மதுரை மாவட்டத்தில் தொடரும் பெண் சிசுக் கொலை... காரணம் என்ன? - ஒரு பார்வை

மதுரை மாவட்டத்தில் தொடரும் பெண் சிசுக் கொலை... காரணம் என்ன? - ஒரு பார்வை
மதுரை மாவட்டத்தில் தொடரும் பெண் சிசுக் கொலை... காரணம் என்ன? - ஒரு பார்வை

மதுரை மாவட்டத்தில் மீண்டும் தலைதூக்கியுள்ள பெண் சிசுக் கொலை... காரணம் என்ன? தொட்டில் குழந்தை திட்டம் என்ன ஆனது? - சற்றே விரிவாகப் பார்ப்போம்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கே.பாறைப்பட்டியில், பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தையை அவரது பாட்டி கையால் முதத்தை மூடி கொலை செய்த சம்பவம் மதுரை மாவட்டத்தை மட்டுமல்ல, தமிழகத்தையே அதிர்ச்சியடைய செய்துள்ளது.

'தொட்டில் குழந்தை' திட்டம் மூலம் முடிவுபெறும் என நினைத்த பெண் சிசுக் கொலை, மீண்டும் தொடர்கதையாகி வருகிறது. கடந்த ஆண்டு மதுரை மாவட்டம் செக்காணூரணி அருகில் உள்ள மீனாட்சிபட்டியை சேர்ந்த வைரமுருகன் - சௌமியா தம்பதிக்கு ஒரு பெண்குழந்தை இருந்த நிலையில், இரண்டாவதாகவும் பெண்குழந்தை பிறந்தது. வறுமையின் காரணமாகவும் குழந்தையின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு பெற்றோரே குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்தனர்.

இதற்கு காரணமாக அவர்கள் சொன்னது: 'மொதல்லேயும் பொட்டப்புள்ள இப்ப ரெண்டாவதும் பொட்டப்புள்ள. இதுகல படிக்க வெச்சு வளக்குறது கூட கஷ்டமில்ல அதுகல ஒருத்தன் கையில ஒப்படைக்கிறதுக்குள்ள உசுரு போயி உசுரு வந்துரும். பெண் சிசுக்கொலை எல்லா ஊர்லேயும் யாருக்கும் தெரியாமல் தொடர்ந்து நடந்துக்கிட்டுதான் இருக்கு. பொல்லாத நேரம் இவங்க மாட்டிக்கிட்டாங்க' என்பதை நிரூபிக்கும் விதமாக ஆண்டிப்பட்டி மொட்டனூத்து அருகில் உள்ள ராமநாதபுரத்தில் நடந்த பெண் சிசு கொலை அதை உறுதிபடுத்தியது.

சுரேஷ் - கவிதா தம்பதிக்கு முதலில் பெண்குழந்தை பிறந்தது. இந்நிலையில், இரண்டாவதாக கர்ப்பமுற்ற கவிதா மீண்டும் ஒருபெண் குழந்தை பெற்றெடுத்தார். இதனைத் தொடர்ந்து 'கர்ப்பத்தடை செய்துகொள்' என்று கவிதாவின் மாமியார் செல்லம்மாள் சொல்லியுள்ளார். ஆனால், எனக்கு 'ஆண்குழந்தை வேண்டும்' என்று கவிதா மறுத்துவிட்டார்.


இந்நிலையில், மூன்றாவதாக கர்ப்பமுற்ற கவிதாவுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தையுடன் வீட்டிற்குச் சென்ற கவிதாவை அவரது மாமியார் செல்லம்மாள் மிரட்டியுள்ளார்.

'நான் ஒரு விஷேசத்துக்குப் போகிறேன். திரும்பி வருவதற்குள் இந்த குழந்தையை கொன்றுவிடு. இல்லையென்றால் வீட்டைவிட்டு உன்னை துரத்திவிடுவேன்' என்று சொல்லவும். பயந்துபோன கவிதா, அருகில் இருந்த எருக்கஞ்செடியை பறித்துவந்து பால் எடுத்து குழந்தைக்கு ஊற்றிக் கொன்றுவிட்டார்.

கவிதாவின் மாமனார் வந்து கேட்டபோது, 'குழந்தைக்கு வாந்தி, வயித்தாலை போனதால் இறந்துவிட்டது' என கூறியுள்ளார். சரியென்று அந்த குழந்தையை வீட்டின் அருகிலேயே புதைத்து விட்டனர். காவல்துறையினரின் விசாரணையில் மூன்றாவதும் பெண்குழந்தை பிறந்ததால் எருக்கம்பால் கொடுத்து குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.


அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கே.பாறைப்பட்டியைச் சேர்ந்த சின்னச்சாமி - சிவப்பிரியா தம்பதிக்கு பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். குழந்தையின் முகத்தில் காயங்கள் இருந்ததைக் கண்ட மருத்துவர் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து விரைந்து வந்து குழந்தையின் உடலை கைப்பற்றிய போலீசார், பெண் குழந்தை இறப்பு குறித்து உத்தப்பநாயக்கனூர் காவல் நிலையத்தில் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து குழந்தையின் உடல் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

மூச்சுத் திணறல் காரணமாக குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து, உத்தப்பநாயக்கனூர் காவல்துறையினர் குழந்தையின் பெற்றோரிடம் நடத்திய விசாரணையில், குழந்தையை கையால் முகத்தை மூடி கொலை செய்ததாக கூறி உள்ளனர்.

இதுபோல மதுரை மாவட்டத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தொடர்ந்து நடைபெறும் பெண் சிசுக் கொலை தொடர்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதியிடம் கேட்டோம்.

பாலபாரதி (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்): ”பெண் சிசுக் கொலை முன்னமாதிரி இல்லை. ஆனால், இந்த சம்பவத்தின் மூலம் பெண் சிசுக்கொலை இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இந்தியாவில் ராஜஸ்தான், ஹரியானா, பீகார் போன்ற மாநிலங்களிலும் பெண் சிசுக் கொலை நடந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழ்நாட்டில் சேலம் மற்றும் மதுரை மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த காலங்களில் பெண் சிசுக் கொலை அதிகஅளவில் நடந்தது. தமிழக அரசு கொண்டுவந்த பல கட்டுப்பாடுகளால் கருக்கொலைகள் மற்றும் பெண் சிசுக் கொலைகள் எவ்வளவோ குறைந்திருக்கிறது. பெண் குழந்தைகளை கொல்வதற்கு வறுமைதான் காரணம் என்று சொல்கிறார்கள்.

இதற்கு மத்திய, மாநில அரசுகள் என்ன சொல்ல போகிறது? வரதட்சணை வாங்காமல் எந்த சாதியில் பெண் கட்டுகிறார்கள்? மக்களிடம் வறுமை அதிகமாக இருக்கிறது. பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பே கிடையாது. பெண்கல்வியும் மிகவும் மோசமான நிலைமையில் இருக்கிறது. படித்துவந்த பிறகு வேலைவாய்ப்பு உத்திரவாதமும் கிடையாது. பெண் குழந்தைகள் பிறந்தால், தனக்கு பெரும் துயர் என்று பெற்றோர்கள் நினைத்து மீண்டும் பெண் குழந்தைகளை கொல்லக் கூடிய நிலைமைக்கு வந்திருக்கிறார்கள். ஆகவே தமிழக அரசு இதுபோன்ற பெண் சிசுக் கொலைகள் நடக்காமல் தடுக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டும்” என்றார்.

முத்துராணி சமூக ஆர்வலர் (உசிலம்பட்டி): ”பெண் சிசுக் கொலைக்கு வறுமை ஒரு காரணமாக இருந்தாலும். பெண் குழந்தைகளின் மீதான பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது. பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சமுதாயத்தில் பெண்குழந்தைகள் மீது வெறுப்பு இருக்கிறது. பெண்குழந்தைகளுக்கு திருமணம் செய்து கொடுப்பதாகட்டும் அல்லது பாதுகாப்பதாகட்டும் அனைத்துமே மிகப்பெரிய கஷ்டம் என்பதை இந்த பகுதியில் அதிகமாக காணமுடிகிறது.

மதுரை மாவட்டத்தில் நடக்கும் பெண் சிசுக் கொலைகளை தடுப்பதற்காகத்தான் 'தொட்டில் குழந்தை' திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டம் உசிலம்பட்டி மருத்துவமனையிலும் சொட்டப்ப நாயக்கர் மருத்துவமனையிலும் இருக்கிறது. ஆனால், அந்த தொட்டிலை கேமரா பொருத்தி கண்காணிக்கிறார்கள். இதனால் குழந்தையை கொண்டுவந்து தொட்டிலில் போட்டால் ஏன் போட்ட எதுக்கு போட்ட என்று விசாரிக்கபடுவோமோ என்ற பயத்தில் யாரும் குழந்தையை தொட்டிலில் கொண்டுவந்து போடுவதில்லை. கருக்கொலைகள் சிசுக் கொலைகள் யாருக்கும் தெரியாமல் நவீன முறையில் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதுபோன்ற பெண் சிசுக் கொலைகளை தடுக்க அரசு தீவிரம் காட்ட வேண்டும்.”

