ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரசில் இருந்து விலக இதுதான் காரணமா?

ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரசில் இருந்து விலக இதுதான் காரணமா?
ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரசில் இருந்து விலக இதுதான் காரணமா?

மத்திய பிரதேசத்தில் காங்கிரசின் இளம் தலைவராக திகழ்ந்தவர் ஜோதிராதித்ய சிந்தியா. மேலும், மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின்
முகமாக பார்க்கப்பட்டவர். ராகுல்காந்தியுடன் நெருங்கி பழகியவர். தனது 13-வது வயதில் அரசியலில் இறங்கிய ஜோதிராதித்ய சிந்தியா, 18 ஆண்டு
காலம் காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்துள்ளார்.

இந்த சூழலில் அவர் காங்கிரசில் இருந்து வெளியேறுகிறார் என்றால் அது நிச்சயம் உற்று நோக்கப்பட வேண்டிய விஷயமே. யார் இந்த ஜோதிராதித்ய
சிந்தியா? அவருக்கு காங்கிரஸ் கொடுத்த அங்கீகாரம் என்ன?

ஜோதிராதித்ய சிந்தியா பி.ஏ., பொருளாதாரம் மற்றும் எம்.பி.ஏ., பட்டம் பெற்று 2001-ல் தந்தையின் மறைவுக்குப் பின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
ஆனால் அதற்கு முன்பே தந்தையின் பிரசாரத்தில் ஈடுபட்டு அரசியல் நாட்டத்தை வெளிப்படுத்தினார். 2002-ஆம் ஆண்டு தந்தையின் குணா மக்களவைத்
தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு, 4.5 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

2004-ஆம் ஆண்டு மீண்டும் வெற்றி பெற்ற இவர், 2007-ஆம் ஆண்டு மன்மோகன்சிங் அமைச்சரவையில் தொலைத்தொடர்பு மற்றும் ஐ.டி., துறை இணை
அமைச்சராக பதவி வகித்தார். 2009ஆம் ஆண்டு மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சராக ஆனார். 2012-ஆம் ஆண்டு மின்சார துறை
அமைச்சரானார்.

அதைத்தொடர்ந்து 2014-ஆம் ஆண்டு குணா தொகுதியில் நான்காவது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போதைய காலகட்டம்
வரையிலுமே ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ஏதேனும் ஒரு அங்கீகாரத்தை காங்கிரஸ் கொடுத்துக் கொண்டே வந்தது. அதற்கு பலனாக கடந்த 2018-ஆம்
ஆண்டு நவம்பரில் நடைபெற்ற மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின்
ஆதரவோடு ஆட்சியைப் பிடித்தது.

அப்போது காங்கிரஸின் முகமாக பார்க்கப்பட்ட ஜோதிராத்ய சிந்தியாவுக்கு முதல்வர் பதவி மீது ஆசை இருந்தது. இதற்காக கடும் போட்டி நிலவியது.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமர்வதற்கு ஜோதிராதித்ய சிந்தியா முக்கிய பங்கு வகித்தாலும் அவருக்கு முதல்வர் பதவியை காங்கிரஸ்
தலைமை வழங்கவில்லை.

முதல்வர் பதவி கமல்நாத்திடம் சென்றது. கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்லும் பக்குவம் கமல்நாத்துக்கே உண்டு என காங்கிரஸின் மூத்த
தலைவர் திக் விஜய் சிங் உள்ளிட்ட ஏராளமானோர் விருப்பம் தெரிவித்தனர். இதனால் ஜோதிராதித்ய சிந்தியா கடும் அதிருப்தி அடைந்தார். ஆனாலும்,
இறுதியில் கமல்நாத்தே முதல்வராகப் பதவியேற்றார்.

குவாலியர் தொகுதி எம்.பியாக இருந்த ஜோதிராதித்யாவுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது. அதேசமயம், நாடாளுமன்ற தேர்தலில்
காங்கிரஸ் வெற்றி பெற்றால் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளித்து வலிமையான துறையை தர ராகுல் காந்தி
விரும்புவதாகவும் கூறப்பட்டது. அன்று முதல் கமல்நாத்துக்கும், ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் இடையே மோதல் நீடித்தது.

இதை நிரூபிக்கும் வகையில், கமல்நாத்துக்கு எதிராக ஜோதிராதித்ய சிந்தியா சில கருத்துகளை அவ்வப்போது வெளியிட்டு வந்தார். இதனால் இந்த
மோதல் போக்கை சமரசம் செய்ய 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு மேற்கு உத்தரபிரதேசத்தின் காங்கிரஸ்
பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அப்போது பிரியங்கா காந்தியுடன் இணைந்து செயலாற்றவும் அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. அதற்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர்
பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். அதேபோல் ஜோதிராதித்ய சிந்தியாவும் மக்களவை தேர்தலில் தனது தொகுதியை இழந்தார். இதற்காக
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியாவும் ராஜினாமா செய்தார். அப்போது அவர் பேசுகையில், காங்கிரசுக்கு புதிய
தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இதனால் அவருக்கு காங்கிரஸ் தலைவர் ஆகும் விருப்பம் இருந்திருக்கலாம் எனவும்
கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தியே தொடர்ந்து வருகிறார்.

இதனிடையே மக்களவை தொகுதியை இழந்தாலும், மாநிலங்களவை எம்பி பதவியை ஜோதிராதித்ய சிந்தியா கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால்
அவரின் பெயர் மாநிலங்களவை பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் அடுத்தடுத்து காங்கிரஸ் கட்சியில் முரண்பாடுகளை சந்தித்து வந்துள்ளார்.

இதுமட்டுமல்லாமல், கடந்த ஆண்டு இறுதியில் ஜோதிராதித்ய சிந்தியா தனது ட்விட்டர் பக்கத்தின் அடைமொழியை திருத்தினார். அதில், முன்னாள்
எம்.பி., முன்னாள் அமைச்சர் என்ற அடைமொழியை நீக்கிவிட்டு பொது ஊழியன், கிரிக்கெட் ஆர்வலர் என்று மட்டும் குறிப்பிட்டார். இது மேலும்
பிளவை உண்டுபண்ணும் வகையில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என முட்டுக்கட்டை போட்டார்
ஜோதிராதித்யா.

இந்தநிலையில்தான் அவர் காங்கிரஸில் இருந்து விலகி தனது ஆதரவாளர்களுடன் பாஜக பக்கம் சென்றிருக்கிறார். அவருடன் காங்கிரஸ்
எம்.எல்.ஏக்களாக இருந்த 22 பேரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல்
ஏற்பட்டுள்ளதோடு பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஜோதிராதித்ய சிந்தியாவின் மக்களவை தேர்தல் தோல்விக்கு பிறகே அவர் நினைத்த பதவிகள் அவருக்கு கிடைக்காமல் போனது எனவும் பதவி
ஆசையில் அவர் பாஜக பக்கம் சென்றிருப்பதாகவும் பதவி இல்லாமல் அவரால் இருக்க முடியாது எனவும் காங்கிரஸ் தலைவர்கள் பலர் விமர்சித்து
வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com