சந்திரசேகர் ராவின் ‘மாஸ்டர் பிளான்’ - காங்கிரஸுக்கு பெரிய வலை..?

சந்திரசேகர் ராவின் ‘மாஸ்டர் பிளான்’ - காங்கிரஸுக்கு பெரிய வலை..?
சந்திரசேகர் ராவின் ‘மாஸ்டர் பிளான்’ - காங்கிரஸுக்கு பெரிய வலை..?

ஒருபுறம் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு அனல் பறக்க நடைபெற்று வர, மறுபுறம் பல கட்சி தலைவர்களை நோக்கி தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்திப்பு நடத்தி வருகிறார். தேர்தலுக்கு முன்பாக மூன்றாவது அணி அமைக்க மேற்கொண்ட அவரது முயற்சிகள் தோல்வி அடைந்ததுடன், பாஜகவின் ‘பி’ டீம் என்ற குற்றச்சாட்டுக்கும் அவர் ஆளானார். அப்படி இருந்தும், தற்போது மீண்டும் சந்திரசேகர் ராவ் பல்வேறு கட்சி தலைவர்களை சந்திக்க படையெடுத்துள்ளார். எதற்காக இந்தச் சந்திப்பு?

பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் ஆதரவு கிடையாது

மாயாவதி, மம்தா பானர்ஜி, பினராயி விஜயன், ஸ்டாலின், குமாரசாமி.. இவர்கள்தான் சந்திரசேகர் சந்திக்கும் பட்டியலிலுள்ள பெயர்கள். இவர்கள் அனைவரும் பாஜக எதிர்ப்பு மனநிலையில் உள்ளவர்கள். பாஜக ஆதரவாக நிச்சயம் செல்லமாட்டார்கள் என்றே சொல்லலாம். ஸ்டாலின், குமாரசாமி இருவரும் காங்கிரஸ் கூட்டணியிலே உள்ளனர். பினராயி, மாயாவதி, மம்தா மூவரும் அப்படி இல்லை; பாஜகவைக் கடுமையாக எதிர்ப்பவர்கள். 

ஆனால் காங்கிரஸ் ஆதரவாக மாறுவார்களா என்றால் இன்னும் அதில் தெளிவில்லை. அதிகபட்சம் தேர்தலுக்குப் பின்னர், காங்கிரசுக்கு ஆதராக இருப்பார்கள் என்பதே இன்றுவரை இருக்கும் கணிப்பு. ஒரே சிக்கல் பிரதமர் யார் என்பது மட்டும்தான்.

சந்திரசேகர் ராவ் சந்திப்புக்கு அடித்தளம் எது?

சந்திரசேகர் ராவ் ஏன் இவர்களை சென்று பார்க்க வேண்டும். ஸ்டாலின் நிச்சயம் காங்கிரஸ் கட்சிக்குதான் ஆதரவு தருவார். பாஜக பக்கம் நிச்சயம் செல்லமாட்டேன் என்பதை அவரே பலமுறை சொல்லி இருக்கிறார். அப்படியென்றால் இந்தச் சந்திப்பின் முக்கியத்துவம்தான் என்ன? சந்திரசேகர் ராவின் முயற்சிகளுக்கு அர்த்தம்தான் என்ன?. பாஜகவின் ‘பி’ டீமாக அவர் செயல்படுகிறார் என்ற பழி அவர் மீது இன்னும் நேரடியாக வீசப்படவில்லை. 

இந்த இடத்தில்தான் முக்கியமான ஒரு விஷயத்தை பார்க்க வேண்டியுள்ளது. மத்தியில் பாஜக, காங்கிரஸ் இரு கூட்டணிகளுக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்றே கருத்துக் கணிப்புகள் கூறி வருகின்றன. அப்படியொரு சூழல் அமையுமானால் அதனைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஒவ்வொரு தலைவரும் முயற்சி செய்கிறார்கள். அதனால்தான் துணிச்சலாக தனித்து போட்டியிடுகிறார்கள். அகிலேஷ் - மாயாவதி கூட்டணி அதற்கு ஒரு உதாரணம். 

சந்திரசேகர் ராவ் போடும் கணக்குதான் என்ன?

மாநில அரசியல் இருந்து தேசிய அரசியலை நோக்கி சந்திரசேகர் ராவ் பயணிப்பதற்கான அடித்தளம் போடுவதாகவே அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. தெலங்கானா மாநில அரசியலுக்கு தன்னுடைய மகனை அவர் கிட்டதட்ட தயார்படுத்திவிட்டார். தேசிய அரசியலுக்கு தன்னுடைய மகளும் எம்.பியுமான கவிதாவை தயார்படுத்தியுள்ளார். தேசிய அரசியலில் முக்கியமான தலைவர் என்ற இடத்தை நோக்கி நகருவதற்காக முயற்சிக்கிறார் சந்திரசேகர் ராவ் எனக் கூறப்படுகிறது. 

எப்படியும் ஸ்டாலின், குமாரசாமி உள்ளிட்டோர் தனித்தனியாக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பார்கள் என்பது சந்திரசேகர் ராவுக்கு தெரியும். அதனால், பாஜக எதிர்ப்பு மனநிலையில் உள்ளவர்களை ஒன்று திரட்டி அதன் மூலம் தனக்கான முக்கியத்துவத்தை நிரூபிக்க நினைக்கிறார். அதற்கு நிபந்தனையாக, புதிதாக அமைய உள்ள ஆட்சியில் முக்கியவத்துவம் வாய்ந்த பொறுப்பினை அவர் எதிர்பார்க்க வாய்ப்புள்ளது. 

அடுத்த பிரதமர் யார்?

ஒருவேளை காங்கிரஸ், பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை எனில் மாயாவதி அல்லது மம்தாவை துணை பிரதமராக ஆக்கும் திட்டத்தை வைத்திருப்பதாக தெரிகிறது. மேலும், அவர் ஒன்று திரட்டும் கட்சிகளுக்கு கேபினட்டில் அதிக முக்கியத்துவம் கிடைக்க செய்யவும் நினைக்கிறார் என்றே சொல்லப்படுகிறது. 

சந்திரசேகர் ராவின் இந்த முயற்சியை பார்க்கையில் அவர் காங்கிரஸ் கட்சியில் பி டீம் ஆகவே செயல்படுகிறார் என்கிறார்கள் சிலர். அதாவது அதற்கான வாய்ப்பு மட்டுமே சந்திரசேகர் ராவுக்கு உள்ளது என்பது நிதர்சனமான உண்மை. ஆனால், அவரது முயற்சிக்குப் பலன் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com