத்தில் தூத்துக்குடி மாநகராட்சியில் மாசுபாடு பற்றிய ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், எந்தவிதமான குற்றச்சாட்டும் விதிமீறல்களும் ஸ்டெர்லைட்க்கு எதிராக இல்லை என்று தெரிவித்தார்.
அனுமதி – 5 – ஆகஸ்ட் 2010
2010-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11-ஆம் தேதி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷிடம் பாராளமன்றத்தில் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது ''ஸ்டெர்லைட் ஆலையின் திறனை இரட்டிப்பாக்குவதற்கு பொதுமக்களிடம் கலந்தாலோசிக்க தேவை இல்லை என மத்திய காங்கிரஸ் அரசு அனுமதி அளித்துள்ளதா?” என்ற வினாவிற்கு “2006-ம் ஆண்டைய சுற்றுச் சூழல் விளைவு மதிப்பீடு சட்டத்தில் கூறப்பட்டுள்ள வழிமுறையின்படி, 2009 ஜனவரி 1 – அன்று மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தின் 2-வது விரிவாக்கத் திட்டங்களுக்கான அனுமதி தரப்பட்டதாக கூறியுள்ளார். அதற்கு மக்களை கலந்து ஆலோசிக்க தேவை இல்லை என்றும் நாடாளமன்றத்தில் கூறுகிறார்.
அனுமதி – 6 – ஜூலை 2012
ஆறாவதாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ஜூலை 7, 2012-இல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஸ்டெர்லைட் ஆலைக்கு கூடுதல் கட்டுமானத்திற்கான அனுமதியை வழங்கியது.
இத்தனை அனுமதிகளை வழங்கி ஸ்டெர்லைட்டை கொண்டாடி அழகு பார்த்த காங்கிரஸ் கட்சியை கிள்ளுக்கு கூட தொடாமல் பா.ஜ.க-வின் மீதும் மோடியின் மீதும் மொத்த பழியையும் போட முனைவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் கதையாகும்.
ரவிகுமார் அவர்கள் வருத்தப்பட்டாலும் ஸ்டெர்லைட் குறித்தும் அதில் முன்னாள் காங்கிரஸ் நிதி அமைச்சர் சிதம்பரம் அவர்களின் தொடர்பு குறித்தும் பேசாமல் இந்த தலைப்பு முழுமை பெறாது. இங்கிலாந்து நாட்டின் Financial Services Authority (FSA), ஸ்டெர்லைட் நிறுவனத்தை "வேதாந்தா" என்று பெயர் மாற்றம் செய்ய அனுமதித்ததற்கு ஒரு ஆண்டிற்கு முன்பு 2002-ல் வாஜ்பாய் அரசாங்கத்தில் இந்திய அமலாக்கத்துறை, வேதாந்தா நிறுவனத்தின் சேர்மேன் அனில் அகர்வாலின் குடும்பத்தினருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டிஸில், வோல்கான் மற்றும் ட்வின்ஸ்டார் ஆகிய நிறுவனங்களை தவறாக பயன்படுத்தி, அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதற்கு விளக்கம் கேட்கப்பட்டது. இந்த சர்ச்சையினாலேயே இந்தியாவில் இருந்து லண்டனிற்கு நிரந்தரமாக அனில் அகர்வால் குடி பெயர்ந்தார் என்றும் கூறப்படுகிறது. 2003-ஆம் ஆண்டு, பம்பாய் உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜராகி ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக இந்த வழக்குகளில் வாதாடினார். பிறகு, ப.சிதம்பரம் வேதாந்தா நிறுவனத்தின் ஒரு நிர்வாக இயக்குனராக நியமிக்கப்படுகிறார். உடனடியாக 2004-ஆம் ஆண்டு, மத்தியில் காங்கிரஸ் அரசாங்கம் அமையவே, ப.சிதம்பரம் நிதி அமைச்சராக நியமிக்கப்படுகிறார்.
