தமிழ் சினிமா வீழ்ச்சிக்கு காரணம் என்ன? மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புமா??

தமிழ் சினிமா வீழ்ச்சிக்கு காரணம் என்ன? மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புமா??
தமிழ் சினிமா வீழ்ச்சிக்கு காரணம் என்ன? மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புமா??

இந்திய சினிமா துறையில் தமிழ் சினிமாதுறை மிக முக்கியமன இடத்தில் இருக்கிறது. இங்கு பெரிய பட்ஜெட் திரைப்படங்களை விட குறைந்த பட்ஜெட் திரைப்படங்கள் அதிகமாக வெளியாகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக வருடத்திற்கு 200 திரைப்படங்களை கொடுக்கும் சினிமா துறையாகவும் தமிழ் சினிமா விளங்குக்கிறது. இதன் மூலம் வருடத்திற்கு  இரண்டாயிரம் கோடிக்கு மேல் வியாபாரம் நடைபெறுகிறது. அதில் திரையரங்கு மூலம் 1500 கோடியும், திரையரங்கு அல்லாத தொலைக்காட்சி உரிமம், டிஜிட்டல் ரைட்ஸ் போன்றவற்றின் மூலமாக 500 கோடியும் வியாபாரம் நடைபெறுகின்றது.

தமிழ் சினிமா ஒரு காலகட்டத்தில் அதிக வெற்றி திரைப்படங்களை கொடுத்துகொண்டிருந்தது. ஆனால் தற்போது வெளியாகும் பெரும்பாலான படங்கள் தோல்வியை சந்திக்கின்றன. தமிழில் வருடத்திற்கு 10 சதவீத திரைப்படங்களே வெற்றியடைகின்றது என தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர். இதனால் தோல்வி திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் கடுமையான நஷ்டத்தை சந்திக்கின்றனர். அதில் 80 சதவீத தயாரிப்பாளர்கள் சினிமா துறையைவிட்டு வெளியேறும் முடிவை எடுத்துள்ளார்கள் என்று தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு கூறுகிறார். அதேபோல் திரைப்படங்களை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை குறையவில்லை. ஆனால் அவர்கள் திரைப்படம் பார்க்கும் முறை மாறியுள்ளது. அதாவது திரையரங்கிற்கு செல்லாமல், டிஜிட்டல் முறையில் திரைப்படங்களை பார்க்கின்றனர். இதனால் திரையரங்கிற்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்கிறார் எஸ்.ஆர் பிரபு.

 டிஜிட்டல் வாயிலாக திரைப்படங்கள் பார்ப்பவர்களிலும்  30 சதவீதம்தான், அமேசான் ப்ரைம், Net Flix போன்ற காப்பிரைட்ஸூடன் கூடிய ஒரிஜினல்  கண்டெண்ட்டை பார்கிறார்கள். மற்ற 70 வது சதவீத ரசிகர்கள் தமிழ் ராக்கர்ஸ் போன்ற பைரசி வாயிலாக பார்கின்றனர். இதன் மூலம் பார்ப்பதால் அரசாங்கத்திற்கும் பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. 2 ஆயிரம் கோடி வியாபாரம் நடக்கும் தமிழ் சினிமாவில் ஜி.எஸ்.டி அறிமுகம் செய்வதற்கு முன்பு சுமார் 150 கோடி வருமானம் கிடைத்துள்ளது. ஜி.எஸ்.டி க்கு பிறகு சுமார் 300 கோடி வருமானம் வர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதற்கான விதிமுறைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்.

மேலும் மத்திய மாநில அரசுகள் சினிமா தொழிலின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். பைரசியை ஒழிக்க புதிய திட்டங்களை தீட்ட வேண்டும் என்பது எஸ்.ஆர் பிரபுவின் கோரிக்கையாக உள்ளது. அதேபோல் திரையரங்கங்களின்  கட்டணத்தை ஆன்லைன் முறையில் கொண்டு வர வேண்டும் என்றும் கூறுகிறார். அவ்வாறு கொண்டுவருவதன் மூலம் திரையரங்கில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்ப்பதோடு ஒரு படத்தின் உண்மையான வசூல் நிலவரம் வெளியாகும். அதன் மூலம் அரசாங்கத்திற்கும் தயாரிப்பாளர்களுக்கும் முழுப் பலன் கிடைக்கும் என்று தெரிவிக்கிறார்.

ஆனால் தற்போது டிக்கெட் விற்பனையின் வெளிப்படை தன்மை இல்லை. இதனால் முறைகேடுகள் நடைபெறுவதோடு கறுப்பு பணப் புழக்கமும் அதிகரிக்கிறது. அதை தடுக்க வேண்டும் என்றால் அரசுகள் புதிய  சட்டங்களை இயற்ற வேண்டும் என்றும் எஸ்.ஆர் பிரபு வேண்டுகோள் வைக்கிறார்.

