6 மாதத்தில் நொறுங்கிய ராயுடுவின் கனவு!

6 மாதத்தில் நொறுங்கிய ராயுடுவின் கனவு!

6 மாதத்தில் நொறுங்கிய ராயுடுவின் கனவு!
Published on

ஆறு மாதத்துக்கு முன் கொடுத்த பேட்டியொன்றில், இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, சொன்னார், ‘’4 வது வரிசையில் இறங்கும் வீரருக்கான கவலை இனி இல்லை. அந்த இடத்துக்கு அம்பத்தி ராயுடு அம்சமாக பொருந்துகிறார்’’ என்று. இதையேதான் சொன்னார் துணை கேப்டன் ரோகித் சர்மாவும். இதனால் உலகக் கோப்பைக்கான அணியில் ராயுடுவிடம் இடம் உறுதி என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த வாய்ப்பு, விஜய் சங்கருக்கு சென்றிருக்கிறது. ஆறு மாதத்துக்குள் இப்படியொரு மாற்றம் வரும் என்று கண்டிப்பாக எதிர்பார்த்திருக்க மாட்டார் ராயுடு!. 

கிட்டத்தட்ட அணியில் இருந்து ஓரங்கப்பட்டுவிட்ட ராயுடுவுக்கு தேசிய அணியில் வாய்ப்பு கிடைத்ததற்கு காரணம், கடந்த ஐபிஎல் தொடர்! இந்த தொடரில்தான், அவர் தோனி தலைமையிலான சென்னை அணிக்கு வந்தார். அவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கினார் தோனி. அவர் நினைத்த மாதிரியே விளாசினார் ராயுடு. 16 போட்டிகளில் 602 ரன். இதையடுத்து ராயுடு மீது தேர்வுக் குழுவினர் பார்வை பட, இங்கிலாந்து தொடருக்கு அழைக்கப்பட்டார். ஆனால், யோ-யோ தகுதி தேர்வில் அவுட். அந்த வாய்ப்பு பறிபோனது. பிறகு கடும் முயற்சிக்குப் பின் யோ- யோவில் தேர்வான ராயுடுவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. 

கடந்த பிப்ரவரியில், நியூசிலாந்தில் நடந்த ஒரு நாள் போட்டியில் 90 ரன் அடித்து 35 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற வழி வகுத் தது வரை, உலகக் கோப்பையில் ராயுடுவின் இடம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அந்த தொடரில் 5 போட்டியில் 190 ரன் எடுத்திருந்தார். ஆனால், அடுத்து உள்ளூரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ராயுடு சொல்லிக்கொள்ளும்படி ஆடவில்லை. 2, 18, 13 என அவர் ரன் கணக்கு இருக்க, ஃபார்ம் கேள்விக்குறியானது. ஐபிஎல் தொடரிலும் அவரிடம் மேஜிக்கைப் பார்க்க முடியாததால் கழற்றிவிடப்பட்டிருக்கிறார் ராயுடு. 

இதுவரை 55 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ராயுடுவின் சராசரி, 47.05. அதிகமான பேட்டிங் சராசரியில் விராத் கோலி (59.57), தோனி (50.37), ரோகித் சர்மா (47.39) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் ராயுடு இருக்கிறார் என்கிறது ஐ.சி.சி!

“ராயுடுவுக்கு அதிகமாக வாய்ப்புகள் கொடுத்தோம். ஆனால், விஜய்சங்கர் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்றிலும் சிறப்பாக செயல்படுவ தால் அவரை தேர்வு செய்தோம்” என்கிறார் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்.

கடந்த வருடம் குறுகிய ஓவர் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக, ரஞ்சி தொடரில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார், 33 வயதான ராயுடு. அதற்கு காரணம் உலகக் கோப்பைதான்! இப்போது அவசரப்பட்டு அந்த முடிவை எடுத்துவிட்டோமோ என்று நினைத்திருப் பார். ஏனென்றால், கொண்டாட்டங்களை மட்டுமல்ல, கிரிக்கெட் வருத்தங்களையும் சேர்த்தே தரும்!
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com