கிரண்பேடி, நாராயணசாமி இடையே என்னதான் பிரச்னை?
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும், முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அப்படி என்னதான் அவர்களுக்குள் பிரச்னை?
யூனியன் பிரதேசமான புதுச்சேரி மாநிலம் மத்திய அரசின் நேரடி ஆளுமையின் கீழ் இருந்து வருகிறது. புதுச்சேரிக்கென தனி சட்டப்பேரவை இருந்தாலும், முதலமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் துணை நிலை ஆளுநரின் மேற்பார்வையில்தான் செயல்பட வேண்டும். அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வருமாறு அறிவுறுத்திய கிரண் பேடி, அதிகாரிகளுக்கென தனி வாட்ஸ் ஆப் குழுவை ஏற்படுத்தி பணி விவரங்களை பதிவு செய்ய உத்தரவிட்டார். அதிகாரி ஒருவர் அந்தக் குழுவில் தவறான தகவலைப் பதிவிட்டதால், தலைமைச் செயலாளருக்கு தெரிவிக்காமலேயே அவரை பணியிடை நீக்கம் செய்து கிரண் பேடி நடவடிக்கை எடுத்தார். இந்த விவகாரம் அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களிடயே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தெரிவிக்காமல், அதிகாரிகளை வைத்து கூட்டங்கள் நடத்தப்பட்டன. இது தொடர்பாக உரிமை மீறல் பிரச்னை கொண்டு வரப்பட்டு, கிரண் பேடிக்கு ஆதரவாக செயல்பட்ட நகராட்சி ஆணையர் சந்திரசேகரன் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். துணைநிலை ஆளுநரிடம் இருந்து வரும் எந்த உத்தரவையும், தனது அனுமதியின்றி செயல்படுத்தக்கூடாது என நாராயணசாமி உத்தரவிட்டதால் மோதல் அதிகரித்தது. இதன்பின் ஆட்சியாளர்களை சமூக வலைதளங்களில் வெளிப்படையாக விமர்சிக்க ஆரம்பித்த கிரண் பேடி, நாராயணசாமிக்கு எதிராக 32 கேள்விகளை வாட்ஸ் ஆப் மூலம் வெளியிட்டார். அமைச்சரவையின் அனுமதி இல்லாமல் அதிகாரிகள் யாரும் கிரண் பேடியை சந்திக்ககூடாது என நாராயணசாமி தெரிவித்ததை அடுத்து, இருவருக்கும் இடையேயான மோதல் உச்சத்தை எட்டியது. இதனிடையே உள்துறை அமைச்சகம் மூலம் 3 நியமன எம்.எல்.ஏக்களுக்கு கிரண் பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தது, புதுச்சேரி அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியது. நியமன எம்.எல்.ஏக்கள் தொடர்பான கோப்புகள் முறையற்ற வகையில் உள்ளதாகக் கூறி புதுச்சேரி சபாநாயகர் அதனை துணைநிலை ஆளுநர் மாளிகைக்கே திருப்பி அனுப்பினார். நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமிநாராயணன் வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் புதுச்சேரி அரசியலில் அதிர்வுகள் பலமாக இருக்கும் என்பது மட்டும் உறுதி.