வேல்முருகன் சமூக ஆர்வலர் (உசிலம்பட்டி): “இந்த பெண் சிசுக் கொலைக்கு முக்கிய காரணமே பயம்தான். வறுமையால் குழந்தையை வளர்க்க முடியாதவர்கள் காப்பகங்களில் கொண்டுவந்து போடுவார்கள் அல்லது மருத்துவமனையில் உள்ள தொட்டிலில் போடுவார்கள். அப்படி போடுவர்களை பிடித்து யாருபோட்டது எப்படி குழந்தை வந்துச்சு சட்டப்படியான குழந்தையா என்று விசாரணை செய்கிறார்கள். இதற்கு பயந்துகொண்டே குழந்தைகளை கொல்லத் துணிகிறார்கள். யாருக்கும் தெரியாமல் குழந்தையை தொட்டிலில் போடலாம் என்றுதான் அரசு சொல்கிறது. ஆனால் அதை ஏன் கேமரா மூலமாக கண்காணிக்க வேண்டும்.

இதனால் குழந்தையை யாருக்காவது விற்றுவிடலாம் என்ற முடிவுக்கு வந்து விற்றும் விடுகிறார்கள். இந்த வியாபாரமும் நடக்கிறது. பெண்களை எவ்வளவு படிக்க வைத்தாலும் திருமண நேரத்தில் வரதட்சணை பெரும் பிரச்னையாக இருக்கிறது. இப்ப தங்கம் விக்கிற விலைக்கி பத்து பவுன் இருபது பவுன் நகை போட்டு கல்யாணம் கட்டிக் கொடுக்க முடியுமா? மருத்துவமனையில் உள்ள தொட்டிலை கேமரா மூலமாக கண்காணிப்பதால் எங்களது இயலாமை வறுமை எல்லோருக்கும் தெரிந்துவிடுகிறது. அவர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகின்றனர். அதனால் முதலில் கேமராவை அகற்ற அரசு முன்வரவேண்டும்.

குடும்ப உறவுகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. வீட்டில் இருக்கும் பெண் குழந்தையை யாரையும் நம்பி விட்டுவிட்டு போக முடியவில்லை. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, படிக்கும் பள்ளிகளில் நடக்கிறது. பணிசெய்யும் இடங்களில் நடக்கிறது. வீடுகளில் நடக்கிறது. வீதிகளில் நடக்கிறது. எந்த இடமும் பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை. ஆகவே அரசு பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்து பெண் சிசுக் கொலைகளை தடுக்க முன்வரவேண்டும்.”

இப்படி பெண் சிசுக் கொலைக்கு பலரும் பல காரணங்கள் சொன்னாலும், அவை குறித்து விவாதித்தாலும், பெண் சிசுக்களை கொடூரமாக கொலைசெய்பவர்களிடம் இருந்து காப்பதற்காக தமிழக அரசு பெண் குழந்தைகளுக்கு பல நல்ல திட்டங்களை கொண்டுவந்திருக்கிறது. அவை:

# தொட்டில் குழந்தை திட்டம்
# வரதட்சணை ஒழிப்புச் சட்டம் 1961
# கருவிலேயே பாலினம் அறியும் செயலுக்கு எதிரான சட்டம்
# பெண்கல்விக்கு ஆதரவான சட்டம்
# பெண்ணுரிமைக்கு ஆதரவான சட்டம்
# பெண்ணுக்கும் சொத்தில் சமபங்கு தரும் சட்டம்
# ஏழைப்பெண்கள் அரசு நிதியுதவித் திட்டம்
# மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதியுதவித் திட்டம்
# ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் நிதியுதவித் திட்டம்
# அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் நிதியுதவித் திட்டம்
# டாக்டர். தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம்
# சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம

என பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக அரசு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது. இந்த திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி பெண் குழந்தைகளை ஆண்களுக்கு சமமாக மதித்து, பெற்ற பெண் குழந்தைகளை பேணிக்காக்க வேண்டியது பொற்றோரின் கடமை. பெண் சிசுக்கள் கொல்லப்படுவதை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com