வோடஃபோன் - ஐடியாவின் வீழ்ச்சியால் இதர வாடிக்கையாளர்களுக்கும் பாதிப்பு... எப்படி?

வோடஃபோன் - ஐடியாவின் வீழ்ச்சியால் இதர வாடிக்கையாளர்களுக்கும் பாதிப்பு... எப்படி?
வோடஃபோன் - ஐடியாவின் வீழ்ச்சியால் இதர வாடிக்கையாளர்களுக்கும் பாதிப்பு... எப்படி?

செல்பேசி சந்தையில் வோடஃபோன் - ஐடியா நிறுவனம் தடுமாறி கொண்டிருப்பது தெரிந்த செய்திதான். ஆனால், அந்த நிறுவனத்தின் நிலை மேலும் மோசமாக இருப்பது, இந்தியாவில் ஒட்டுமொத்த செல்பேசி சேவை வாடிக்கையாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பது தெளிவு.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான 'டிராய்' (TRAI) வெளியிட்டுள்ள தகவலின்படி, வோடஃபோன் - ஐடியா நிறுவனம் 42,89,519 சந்தாதாரர்களை இழந்திருக்கிறது. வோடஃபோன் - ஐடியா சில காலமாகவே சந்தாதாரர்களை இழந்து வந்தாலும், இதுவரை இல்லாத அளவுக்கு அதிக சந்தாதாரர்களை இழந்திருக்கிறது. நிச்சயம் நிறுவனத்திற்கு இது நல்ல செய்தி அல்ல. நிறுவனத்திற்கு மட்டும் அல்ல, செல்பேசி பயனாளிகளுக்கும் இது சோதனையான செய்தியாகவே அமைவதாக கருதப்படுகிறது.

வோடஃபோன் - ஐடியா நிறுவனத்தின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமாக, நிறுவனம் திவாலாகும் நிலை ஏற்பட்டால், இதனால் செல்பேசி சந்தையில் ஏற்படக்கூடிய தாக்கம், செல்பேசி பயனாளிகளையும் பாதிக்கக் கூடியதாக இருக்கும் என்கின்றனர்.

வோடஃபோன் - ஐடியா நிறுவனத்தின் தோல்வி, செல்பேசி பயனாளிகளை எப்படி எல்லாம் பாதிக்க வாய்ப்பிருக்கிறது என்பதற்காக சொல்லப்படும் காரணங்கள் வருமாறு:

சேவைகள் பாதிப்பு: வோடஃபோன் - ஐடியா நிறுவனம் மூடப்படும் நிலை உண்டானால், அதன் வாடிக்கையாளர்கள் வேறு வழியில்லாமல் ஏர்டெல், ஜியோ அல்லது பிஎஸ்.என்.எல் நிறுவனங்களுக்கு மாற வேண்டியிருக்கும். இப்படி ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் வேறு சேவைகளுக்கு மாறும்போது, அவற்றின் உள்கட்டமைப்பு அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறும். இதனால் செல்பேசி சேவைகளின் தரம் பாதிக்கப்படும்.

ஏகபோகம்: தற்போதைய சூழலில் வோடஃபோன் - ஐடியா மூன்றாவது பெரிய செல்பேசி சேவை நிறுவனமாக இருக்கிறது. நிறுவனம் பலவீனமான இருந்தாலும், வாடிக்கையாளர்கள் தேர்வு செய்வதற்கான வாய்ப்புகளில் ஒன்றாக இருக்கிறது. ஆனால், இந்நிறுவனம் மூடப்பட்டால், ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரண்டு பிரதான நிறுவனங்களே சந்தையில் மிஞ்சியிருக்கும். பி.எஸ்.என்.எல்/ எம்.டி.என்.எல் நிறுவனங்கள் ஏற்கெனவே பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்ட நிலையில், இந்திய செல்பேசி துறை இரண்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தின் கீழ் வருவது வாடிக்கையாளர்களுக்கான தேர்வை வெகுவாக குறைத்துவிடும்.

தொழில்நுட்ப பாதிப்பு: செல்பேசி உள்கட்டமைப்பிற்கான செலவை தற்போது மூன்று நிறுவனங்கள் ஏற்றுக்கொள்கின்றன. இது இரண்டு நிறுவனங்களாக குறைந்தால் அவற்றின் செலவு அதிகரித்து, தொழில்நுட்ப முனேற்றத்தில் செய்யப்படும் முதலீடு பாதிக்கப்படலாம். இது புதுமையாக்கத்தை பாதிக்கும்.

கட்டணம் உயரும்: செல்பேசி நிறுவனங்களின் செலவு உயரும்போது, ஒரு கட்டத்தில் அவை கட்டணத்தை உயர்த்தும் நிலை ஏற்படும். ஏற்கெனவே இத்துறை நெருக்கடியில் இருப்பதாக சொல்லப்படும் நிலையில், கட்டண உயர்வு என்பது தவிர்க்க இயலாததாகலாம்.

5ஜி-2ஜி: இரண்டு நிறுவனங்கள் மட்டுமே இருப்பது 5ஜி தொழில்நுட்ப அறிமுகத்தையும் தாமதமாக்கும். ஏனெனில், இதற்கு அதிக முதலீடுகள் தேவை. அதோடு, வோடஃபோன் - ஐடியாவின் 2ஜி வாடிக்கையாளர்களும் பாதிக்கப்படுவார்கள்.

கடன் சுமையால் திண்டாடி வரும் வோடஃபோன் - ஐடியா நிறுவனம் திவாலாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வோடஃபோன் - ஐடியா தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு 27 கோடி வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் உள்ளனர். ஒருவேளை, அந்த நிறுவனம் திவாலானால் கிட்டத்தட்ட 10,000-க்கும் மேற்பட்டோர் வேலை இழப்பார்கள் என்பதும் கவலைக்குரிய இன்னொரு விஷயம்.

- சைபர்சிம்மன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com