பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதில் என்ன சிக்கல்? – பொருளாதார நிபுணர் விளக்கம்

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதில் என்ன சிக்கல்? – பொருளாதார நிபுணர் விளக்கம்
பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதில் என்ன சிக்கல்? – பொருளாதார நிபுணர் விளக்கம்

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரும் பட்சத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு இரண்டுக்குமே பெரும் நிதிபற்றாக்குறை உருவாகும் என்பதால், அவர்கள் இருவருமே இதனை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர ஒத்துக்கொள்வது கடினம் என பொருளாதார நிபுணர் சோம.வள்ளியப்பன் விளக்கம் அளித்திருக்கிறார்.

பெட்ரோல், டீசல் – ஜிஎஸ்டி ஆடுபுலி ஆட்டம்:

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவந்தால் விலை குறையும் என்ற குரல்கள் ஒருபுறம் எழுந்துக்கொண்டிருக்கும் சூழலில் மத்திய, மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் தங்களின் ஆடுபுலி ஆட்டத்தை தொடங்கியுள்ளன. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர மத்திய அரசே முட்டுக்கட்டை போடுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்த சூழலில், மாநில அரசுகளும் தற்போது இதற்கு எதிராக குரல் எழுப்ப தொடங்கியுள்ளன.

இது தொடர்பான கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் சில நாட்களுக்கு முன்பு நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை ஜிஎஸ்டி வரிவிதிப்பு வளையத்திற்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு பின்பு பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் தற்போதைக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படாது என மத்திய நிதியமைச்சர் அறிவித்தார்.

பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை ஜிஎஸ்டியில் கொண்டு வரக்கூடாது என பெரும்பாலான மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் எரிபொருட்களை ஜிஎஸ்டி வரிவிதிப்பு வளையத்திற்குள் கொண்டு வரலாம் என்கிற திட்டம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டது.

தமிழ்நாடு ஏன் எதிர்க்கிறது?

தமிழகத்தில் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள், டாஸ்மாக் உள்ளிட்ட ஜிஎஸ்டி வரிக்கு உட்படாத விற்பனைகளின் மூலமே மாநில அரசின் வருவாயில் 60% கிடைக்கிறது. பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டிக்கு கீழ் கொண்டு வந்தால், தமிழகத்திற்கு ஆண்டுக்கு ஏறத்தாழ 20,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, மாநிலங்களிடம் எஞ்சியுள்ள ஒரு சில வரி விதிப்பு அதிகாரங்களையும் ஜிஎஸ்டி கவுன்சில் பறிக்கக் கூடாது எனவும் தமிழகத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் வரி வசூல் கடந்த ஆறு ஆண்டுகளில் 300% அதிகரித்துள்ளது. எரிபொருட்கள் வரி மூலம் 2015-இல் மத்திய அரசின் வருவாய் ரூ.74,158 கோடி; 2021இல் இது ரூ.2.95 லட்சம் கோடியாக உயர்ந்தது. தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99 விற்கப்படுகிறது. இதில் தமிழக அரசுக்கு வெறும் ரூ.20 மட்டுமே கிடைக்கிறது. இடையில் வரும் வருவாய் மத்திய அரசுக்கும், பெட்ரோல் டீலருக்கும் சென்றுவிடுகிறது. பெட்ரோல் டீசல் விற்பனை மூலம் தமிழகத்திற்கு  2017 - 2018 நிதியாண்டில் ரூ.25,373 கோடி, 2018 – 2019ல் ரூ.18,401 கோடி, 2019 – 2020ல் ரூ.18,589 கோடி, 2020 – 2021ல் ரூ.17,500 கோடி வரிவருவாய் கிடைத்துள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ''பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் 2018 ஆம் ஆண்டு கோரிக்கை விடுத்தார். 2018 ஆம் ஆண்டுக்கும் 2021 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் பெட்ரொல், டீசல், கச்சா எண்ணெய் விலையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 2001 ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 10 டாலராக இருந்த நிலையில் 2013 ஆம் ஆண்டு ஒரு பேரல் கச்சா எண்ணெய் 130 டாலராக விற்பனை செய்யப்பட்டது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் பெட்ரோல், டீசல் விலை கட்டுக்குள் வைக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படும் போது நேர்முக வரி 55 பைசாவாகவும், மறைமுக வரி 45 பைசாவாகவும் இருந்தது.

