பணியிடப் பாலியல் துன்புறுத்தல்| POSH Act என்றால் என்ன? அறிந்துகொள்ள வேண்டிய முழு விவரம்!
POSH Act 2013, பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் சட்டமாகும். புகார்களை 90 நாட்களில் விசாரித்து, 10 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். புகாரளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க, தீய உள்நோக்கம் நிரூபிக்கப்பட வேண்டும். ரகசியத்தன்மை மற்றும் நேர்மையான விசாரணை இச்சட்டத்தின் அடிப்படையாகும்.
2013-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பணியிடப் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் ((POSH Act)), இத்தகைய புகார்களைக் கையாள்வதற்கான பிரத்யேக நடைமுறைகளை வகுத்துள்ளது.
POSH Act என்றால் என்ன?
விரும்பத்தகாத உடல் ரீதியான அணுகுமுறை, பாலியல் ரீதியான சலுகைகளைக் கோருதல், பாலியல் தொனியிலான கருத்துகள், ஆபாசப் படங்களைக் காட்டுதல் மற்றும் பாலியல் ரீதியிலான விரும்பத்தகாத தொடுதல், உடல்மொழி, பேச்சு அல்லது சைகைகள் ஆகியவற்றை பாலியல் துன்புறுத்தலாக இச்சட்டம் வரையறுக்கிறது.
பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் புகார்களை விசாரிக்க அனைத்து நிறுவனங்களும் 'உள்ளக புகார் குழு' அமைக்க வேண்டும். 10க்கும் குறைவான பணியாளர்கள் உள்ள நிறுவனங்களில் எழும் புகார்களையும் உள்ளூர் அளவிலான குழு விசாரிக்கும்.
10க்கு மேற்பட்டோர் பணியாற்றும் நிறுவனங்களில் முதலாளி மீதே புகார் எழுந்தால் அதையும் உள்ளூர் குழுவே விசாரிக்கும். சம்பவம் நடந்த மூன்று மாதங்களுக்குள் புகாரை எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும். தகுந்த காரணங்களுடன் இந்த அவகாசத்தை நீட்டிக்கக் குழுவிற்கு அதிகாரம் உண்டு.
அதனைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் தங்களது தரப்பு விளக்கத்தை எடுத்துரைக்க வாய்ப்பளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்.
காலக்கெடு என்ன?
விசாரணையை 90 நாட்களுக்குள் முடித்து அதன்பின் 10 நாட்களுக்குள் விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். விசாரணை அறிக்கையில் உள்ள பரிந்துரைகளின் மீது 60 நாட்களுக்குள் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சட்டத்தின் 16-வது பிரிவின்படி புகாரின் உள்ளடக்கம், புகாரளித்த பெண், குற்றம்சாட்டப்பட்டவர் மற்றும் சாட்சிகளின் அடையாளங்கள், விசாரணை நடவடிக்கைகள்,
ரகசியத்தன்மை குறித்த விதி என்ன?
பரிந்துரைகள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பொதுவெளியிலோ, பத்திரிகைகளிலோ அல்லது ஊடகங்களிலோ வெளியிடவோ தெரிவிக்கவோ கூடாது. எனினும், புகாரளித்த பெண் மற்றும் சாட்சிகளின் அடையாளங்களை வெளிப்படுத்தாத வகையில், இவ்வழக்கில் கிடைத்த நீதி குறித்த தகவல்களை மட்டும் வெளியிட சட்டம் அனுமதிக்கிறது.
புகாரை நிரூபிக்க முடியவில்லை அல்லது போதிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்க முடியவில்லை என்பதற்காகவே, புகாரளித்தவர் மீது தானாக நடவடிக்கை எடுக்க முடியாது என இச்சட்டத்தின் 14-வது பிரிவு தெளிவாகக் கூறுகிறது. தீய உள்நோக்கத்துடன் புகாரளிக்கப்பட்டது என்பது விசாரணையின் மூலம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.
பணியிடப் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தில் புகார் அளிக்கப்பட்டவுடன், அது முறையான சட்ட நடைமுறைகளைத் தொடங்கி வைக்கிறது. இரு தரப்பு விசாரணை, வரையறுக்கப்பட்ட காலக்கெடு மற்றும் ரகசியத்தன்மை ஆகியவற்றை இச்சட்டம் உறுதி செய்கிறது. இந்தச் சட்ட விதிகளைப் புரிந்துகொள்வது நிறுவனங்களுக்கும் பணியாளர்களுக்கும் மட்டுமல்ல, அனைவருக்குமே மிகவும் அவசியமானதாகும்.