2007-ஆம் ஆண்டு, ப.சிதம்பரத்தின் தலைமையிலான நிதி அமைச்சகம், இரும்பு தாது ஏற்றுமதி செய்ய வரியை நிர்ணயிக்கிறது. அதன்படி, ஒரு மெட்ரிக் டன் இரும்பு தாதுவை ஏற்றுமதி செய்ய ₹300என்ற Export Duty-யை விதிக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய இரும்பு தாது தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனமான சீசா கோவா(Sesa Goa) இதனால் வீழ்ச்சியை சந்திக்கிறது. சீசா கோவா-வின் 51% பங்குகளை வைத்திருந்த ஜப்பானிய நிறுவனமான மிட்சுய் பின்சிடெர் (Mitsui Finsider), தனது 51%பங்குகளை விற்க முடிவு செய்கிறது. இதை வாங்குவதற்கு, ஆர்ச்சிலார் மிட்டல் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் போட்டியில் இருந்த நிலையில், ₹ 2036- க்கு ஒரு பங்கு என்ற அடிப்படையில், சீசா கோவா-வின் 51%பங்குகளையும் வாங்குகிறது "வேதாந்தா" நிறுவனம்.
இரண்டு மாதங்களுக்கு பின்னர், மே-3 ஆம் தேதி, இரும்பு தாது ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த Export Duty-யை பெரும் அளவில் குறைத்து உத்தரவிடுகிறார் ப.சிதம்பரம். ஒரு டன் இரும்பு தாது ஏற்றுமதி செய்ய ₹300 இருந்ததை மிகப்பெரிய அளவில் குறைத்து வெறும் ₹50 என மாற்றி உத்தரவு பிறப்பிக்கிறார். இந்த வரி குறைப்பு அனைத்து இரும்பு தாது ஏற்றுமதிகளுக்கும் பிறப்பிக்கப்பட்டது இல்லை. 62% க்கு கீழ் இரும்பைக் கொண்ட இரும்பு தாதுவிற்கு மட்டும் இந்த வரி குறைப்பு அமலுக்கு வருகிறது. இந்தியாவில், 62% க்கு கீழ் இரும்பு கொண்ட இரும்பு தாதுவை ஏற்றுமதி செய்த மிகப்பெரிய நிறுவனம், வேதாந்தா தான். இவ்வாறெல்லாம் வேதாந்தாவிற்காக யார்யாரெல்லாம் எவ்வாறெல்லாம் 2004-2014 காலங்களில் செயல்பட்டார்கள் என்று எடுத்தால் ஒரு புத்தகமே எழுதலாம்.
மேலும் ரவிக்குமார் கூறுகையில், எம்.என்.சி நிறுவனங்கள் அதிக அளவில் பா.ஜ.க-வுக்கு நன்கொடை கொடுத்து வருவதாகவும், ஸ்டெர்லைட் நிறுவனம் தான் அதிக அளவில் பா.ஜ.க-வுக்கு நன்கொடை வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். பா.ஜ.க நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெற்றிருந்தாலும் எந்த விபரங்களையும் மறைப்பதில்லை, அனைத்து விபரங்களும் பொது வெளியில் உள்ளன. இந்த தகவல்கள் வருமான கணக்கில் காட்டப்பட்டு முறையாக தணிக்கை செய்யப்படுகிறது.
பா.ஜ.க மீது இவ்வளவு குற்றம் கூறும் ரவிக்குமார் ஸ்டெர்லைட் நிறுவனத்திடமிருந்து, காங்கிரஸ் கட்சி எதையும் பெறாதது போல பேசுகிறார்? ஆனால் கடந்த 2014-ம் ஆண்டு Firstpost ஆங்கிலப் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில், காங்கிரஸ் கட்சி தான் அந்த ஆண்டில் ஸ்டெர்லைட் நிறுவனத்திடமிருந்தும், அதன் தாய் நிறுவனமான இலண்டனிலுள்ள வேதாந்தா நிறுவனத்திடமிருந்தும் அதிக நன்கொடைகள் வாங்கிய கட்சி என புள்ளி விபரத்துடன் குறிப்பிடுகிறது. கட்சிகளுக்கு கார்ப்ரேட்டுகள் நன்கொடை கொடுப்பது ஒன்றும் புதிய விஷயமில்லையே? முறையாக அனுமதிக்கப்பட்டு காலம் காலமாக நடைமுறையில் இருப்பது தானே இது? கார்ப்பரேட் நிதி பெறாத கட்சி என்று எதுவும் இந்தியாவில் உள்ளதா ?
குறிப்பு : கட்டுரை உள்ள அம்சங்கள் கட்டுரையாளரின் கருத்து
ஸ்டெர்லைட்டுக்கும் பாஜகவுக்கும் தொடர்பிருக்கிறது ! என்ற ரவிக்குமார் எழுதிய கட்டுரையை படிக்க : https://goo.gl/uJ3gNx