அன்றைய வைகோ... இன்றைய ஈஸ்வரன் - வரலாறு சொல்லும் செய்தி என்ன?

அன்றைய வைகோ... இன்றைய ஈஸ்வரன் - வரலாறு சொல்லும் செய்தி என்ன?
அன்றைய வைகோ... இன்றைய ஈஸ்வரன் - வரலாறு சொல்லும் செய்தி என்ன?

''தலைவர் வைகோ என் உள்ளத்தில் பல அடிப்படை கொள்கைகளை விதைத்து விட்டார். அது இன்று மரமாகிவிட்டது. அதை என்னால் வெட்ட இயலவில்லை. என் தலைவரா? அவர் விதைத்த கொள்கையா? என்ற போராட்டத்தில் அவரின் கொள்கையே என்னை ஆட்கொண்டுவிட்டது; தலைவரை விட கொள்கைதான் பெரிது'' என்று கூறிவிட்டு மதிமுகவிலிருந்து வெளியேறியிருக்கிறார் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன். வைகோ மகன் துரை வையாபுரி தலைமைக்கழக செயலாளராக நியமிக்கப்பட்டதன் எதிர்ப்பு தான் இந்த விலகல். மதிமுகவிலும் வாரிசு அரசியல் தலை தூக்கப்படுகிறது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக பேசிய ஈஸ்வரன், ''அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா யாரும் அடுத்த தலைவரை அடையாளம் காட்டிவிட்டு செல்லவில்லை. காலம் தான் தலைவர்களை உருவாக்கியிருக்கிறது. ஆனால் மதிமுகவில் இந்த திணிப்பை ஏற்க முடியவில்லை. திமுகவில் வாரிசு அரசியல் இருக்கிறது என்றால் அனைவருக்கும் தெரியும். ஆனால் மதிமுக அப்படிபட்ட கட்சி அல்ல. அப்படி இருக்கையில் ஏன் இந்த திணிப்பு எதற்காக?'' என்று ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று ஈஸ்வரனுக்கு இருக்கும் அதே மனநிலையில் தான் அன்று வைகோவும் இருந்தார். ஆம்! வரலாறு மீண்டும் திரும்பியிருக்கிறது. வரலாறு எப்போதும் விசித்திரமானது. வியப்பானதும் கூட. அன்று திமுகவில் இருந்த வைகோவுக்கு என்ன தோன்றியதோ அதே தான் இன்று ஈஸ்வரனுக்கு தோன்றியிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

''25 ஆண்டுகளுக்கும் மேலாக உயிரை துச்சமாக மதித்து தி.மு.க-வில் பணியாற்றியவன் நான். ஆனால், பட்டத்து இளவரசருக்குப் பட்டாபிஷேகம் செய்வதற்கு நான் இடையூறாக இருப்பேன் என்பதற்காக, என்மீது கொலைப்பழி சுமத்தி கட்சியிலிருந்து வெளியேற்றினார்கள்' திமுகவிலிருந்து வெளியேறியபோது கருணாநிதி மீது வைகோ வைத்த குற்றச்சாட்டு இது. மதிமுகவை தொடங்கிய பின்பு வாரிசு அரசியலை கடுமையாக சாடிக்கொண்டிருந்தார் வைகோ.

`வாரிசு அரசியலை எதிர்த்து உருவான கட்சி ம.தி.மு.க' என மேடைகளில் சீறியவர் வைகோ. அவரின் பேச்சைக்கேட்டு தொண்டர்களும் உற்சாகத்துடன் அணிதிரண்டனர். அதே வைகோ இன்று தன் மகனின் அரசியல் வருகை குறித்து பேசும்போது, 'இதை வாரிசு அரசியல்' என கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார். 'அப்போ எதுதான் வாரிசு அரசியல்?' என கேட்டு விழிபிதுங்கி நிற்கிறான் சக தொண்டன்.
மகன் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை என்று கூறி நழுவினாலும் இறுதியில் அதுதானே அரங்கேறியிருக்கிறது.

''ஸ்டாலினுக்குப் பட்டாபிஷேகம் செய்யப்பார்க்கிறார் கருணாநிதி என்று குற்றம்சாட்டிய வைகோ, தன் மகனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய நினைப்பது நியாயமா என்பதுதான் எங்கள் கேள்வி'' என சமூக வலைத்தளங்களில் பலர் கேள்வி எழுப்பினாலும், இறுதியில், அது ஒரு கட்சியின் முடிவு என்றே அணுகவேண்டியிருக்கிறது. வரலாறு பல்வேறு சம்பவங்கள் மூலம் விசித்திரமான செய்திகளை சொல்லாமல் சொல்லிவிடுகிறது என்பதை இங்கே கவனிக்க வேண்டியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com