“வார்னர் எங்கே?” இன்ஸ்டாவில் ஒலித்த முழக்கம் - ஹைதராபாத் அணிக்காக இனி விளையாடுவாரா?

“வார்னர் எங்கே?” இன்ஸ்டாவில் ஒலித்த முழக்கம் - ஹைதராபாத் அணிக்காக இனி விளையாடுவாரா?

“வார்னர் எங்கே?” இன்ஸ்டாவில் ஒலித்த முழக்கம் - ஹைதராபாத் அணிக்காக இனி விளையாடுவாரா?
Published on

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆடும் லெவனில் டேவிட் வார்னர் சேர்க்கப்படவில்லை. முதல் முறையாக வார்னர் ஹைதராபாத் அணியின் ஆடும் லெவனில் சேர்க்கப்படாதது அதிர்ச்சியூட்டும் செய்தியாகவே இருந்தது. 

இந்தியாவில் நடைபெற்ற முற்பாதி ஆட்டங்களில் வார்னர் வசம் இருந்த கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. தொடர்ந்து தற்போது ஆடும் லெவனில் விளையாடும் வாய்ப்பை அவர் இழந்துள்ளார். இந்த நிலையில் தொடர்ந்து அந்த அணியுடன் அவர் பயணிப்பது குறித்து பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பி உள்ளது. 

ஹைதராபாத் அணியும் வார்னரும்!

2014 முதல் வார்னர் ஐபிஎல் களத்தில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். முதல் சீசனில் வீரராக விளையாடிய அவர் இரண்டாவது சீசன் முதல் கேப்டனாக SRH அணியை வழிநடத்த தொடங்கினார். 

கேப்டனாக அவர் அணியை முன்னின்று வழி நடத்திய முதல் சீசனில் ஹைதராபாத் லீக் சுற்றுடன் வெளியேறியது. 2016 சீசனில் சாம்பியன் பட்டம் வென்றது ஹைதராபாத். 2017 பிளே ஆப், 2018 தடை காரணமாக அவர் ஐபிஎல் சீசனில் விளையாடவில்லை. 2019 சீசனிலும் அவர் கேப்டனாக விளையாடவில்லை. 2020 சீசனில் பிளே ஆப் வரை அணியை முன் நகர்த்தி சென்றவர். 

ஐபிஎல் களத்தில் வார்னரின் ஆட்டம் எப்படி?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் வார்னர். பீல்டிங்கிலும் கில்லியாக செயல்படுபவர். ஐபிஎல் களத்தில் 2009 முதல் விளையாடி வருகிறார். முதலில் டெல்லி அணிக்காக விளையாடினார். இப்போது ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். 

150 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள வார்னர் மொத்தமாக 5449 ரன்களை சேர்த்துள்ளார். 4 சதம் மற்றும் 50 அரைசதம் இதில் அடங்கும். 2014 முதல் 2020 வரையில் 500 ரன்களுக்கு மேல் ஒவ்வொரு சீசனிலும் ரன்களை அதிரடியாக குவித்துள்ளார். அதிக ரன்கள் அடித்த வீரர்களில் ஐந்தாவது இடம். வெளிநாட்டு வீரர்களில் அவருக்கே முதலிடம். ஐபிஎல் களத்தில் அதிக அரை சதம் பதிவு செய்த வீரர்களில் முதலிடம். மொத்தம் 50 அரை சதங்களை அவர் பதிவு செய்துள்ளார். இப்படி பல சாதனைகளை குவித்து வைத்துள்ளார் அவர். இந்த சீசனில் 8 போட்டிகளில் விளையாடி 195 ரன்களை எடுத்துள்ளார். 

வார்னர் நீக்கம் ஏன்?

ஆடும் லெவன் தொடங்கி கள வியூகம் வரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலேயே கேப்டனின் தனிப்பட்ட முடிவுகள் மட்டுமல்லாது சக அணி வீரர்கள், பயிற்சியாளர், ஸ்ட்ரேட்டிஜிஸ்ட்களின் ஆலோசனைகள் என அனைவரது கருத்துகளும் கேட்டுக் கொள்ளப்படும். Franchise கிரிக்கெட்டில் இந்த ஆலோசனைகள் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். அதனால் ஹைதராபாத் அணியின் நடப்பு சீசன் செயல்பாட்டுக்கும் வார்னருக்கும் பெரிய அளவில் சிக்கல் இருக்காது. இருப்பினும் அவரை நீக்கியுள்ளது புரியாத புதிராக உள்ளது. நடப்பு சீசனில் ஹைதராபாத் அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் வார்னர் நான்காவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் பேர்ஸ்டோ, அடுத்ததாக மனிஷ் பாண்டே, மூன்றாவதாக வில்லியம்சன் உள்ளனர். 

இருப்பினும் அணி சரியாக செயல்படாத காரணத்தினால் வார்னர் பலி கொடுக்கப்பட்டுள்ளார் என்ற விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகின்றன. நடப்பு சீசன் SRH அணிக்கு எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்கவில்லை. 2015 சீசனுக்கு பிறகு இந்த முறை லீக் சுற்றுடன் நடையை கட்டும் நிலைக்கு ஹைதராபாத் தள்ளப்பட்டுள்ளது. 10 போட்டிகளில் விளையாடி இரண்டில் மட்டுமே வென்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது அந்த அணி. 

வார்னர் இனி?

டேவிட் வார்னர், ஹைதராபாத் அணிக்காக இனி விளையாடுவாரா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. இதற்கு முன்னதாக நடந்த ஐபிஎல் சீசன்களில் கேப்டன் மாற்றங்கள் அதிரடியாக நிகழும். சென்னை, பெங்களூர் மாதிரியான அணிகள் மட்டும் தான் கேப்டன்களை மாற்றும் நடைமுறைகளை கையாண்டது கிடையாது.

வார்னர் விளையாடாத ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் “வார்னர் எங்கே?” என ரசிகர்கள் SRH அணியின் இன்ஸ்டாகிராம் போஸ்டில் கமெண்ட் கொடுத்திருந்தனர். அதற்கு வார்னர் ரிப்ளை செய்துள்ளார். அந்த ரிப்ளை அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. “மீண்டும் நடக்காமல் போனது துரதிர்ஷ்டவசம். ஆனால் உங்களது ஆதரவை என்றென்றும் அளிக்கவும்” என வார்னர் ரிப்ளை கொடுத்துள்ளார். இந்த ரிப்ளை தான் அவரது ரசிகர்களை வாட்டமடையச் செய்துள்ளது. இனி ஆரஞ்சு ஆர்மியின் சீருடையில் வார்னர் ஜொலிப்பது சந்தேகம் தான் என்ற சூழல் நிலவுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com