பெரும்பாலான 'பிங்க் பால் டெஸ்ட்ஸ்' 5 நாட்களுக்கு முன்பே முடியும் காரணம் தெரியுமா?

பெரும்பாலான 'பிங்க் பால் டெஸ்ட்ஸ்' 5 நாட்களுக்கு முன்பே முடியும் காரணம் தெரியுமா?
பெரும்பாலான 'பிங்க் பால் டெஸ்ட்ஸ்' 5 நாட்களுக்கு முன்பே முடியும் காரணம் தெரியுமா?

கிரிக்கெட்டின் அசல் வடிவம் என டெஸ்ட் கிரிக்கெட் போற்றப்படுகிறது. 18-நூற்றாண்டின் பிற்பாதி முதல் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடப்பட்டு வருவதாக வரலாறு கூறுகிறது. கால ஓட்டத்தில் ஒருநாள், டி20 என கிரிக்கெட் விளையாட்டின் பார்மெட் மாற்றம் கண்டுள்ளது. இப்போது 100 பந்துகள் மட்டும் ஒரே இன்னிங்ஸில் வீசும் ‘100 பால் கிரிக்கெட்’ பார்மெட் பிரபலமாகி வருகிறது. இத்தகைய சூழலில் பல்வேறு காரணங்களுக்காக பகல்-இரவு டெஸ்ட் (பிங்க் பால் டெஸ்ட்) கிரிக்கெட் போட்டிகளை அறிமுகம் செய்தது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி). கடந்த 2012-இல் ஐசிசி பிங்க் பால் டெஸ்ட் போட்டிக்கு பச்சைக் கொடி காட்டியது. 

தொடர்ந்து கிரிக்கெட் உலகின் முதல் பகல் இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் விளையாடின. அந்த போட்டி முதல் கடைசியாக இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி வரையில் மொத்தம் 19 பகல் இரவு டெஸ்ட் போட்டிகள் (ஆடவர்) நடைபெற்றுள்ளன. அதில் ஆறு ஆட்டங்கள் மட்டுமே ஐந்து நாட்கள் முழுவதுமாக விளையாடப்பட்டுள்ளது. மீதமுள்ள அனைத்து ஆட்டங்களும் நான்கு நாட்களுக்குள் முடிந்துள்ளன. இந்த 19 பகல் இரவு டெஸ்ட் போட்டிகளிலும் முடிவு எட்டப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. ஒரு போட்டி கூட சமனில் முடிந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

பிளேயிங் டைம்?

பொதுவாக அனைத்து விளையாட்டுக்கும் பிளேயிங் டைம் என்ற விதிகள் இருக்கும். கிரிக்கெட் விளையாட்டுக்கும் அது பொருந்தும். டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் 5 நாட்கள் நடைபெறும். நாள் ஒன்றுக்கு ஆறு மணி நேரம் வரை கிரிக்கெட் விளையாட வேண்டி இருக்கும். அதிகபட்சம் 90 ஓவர்கள் வீச வேண்டும். இப்படி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான பிளேயிங் டைம் வகைப்படுத்தப்பட்டுள்ளது. 

இப்படியிருக்க அண்மை காலமாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் திட்டமிடப்பட்ட ஐந்து நாட்களுக்கு மாறாக நான்கு நாட்களுக்குள் நடந்து முடிந்து விடுவதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. அதுவும் இந்த விகிதம் பகல் இரவு டெஸ்ட் போட்டிகளில் மிகவும் குறைவாகவே இருப்பதாக தெரிகிறது. 

உதாரணமாக இந்திய கிரிக்கெட் அணி இதுவரை நான்கு பகல் இரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் மூன்றில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் பெற்றுள்ளது. இந்த அனைத்து போட்டிகளும் அதிகபட்சம் மூன்று நாட்கள் மட்டுமே நடந்துள்ளது. அதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அகமதாபாத் நகரில் நடைபெற்ற பகல் இரவு டெஸ்ட் போட்டி வெறும் இரண்டு நாட்கள் தான் நடந்திருந்தது. 

தற்போது நடந்து முடிந்துள்ள இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான பகல் இரவு டெஸ்ட் போட்டியும் மூன்றே நாளில் முடிவை எட்டியுள்ளது. 

இதற்கான காரணம் என்ன?

மாடர்ன் டே கிரிக்கெட்டின் (டி20 பார்மெட்) தாக்கம் டெஸ்ட் கிரிக்கெட்டின் அடிப்படையை அப்படியே மடைமாற்றி உள்ளதாக முன்னாள் வீரர்கள் சிலர் கடந்த காலங்களில் இதுகுறித்து சொல்லியுள்ளனர். 1985-களில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி - தோல்வி என்ற முடிவை எட்டும் போட்டிகளின் விகிதம் வெறும் 57.69% இருந்துள்ளது. அப்படியே அது 1995 வாக்கில் 71.11% அதிகரித்துள்ளது. தொடர்ந்து 2005 வாக்கில் அது 75.41% எட்டியுள்ளது. 2014-இல் இந்த எண்ணிக்கை 80.49% அதிகரித்துள்ளது என புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இது அப்படியே மாற்றம் கண்டு வரும் நாட்களில் 100% என்ற நிலை உருவாகும் என தெரிகிறது. 

கடந்த ஆண்டு இந்தியா விளையாடிய 14 டெஸ்ட் போட்டிகளில் 3 போட்டி மட்டுமே சமனில் முடிந்துள்ளது. 8 போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. 2022-இல் இதுவரை விளையாடியுள்ள நான்கு போட்டிகளில் இந்தியா இரண்டில் வென்றுள்ளது. இரண்டில் தோல்வியை தழுவியுள்ளது. ஷார்டர் பார்மேட் கிரிக்கெட் போல டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி தோல்வி என்ற முடிவு எட்டப்பட்டு வருகிறது. இது கிரிக்கெட்டுக்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஊக்கம் கொடுப்பதாக இருந்தால் வரவேற்கதக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com