பன்னாட்டு நிறுவனங்களுக்காக நேர்முக வரியை பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு குறைந்து கொண்டது. பாஜக ஆட்சி பொறுப்பு ஏற்ற போது பெட்ரோல் வரி 10 ரூபாய் ஆகவும், டீசல் வரி 5 ரூபாயும் இருந்தது. தற்போது பெட்ரோல் வரி 32 ரூபாய் ஆகவும், டீசல் வரி 31 ரூபாய் ஆகவும் உள்ளது. மாநிலங்களில் இருந்து எடுக்கப்பட்ட செஸ் வரியை ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு பிரித்து கொடுக்காமல் வைத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வரலாம் என ஒன்றிய அரசு சொல்லவில்லை. கேரள உயர்நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டதை ஒன்றிய அரசு சுட்டி காட்டியுள்ளது. ஜி.எஸ்.டி வரி வரம்பு குறித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது. ஒன்றிய அரசின் மொத்த வருமானத்தில் 20 சதவீதம் பெட்ரோல், டீசல் வழியாக வருகிறது.

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர ஒன்றிய அரசும் விரும்பவில்லை, மாநில அரசுகளும் விரும்பவில்லை, பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரிகளை ஒன்றிய அரசு குறைத்து உள்ளதால் மக்கள் மீது இரு மடங்கு வரி உயர்த்தப்பட்டு உள்ளது. எந்தவொரு நாட்டிலும் இல்லாத அளவிற்கு நேர்முக வரியை 100 சதவீதம் ஒன்றிய அரசே எடுத்து கொள்கிறது. மாநிலங்களுக்கு பெட்ரொல், டீசல் மற்றும் ஆல்கஹால் ஆகிய இரு வரி வருவாய் மட்டுமே கிடைக்கிறது. மாநில வரி வருவாயை ஒன்றிய அரசு எடுத்து கொண்டால் மாநிலங்கள் எப்படி நிர்வாகத்தை நடத்த முடியும்? பெட்ரோல், டீசல் விலையில் ஒன்றிய அரசு செஸ் வரியை கைவிட்டால் தமிழக அரசு ஜி.எஸ்.டி க்குள் வர தயாராக உள்ளோம்'' என கூறினார்.

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் ஒப்புக்கொள்ளாது:

இந்த விவகாரம் குறித்து பேசிய பொருளாதார நிபுணர் சோம.வள்ளியப்பன், “ பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவேண்டும் என்பது மக்களின் தொடர் கோரிக்கையாக உள்ளது, ஆனால் இதன் விலை குறையாமல் இருக்க காரணம் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிதான். பெட்ரோல், டீசல் மூலமாக மத்திய, மாநில அரசுகளுக்கு பெரிய அளவில் வரிவருவாய் கிடைக்கிறது. இந்த வருவாயை இழக்க இரு அரசுகளுமே தயாராக இல்லை, சொல்லப்போனால் மத்திய அரசு தற்போது இதற்கான வரிகளை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

ஒருவேளை பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவந்தால் அதிகபட்சமான 28 சதவீதத்தை தவிர வேறு வரி எதனையும் விதிக்கமுடியாது, இவ்வாறு வரும் பட்சத்தில் பெட்ரோல், டீசலின் விலை குறையும். ஆனால், இரு அரசுகளுக்கும் பெரும் வருவாய் இழப்பு ஏற்படும், இந்த இழப்பினை ஈடு செய்ய இரு அரசுகளிடமுமே வேறு வழி இல்லை.

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவந்தால் அதிகபட்சமாக 28 சதவீதம் வரி விதிக்கலாம், அதற்கு அதிகமாக வேண்டுமானால் மத்திய அரசு சிறப்பு வரியினை விதிக்கலாம். அதாவது தற்போது சிகரெட் மற்றும் கார்கள் போன்ற பொருட்களுக்கு விதிப்பது போன்ற வரியை விதிக்கலாம், அப்படி வரி விதித்தால் ஜிஎஸ்டிக்குள் கொண்டுவந்தாலும் பெட்ரோல்,டீசல் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படாது.

ஒருபுறம் நிர்மலா சீதாராமன் மாநில அரசுகள் ஒத்துக்கொண்டால் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர நாங்கள் தயார் என்கிறார். ஆனால் மத்திய அரசு பெட்ரோல், டீசலுக்கான செஸ்வரியை கைவிட்டால் நாங்களும் ஜிஎஸ்டிக்கு ஒத்துக்கொள்கிறோம் என தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். எனவே பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர இரு அரசுகளுமே ஒப்புக்கொள்ளாது என்பதே நிதர்சனம். இதுகுறித்து  மத்திய, மாநில அரசுகள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொள்வது அரசியல்தான்” என்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com