பைரசியால் பாதிக்கப்பட்டிருந்த சினிமாதுறை தற்போது  ஜி.எஸ்.டி யாலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றது என்ற புள்ளி விவரத்தை கொடுக்கின்றார் பிரபு. அதாவது ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டபின் திரையரங்கிற்கு வந்து படம் பார்த்து கொண்டிருந்த ரசிகர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் குறைந்திருப்பதாக கூறுகிறார். இதனால் சினிமா அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும்,  டிஜிட்டல் ரிலீஸ் முறைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் சினிமா துறை இருக்கின்றது என்று எஸ்.ஆர் பிரபு கூறுகிறார்.

இதை பற்றி திரையரங்க உரிமையாளர் திருச்சி ஸ்ரீதரிடம் கேட்டபோது , பெரும்பாலான திரைப்படங்களால் கடுமையான நஷ்டத்தைதான் சந்திக்க நேரிடுகிறது என்று கூறுகிறார். மக்களுக்கு தேவையான திரைப்படங்கள் தற்போது வெளியாவதில்லை எனவே நடிகர்கள் மக்கள் விரும்பும்படியான கதை தேர்வு செய்வது, மற்றும் இயக்குனர்களும் நடிகர்களுக்காக கதை எழுதாமல் பொழுதுபோக்கு கொடுக்க கூடிய கதைகளை எழுதி படமாக்க வேண்டியது அவசியம் என்று கூறுகிறார். இல்லையெனில் சினிமா தொழில் விரைவில் வீழ்ச்சியை சந்திக்கும் என்பது அவரின் கருத்தாக உள்ளது.

தமிழ் சினிமாவில் சரிவு பற்றி சினிமா விமர்சகர் ஜாக்கி சேகரிடம் கருத்து கேட்டப்போது தமிழ்  சினிமா எளிமையாக இருந்த காலத்தில் ரசிகர்கள் அதிகமாக திரையரங்கிற்கு வந்தனர்.  திரைப்படம் நல்லா இருந்தாலும் இல்லை என்றாலும் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க  வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் இருந்தது. ஆனால் இன்று டிக்கெட் விலை  அதிகரித்துள்ளது.

ஒரு டிக்கெட்டிற்கு 200 ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளது. இது தவிர தின்பண்டம், பார்க்கிங்  கட்டணம் என எக்கச்சக்க செலவு இருக்கின்றது. இதனால் நான்கு பேர் கொண்ட குடும்பத்தினர்  திரைப்படத்திற்கு வந்தால் குறைந்தது 2 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படுகிறது. இதனால்  திரையரங்கிற்கு என்று படம் பார்ப்பர்களின் எண்ணிக்கை குறைகிறது என்கிறார். மேலும் சமூக  வலைதளங்களின் வளர்ச்சியும் சினிமா வீழ்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்று  கூறுகிறார்.

முன்பு விமர்சனம் குறைவாக இருந்தது அதுவும் திரைப்படம் வெளியாகி ஒரு வாரத்திற்கு பிறகே  விமர்சனங்கள் வெளியாகும். ஆனால் இன்று டிவிட்டர், பேஸ்புக் வாயிலாக திரைப்படத்தை  பார்த்துகொண்டு இருக்கும்போதே ஹேஷ் டேக் மூலாமாக விமர்சனத்தை பதிவிடுகின்றனர்.  அதை படிக்கும் பெரும்பாலான ரசிகர்கள் திரையரங்கிற்கு செல்வதில்லை. அதேபோல்  டிவிட்டரில் அதிக ஃபாலோயர்சை வைத்திருக்கும் நபர்கள் ஒரு படத்தில் ஒன்றுமே இல்லை  என்று ஒரு பதிவை பதிவிடுவார். அவர் சொன்னதை படித்துவிட்டு அவரை பின்தொடரும் பலர்  திரைப்படத்திற்கு செல்வதில்லை. இதனாலும் பெரும் இழப்பு ஏற்படுகிறது என்று குறிப்பிடுகிறார்.  எனவே டிக்கெட் விலையையும் பார்க்கிங், தின்பண்டங்கள் விலைகளை குறைக்காமல் சினிமா வியாபாரத்தை லாபகரமாக மாற்ற முடியாது என்று கூற்கிறார் ஜாக்கி சேகர். 

எனவே திரையரங்குகளின் டிக்கெட் விலையை குறைப்பது, அதை முறைப்படுத்துவது, இதுக்காக அரசாங்கம் முறையான சட்டத்தை இயற்றுவது ஆகியவை முக்கியமானவையாக உள்ளது. அவ்வாறு செய்வதன் மூலம் தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி அரசாங்கமும் சினிமாதுறை மூலம் லாபம் பெறலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com